இன்றைய பாராளுமன்ற விவாதம் அர்த்தபுஷ்டியுள்ளதாக அமையட்டும்!

10 Aug, 2023 | 12:52 PM
image

(நிவேதா அரிச்சந்திரன்)

இந்திய வம்சாவளிகளான மலையக மக்கள் இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள முக்கியமான ஒரு காலகட்டத்தில் இந்த சமூகம் தொடர்பான பிரச்சினைகளை பாராளுமன்றின் ஊடாக வெளிக்கொணர்வதற்கு அரிய சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது. 

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெறும் முழுநாள் விவாதம் அர்த்தபுஷ்டியுள்ளதாக அமைய வேண்டுமென்பதே ஒட்டுமொத்த மலையகம் சார்ந்த தமிழர்களதும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

200 வருடங்களாக முகவரியற்ற ஒரு சமூகமாக இலங்கை அரசாங்கத்தினால் ஓரங்கட்டப்பட்டுள்ள இந்த மக்களின் அவலங்களை சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் எடுத்துச்சென்று இவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்த சமூகத்தை பிரதிபலித்து பாராளுமன்றம் சென்றுள்ள அரசியல் தலைவர்களது தலையாய கடமையாகும். 

அதற்கிணங்க, தற்போது பாராளுமன்றின் ஊடாக பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை மலையக பிரதிநிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்போகிறார்கள் என்பதிலேயே மலையகத்தின் தலையெழுத்து அமைந்துள்ளது. 

அரசியல் புகழாரம் / வரலாறுகள் வேண்டாம்

மலையகத்தை பிரதிபலித்து பாராளுமன்றம் சென்றவர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், வே.இராதாகிருஸ்ணன், ப.திகாம்பரம், எம்.உதயகுமார், வேலுகுமார் ஆகியோரும் பதுளை மாவட்ட எம்.பிக்களான இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோரும் நாளை உரை நிகழ்த்தவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக சிங்கள பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த சமூகத்துக்காக குரல் கொடுக்குமாறு இவர்களது சார்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மலையக சமூகத்துக்காக அரசியல் ரீதியில் குரல் கொடுக்க இந்த 9 எம்.பிக்களின் இருப்பிடம் போதுமானதாக உள்ளபோதிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் போதாது என்ற கூற்றை இவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

இந்த நிலையில், இன்று (10) இடம்பெறும் பாராளுமன்ற விவாதமானது மலையக மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் வெளிக்கொணர்வதற்கு இவர்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படவேண்டிய ஒன்று. 

பாராளுமன்ற உரையின்போது கடந்த கால அரசியல் சாதனைகளை பட்டியலிடுவதையும், குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதையும் விடுத்து எதற்காக பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டதோ அதற்காக மாத்திரம் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் மலையக பிரதிநிதிகள் தெளிவாக இருக்க வேண்டும். 

அதேவேளை மலையக மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் அடுக்கிக்கொண்டே போவதால் காரியம் கைக்கூடுமா என்பதையும் இவர்கள் சிந்திக்க வேண்டும். காரணம், இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளே ஏராளம் கிடப்பில் இருக்கின்ற நிலையில், முகவரியே இல்லாத ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

அதேநேரம் இலங்கை அரசாங்கமே இந்த சமூகம் குறித்து பாராளுமன்றில் பேசுவதற்கு கொடுத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இயன்றவரை இவர்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மலையக பிரதிநிதிகள் ஓரணியில் இணைய கிடைத்துள்ள சிறந்த தருணமும் இதுதான். 

இன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பாராளுமன்ற விவாதத்துக்கான பிரேரணையை முன்வைக்க, கட்சியின் பிரதித்தலைவர் வே.இராதாகிருஸ்ணன் அதனை ஆமோதிப்பார். அதைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்கள் உரையாற்றுவர். கட்சி ரீதியாக முன்வைக்கப்படவுள்ள இந்த பிரேரணை அரசியலுக்கு அப்பால் சமூக உணர்வோடு முன்வைக்கப்பட வேண்டும். 

பாராளுமன்றில் பிரேரணையை கொண்டுவந்தார்கள் என்ற பதிவை விட 200 வருடங்களாக தீர்க்கப்படாமலிருந்த பிரச்சினைகளின் பட்டியலில், அடிப்படை பிரச்சினையையேனும் தீர்த்துவைத்த வரலாற்று சாதனையை நிகழ்த்துங்கள் என்பதே மலையக புத்திஜீவிகளின் கோரிக்கையாக உள்ளது.

அடிப்படை பிரச்சினைக்குரிய தீர்வுக்காக குரல் கொடுங்கள்

அரசாங்கத்தினால் குடியுரிமை வழங்கப்பட்ட போதிலும் இன்னமும் முழுமையாக இந்த மக்கள் உள்வாங்கப்படவில்லை என்பதற்கு இவர்களது வாழ்க்கைத்தரம் மிகச்சிறந்த உதாரணம். 200 வருடங்களாக எவ்வித முன்னேற்றமுமின்றி இலங்கை அரசாங்கத்தினால் ஓரங்கட்டப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளான நில உரிமை, வீட்டுரிமை மற்றும் வேதன அதிகரிப்பு ஆகியவற்றில் கூடிய கரிசனை காட்டி அரசியல் பேதங்களுக்கு அப்பால் நின்று மலையக பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். 

