நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் 7 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் சடலங்களை பாதுகாப்பான இடத்தில் அடையாளமிட்டு புதைக்கப்பட வேண்டும் எனவும் சடலங்கள் புதைக்கப்படும் இடத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் நுவரெலியா மாவட்ட நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க பொலிசாருக்கு விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை சட்ட வைத்தியர் ஒருவரின் ஊடாக மேற்கொண்ட பின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதவான் இச் சம்பவம் தொடர்பான அறிக்கை மற்றும் சட்டவைத்தியரின் அறிக்கையை சம்பவம் தொடர்பான வழக்கில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு செவ்வாய்க்கிழமை (8)வருகை தந்த மரண விசாரணை நடத்திய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (8) பிற்பகல் 3.30 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா- கண்டி பிரதான வீதியில் நுவரெலியா நுழைவாயில் பகுதியான டொப்பாஸ் கிராமத்தில் உள்ளூர் துப்பாக்கி வெடித்து கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் (07) திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.
இச் சம்பவத்தில் நுவரெலியா டொப்பாஸ் கிராமத்தில் இலக்கம் (05) வீட்டில் வசித்து வந்த எண்டன் தாஸ் (வயது 31) மற்றும் நாதன் ரீட்டா (வயது 31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணையை நுவரெலியா பொலிஸ் இன்ஸ்பெக்டர் பெத்தும் அஞ்சன தலைமையில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்த சம்பவத்தி்ல் உயிரிழந்த எண்டன் தாஸ் என்பவரின் தாய் மீனம்மாள் (வயது 54) இவரிடம் விசாரணை செய்த பொலிஸார் அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
இதில் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் எனது மகனும் மருமகளும் வசித்து வந்தனர். எனது மகன் தாஸ் தின கூலிக்கு மரக்கறி தோட்டத்தில் தொழில் செய்கிறார்.
எனது மருமகள் ரீட்டா வீட்டு மனைவியாக இருந்து வருகிறார். நான் கொழும்பில் வீடொன்றில் பணியாளராக தொழில் செய்து வருகிறேன் என தெரிவித்த தாய் மகனின் வீட்டுக்கு கடந்த (05.08.2023) அன்று கொழும்பில் இருந்து வருகை தந்தேன் எனவும் தெரிவித்தார்.
அதேநேரம் சம்பவ தினமான (07.08.2023) இரவு நான் வீட்டில் தனியறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். மகனும் மருமளும் வீட்டு முன் அறையில் இருந்தார்கள். இவர்கள் ஏதோ கதைத்து கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள் நேரம் செல்ல இவர்களிடத்தில் சத்தம் அதிகமானது அதை இவர்கள் சண்டையிடுகின்றார்களோ என உணர்ந்தேன்.
இரவு 10.30 மணியளவில் வெடி சத்தம் கேட்டது ஓடிப்போய் பார்த்தேன் எனது மருமகள் தரையில் தலை தொங்கிய நிலையில் கிடந்தார் அவரின் வயிற்று பகுதியிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியாகியிருந்தது.
அப்போது மகன் சாரத்தை மடித்து கட்டிக் கொண்டு அதிர்ச்சிகரமான நிலையில் தரையில் அமர்ந்திருந்தார். என்ன வெடித்தது என்ன நடந்தது என கேட்டேன் அப்பொழுது இவளை மின்சாரம் தாக்கிவிட்டது யாரையாவது கூப்பிடுங்கள் வைத்தியசாலைக்கு போகவேண்டும் என மகன் கூறினார்.
உடனே நான் வீட்டிலிருந்து வெளியில் வந்து அயலவர்களை அழைத்தேன். மீண்டும் வெடி சத்தம் கேட்டது ஒடி பார்த்தேன் மகன் தலையில் இருந்து அதிக இரத்தம் வந்த நிலையில் தரையில் கிடந்தான். அருகில் துப்பாக்கியும் இரத்தத்தில் கிடந்தது பின் பதற்றமாகிய நான் இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் உதவியுடன் 119க்கு அழைப்பு விடுத்த நிலையில் நுவரெலியா பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் என வாக்குமூலத்தில் தாய் தெரிவித்தார்.
அதேநேரம் தாயின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு எண்டன் தாஸ்க்கு உள்ளூர் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? மகனுக்கும் மருமகளுக்கும் வாய்தர்க்கம் ஏன் ஏற்பட்டது? துப்பாக்கி எவ்வாறு வெடித்தது? என்ற மூன்று கேள்விகளுக்கு விடை காணும் வகையில் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த உயிரிழப்பு சம்பவம் நுவரெலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க மற்றும் சட்ட வைத்தியர் எம்.எம்.ஏ. சீ. குணத்திலக்க ஆகியோர் விசாரணைகளை செய்த பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு அமைய சடலங்கள் மீட்க்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
அத்துடன் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை சட்ட வைத்தியர் எம்.எம்.ஏ. சீ.குணத்திலக்க முன்னிலையில் புதன்கிழமை (9) நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் நடைபெற்று உறவினர்களிடம் மாலை சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM