93 ஆவது அகவையில் வீரகேசரி ! நூற்றாண்டை நோக்கி வீறுநடை...

06 Aug, 2023 | 07:43 AM
image

(மா. உஷாநந்தினி)

பொதுநோக்குடைய  இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவி. அதன் மூலமே இன்றைய சமுதாயம் அதன் வழிகளை, வரையறுக்கப்பட்ட வளரும் மனித நலன் என்னும் குறிக்கோளை நோக்கி முன்னேறி வருகிறது என்ற மேல்நாட்டு அறிஞர் ஹெரால்ட் பெஞ்ஜமின் வாக்கு பொய்யில்லை. 

இதழியல் கோட்பாட்டின் எல்லைக்குள் நீதியான நடுநிலை, நேர்மை, நெறிமுறை, சுயகட்டுப்பாட்டோடு பேனை முனையிலிருந்து புறப்படும் ஒரு சொட்டு மை போதும், ஒரு தனிநபரின், ஒரு சமுதாயத்தின், ஒரு நாட்டின், சர்வதேசங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க. இதில் ஆழ அகலம் கண்டு, கடந்த 92 ஆண்டுகளாக அழியா சுவடுகளை பதித்து, 93ஆவது அகவையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறது, வீரகேசரி பாரம்பரிய பத்திரிகை ஊடகம். 

இதழியல் கொள்கைகளோடு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக உதித்து, கொண்ட கொள்கைகளில் இருந்து சற்றும் பிறழாமல், இன்றைக்கு உலகெங்கும் தமிழை நேசிப்பவர்களின், தமிழை உணர்பவர்களின் குரலாக வீரகேசரி வலம் வந்துகொண்டிருக்கிறது. 

இலங்கையின் முதற்தர தேசிய தமிழ் பத்திரிகை என்கிற  அடையாளம் பெறும் வீரகேசரி 'தரமான வழியில் தெளிவான தகவல்' என்ற மகுட வாசகத்தை தாங்கியவாறு நூற்றாண்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. 

இலங்கையில் மட்டுமன்றி, அண்டை நாடான இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டிலும், மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, கனடா, சுவிஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒரு குடையின் கீழ் தேசம், இனம், மொழி, மத, சாதி பேதமின்றி உணர்வுகளால் ஒன்றிணைக்கும் ஒரே பத்திரிகை வீரகேசரி என்றால் அது மிகைப்படுத்தல் அல்ல. 

உலகின் கடைக்கோடி மூலையில் நடக்கும் எவ்விடயமானாலும், அது, வீரகேசரியின் கூர்ந்த பார்வையிலிருந்தும் தப்பாது என்றளவில் வியாப்திகரமான செய்திச் சேவையினை உள்ளூர் மற்றும் வெளிநாடுகள் சார்ந்து வழங்கும் இதன் ஊடகப் பணிகள் அளப்பரியவை. 

உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களுக்கு பாரபட்சமற்ற வகையில் குரல் கொடுப்பதும், அதன் தாக்கம் எல்லைகள் தாண்டி எவ்வகையிலேனும் எழுச்சியை - கிளர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டேயிருப்பதும் காத்திரமான ஒரு  செய்தித்தாளின் தினசரிப் போக்காக இருக்க வேண்டும். அதற்கு வீரகேசரி ஆகச் சிறந்த உதாரணம்தான். 

இன ரீதியான உள்நாட்டுப் பிரிவினைகள், பொருளாதார சிக்கல்கள், உள்ளூர் அரசியல் குழப்பங்கள், சதித்திட்டங்கள், மக்களின் கோரிக்கைகள், மனித சமூக சீர்கேடுகள், வன்முறைகள், நெடுங்கால யுத்தம் விட்டுச் சென்ற கிளைப் பிரச்சினைகள் என பலவற்றை சுட்டிக்காட்டி, சட்டத்தின் பிரகாரம் உடனடி தீர்வுகளை எட்டுவதற்கு ஆரோக்கியமான முறையில் அழுத்தத்தை பிரயோகித்த பதிவுகளும் வீரகேசரி பத்திரிகை மற்றும் அதை தாங்கும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட் நிறுவனத்துக்கு உண்டு. 