இவற்றை விடுத்து கடந்த கால அரசியல் சாணக்கியத்தை எடுத்துக்காட்டும் விதமாக இந்த விவாதம் அமையுமானால், இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் மலையக சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

மலையக கல்விமான்களின் கோரிக்கை

மலையக சமூகம் எனும்போது குறிப்பாக பெருந்தோட்ட மக்களே இன்றையளவிலும் குடியிருப்பதற்கேற்ற இருப்பிடமின்றி பெருந்தோட்ட நிறுவனங்களின் இயற்றப்படாத சட்ட வரையறைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

கொவிட் பரவலுக்கு பின்னர் இந்த சமூகத்தின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டு பட்டினி வீதமும் அதிகரித்துள்ளது. போதிய தொழில்வாய்ப்பு இன்மையால் அதிக வறுமைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். வாழ்க்கைச் செலவுகளுக்கேற்ற போதிய ஊதியம் இன்மையால் பெரும்பாலான குடும்பங்கள் பெருந்தோட்டங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களில் வேலைகளுக்கு ஆட்களில்லை. வேலைகளுக்கு செல்லாத காரணத்தால் லயன் குடியிருப்புகளை தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். போதாதகுறைக்கு அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ கம்பனி போன்றவற்றின் கீழ் பணிபுரியும் 30 பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சுமார் 700 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி என்பன போதிய ஆதாரங்களின்றி கிடப்பிலுள்ளன.

எனவே, இதுபோன்ற சிக்கல்களிலிருந்து இந்த சமூகம் வெளியேற வேண்டுமானால் பெருந்தோட்ட நிர்வாக முறைமையிலிருந்து பொதுநிர்வாக கட்டமைப்புக்குள் இந்த சமூகம் உள்வாங்கப்படுவதற்குரிய ஏற்பாடுகள் இந்த 200ஆவது வருட நினைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

இந்த சமூகம் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது ஏனைய சமூகத்தினரை போன்று முகவரி கொண்ட சமூகமாக அடையாளப்படுத்தப்படுவார்கள். பெருந்தோட்டங்கள் கிராமங்களாக மாற்றப்படும்போது நிச்சயம் இந்த சமூகம் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும் என்பதே எமது கருத்துக்கணிப்பாக அமைந்துள்ளது. ஆனாலும் துரிதகதியில் நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைப்பது என்பதும் அரிதான விடயமல்ல என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் இதற்கென நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கேற்ப நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை மலையக பிரதிநிதிகள் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களிடமிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் அரசாங்கம் உறுதியளித்ததை போன்று இந்த 200ஆவது வருட நிறைவில் 10 பேர்ச்சஸ் என்ற நில உரிமையை பாரபட்சமின்றி துரிதகதியில் பெற்றுக்கொடுக்குமானால் அது இந்த சமூகத்தை பொருத்தமட்டில் மிகப்பெரிய ஆறுதலை பெற்றுக்கொடுக்கும்.

மலையக இளைஞர், யுவதிகளை பொருத்தமட்டில் கல்வி, அரசியல், தொழில்துறை என சகலவற்றிலும் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், முகவரியின்மையே இவர்களுக்குரிய பெரும் சவாலாக உள்ளது. ஆனாலும் கூட மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம், தாதியர் பயிற்சி கல்லூரி என கல்வித்துறையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் யுத்தமின்றி சத்தமின்றி ஓரங்கட்டப்பட்டுள்ள ஒரு சமூகம் 200 வருடங்களாக முகவரியின்றி வாழ்ந்துவருகிறது. எனவே, இந்த சமூகத்தின் அவலங்களை அடுக்கிக்கொண்டே செல்வதை விடுத்து மாறாக இந்த சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளான நில உரிமை மற்றும் வீட்டுரிமை என்பவற்றை இந்த 200ஆவது ஆண்டின் நினைவாக துரித கதியில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் பெற்றுக்கொடுப்பதை மலையக பிரதிநிதிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் பாராளுமன்றில் நடைபெறும் மலையகம் தொடர்பான முழுநாள் விவாதம் ஒட்டுமொத்த மலையகத்தினதும் தலையெழுத்தை மாற்றும்படி அமைய வேண்டுமென்பதே மலையகத்தை சார்ந்த ஒட்டுமொத்த தமிழர்களினதும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. மலையக பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ளப்போகிறார்கள் என்பதிலேயே மலையகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறைவேறாமல் போன புத்தாண்டு கனவு : ...

2024-04-11 17:06:23
news-image

நாட்டில் பெண்களை அச்சுறுத்தும் 'மாதவிடாய் வறுமை'...

2024-04-11 16:33:05
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் சிக்கிய அல்ஸிபா மருத்துவனையிலிருந்து...

2024-04-10 16:33:44
news-image

சர்வதேச கடன் மறுசீரமைப்பில் அடுத்து நடக்கப்போவது...

2024-04-10 14:29:48
news-image

சுதந்திரம் வழங்கிய சிங்களக் குடியேற்றங்கள்

2024-04-10 14:15:40
news-image

வியட்நாமின் ‘எரியுலை’

2024-04-10 14:01:33
news-image

பாமர மக்களுக்கு, சட்ட அறிவை ஏற்படுத்துவதன்...

2024-04-09 12:44:47
news-image

வடக்கில் நிலவும் அமைதி, வழமைநிலையின் அடிப்புறத்தில்...

2024-04-09 12:45:13
news-image

3 ஆவது தடவையாகவும் பாரதப் பிரதமராக...

2024-04-09 12:23:45
news-image

முஸ்லிம் எம்.பிக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

2024-04-08 19:00:36
news-image

டமஸ்கஸ் தாக்குதல் : திறக்கிறதா மத்திய...

2024-04-08 18:50:01
news-image

அரபுலகின் யதார்த்தம்

2024-04-08 17:52:50