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பத்திரிகையாகவும் அப்பத்திரிகை விருட்சத்தின் விழுதுகளான இணையதளம், நவீன டிஜிட்டல் தளங்களின் வாயிலாக நேரடி சமூகத் தொடர்பாடல் வசதிகளோடு தமிழறிந்த மக்களை நெருங்கியுள்ள ஓர் இலத்திரனியல் ஊடகமாகவும் இன்று பரிணமித்திருக்கும் வீரகேசரி, முதல் முதலாக இதழ் திறந்த நாளில், அவனுக்கு இத்தனை ஒப்பனைகள் கிடையாது.

கறுப்பு வெள்ளை (மஞ்சள் பூத்த மங்கிய நிறத்தாள்) காகிதம்,  ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோர்க்கப்பட்டு சேர்த்த வார்த்தைகள், வார்த்தைகள் சேர்க்கப்பட்ட வசனங்கள், கைகளாலும் கால்களாலும் கடினப்பட்டு அசைத்து மிதித்து இயக்கும் அச்சு இயந்திரங்கள், குறுகலான இடம், அதற்குள் மிகச் சிறு எண்ணிக்கையில் ஒரு ஆசிரியர் குழாம்.... இப்படித்தான் வீரகேசரியின் பயணம் தொடங்கியது. 

தோற்றம்

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அன்றைய தமிழ் பேசும் மக்கள் நாட்டின் நிலைமையோ உலக விடயங்களோ அறியாதவர்களாக, வெளியுலகம் தெரியாதவர்களாக வாழ்ந்ததே அவர்களின் மிகப் பெரும் குறையாக இருந்தது.

1832இல் வெளியான கொழும்பு ஜேர்னல் இலங்கையின் முதல் ஆங்கிலப் பத்திரிகையாகவும், 1860ஆம் ஆண்டு காலியில் வெளியான லங்கா லோகய முதல் சிங்கள பத்திரிகையாகவும், 1841இல் யாழ்ப்பாணத்தில் வெளியான உதய தாரகை முதல் தமிழ் பத்திரிகையாகவும் அறிமுகமாயின. 

இவற்றில் உதய தாரகை தமிழ் வெளியீடாக இருந்தபோதும், அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு மட்டுமேயான பத்திரிகையாகவே இருந்தது. 

அதுபோன்ற சந்தர்ப்பத்தில்தான் நாட்டின் அனைத்து தமிழ் மக்களும் வாசித்து பயனடைய ஒரு பொதுவான தமிழ் பத்திரிகை தேவை என்பதை இலங்கைவாழ் இந்திய தமிழரான பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் உணர்ந்தார். 

நாட்டு நடப்புகள், வெளிநாடுகளோடு தொடர்புடைய உள்விவகாரங்கள், நிலைவரங்களை அறியாதிருந்த மக்களுக்கு பொதுச் சிந்தனைகளை பாய்ச்ச நினைத்தார். 

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்திருந்தபோது அவரது வருகையோ, அவர் மக்களுக்காக பகர்ந்த கருத்துக்களோ தமிழ் மக்களை  சரிவர போய்ச்சேரவில்லை. அதேபோல இன்னும் சில வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களின் இலங்கை வருகை, நாடு சார்ந்து அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள், பகிரும் கருத்துக்கள் உரியவாறு மக்களின் கவனத்துக்கு எட்டாத நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் தகவல்களை பரப்பும் தமிழ் செய்தித்தாளொன்று அவசியமாக  பார்க்கப்பட்டது. 

அது மட்டுமன்றி, சுப்பிரமணியம் செட்டியார் இந்திய தமிழர் என்பதால் மலையக மக்கள் மீது சற்றே அதிக கரிசனை கொண்டு, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்தும் சிந்தித்து அந்த மக்களின் பிரச்சினைகள், தேவைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் ஒரு தமிழ் பத்திரிகையை உருவாக்க நினைத்தார். 

அவரது முயற்சியின் பயனாக, வீரகேசரி என்கிற நாமம் சூட்டப்பட்டு, அதற்கான இலட்சிணை வடிவமைக்கப்பட்டது. 

கேசரி என்றால் சிங்கம். வீரம் கொண்டு வாளேந்திய இரண்டு சிங்கங்கள் இலட்சிணையில் தீட்டப்பட்டன. பத்திரிகையின் துணிச்சலான பிரவேசத்தை எடுத்துக்காட்டும் விதமாக சிங்க இலட்சிணை தாங்கி, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி முதலாவது வீரகேசரி  நாளிதழ் வெளியானது. 8 பக்கங்களை கொண்ட வீரகேசரியின் அப்போதைய விலை வெறும் 5 சதம் மட்டுமே. 

அப்போது கொழும்பு - மருதானை வீரகேசரி காரியாலயத்தின் அமைவிடமாக இருந்தது. அதையடுத்து, கொட்டாஞ்சேனைக்கு மாற்றப்பட்டு, பின்னர் தற்போதைய  கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்துக்கு இடம்மாற்றப்பட்டது. 

வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் 

வீரகேசரி அறிமுகமான பூர்வாங்க காலப்பகுதியில் வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை பத்திரிகை செய்திகள், ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள், ஆக்கங்கள், பத்திகள் என பல வடிவங்களில் பதிவு செய்துள்ளன. 

'சங்கநாதத்துடன் இலங்கை சுதந்தரோதயம்' (1948.2.4)

 'இந்தியா பூரண சுதந்திர குடியரசாகிறது' (1950.1.26)

'நீச்சல் வீரர் நவரத்தினசாமி வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து தமிழகம் கோடிக்கரையை அடைந்து சாதனை' (1954) 

இவற்றோடு, தனிச்சிங்கள சட்டம் (1956), பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), இன வன்முறை சம்பவங்கள் (1958), முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை - வழக்கு (1959), தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு சத்தியாக்கிரகம் (1961), சீன கம்யூனிஸ்ட் கட்சி யாழ். மே தின ஊர்வலம் மீது பொலிஸார் தாக்குதல், அமெரிக்க தூதுவர் மீது முட்டை வீச்சு (1965), ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம் மற்றும் ஸ்ரீ போராட்டம் (1971), யாழ். நூலக எரிப்பு (1981) முதலானவற்றை பதிவிட்டுள்ளன. 

மேலும், பரிசுத்த பாப்பரசர் சின்னப்பர் மறைவு, தந்தை செல்வா மறைவு, சீன மக்கள் குடியரசு தலைவர் மாவோ சே துங் மறைவு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான விடயம், இந்திய அரசியல் தலைவர் காமராஜர் மறைவு, கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் என இந்தியா அங்கீகரித்தமை, மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இலங்கை விஜயம் போன்றனவும் அடங்குகின்றன.

பின்வந்த நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன ரீதியான போராட்டம் முடிவுற்றமை, அரசியல் கட்சிகளிடையே முறுகல் நிலை, குருந்தூர் மலை விவகாரம், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் -  நாடு முடக்கப்பட்டமை, அரசியல் கட்சிகளிடையே மோதல், பொருளாதார நெருக்கடி, அரகலய மக்கள் போராட்டம்.... இதுபோன்ற காத்திரமான செய்திகளாயினும்,  நியாயம் தவறாமல் அவற்றில் நடுநிலை பார்வையை செலுத்தி பிரசுரிக்கும் நிதானத்தையும் வீரகேசரி கடைபிடித்து வருகிறது. 

மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக்கொண்டு நிலைமையை மிகைப்படுத்தி விபரிக்காமல், செய்தியோடு தொடர்புபட்ட பலதரப்பினரின் கருத்துக்களையும் உட்புகுத்தி,  ஆரோக்கியமான சூழலையும் தீர்வுக்கான பாதையையும் வகுக்க சரியான முறையில் தெளிவான தகவல்களோடு செய்தியிடுவதில் வீரகேசரி தன்னிகரற்ற செய்தி ஊடகம். 

ஒரு குடையின் கீழ் 

இலங்கை ஊடகத்துறையில் மாபெரும் சாதனைகளை படைத்துவரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தற்போதைய முகாமைத்துவ பணிப்பாளர் திரு. குமார் நடேசனின் வழிகாட்டலின் கீழ் வீரகேசரி நாளிதழ், வார வெளியீடு பல்பரிமாண வளர்ச்சி காணும் வகையில் மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, மித்திரன் வாரமலர், சுகவாழ்வு, கலைக்கேசரி, ஜோதிட கேசரி, சுட்டி கேசரி, ஜூனியர் கேசரி, ஜீனியஸ், தமிழ் டைம்ஸ், நாணயம் என பல இணை வெளியீடுகளும் இணைந்திருந்தன. 

அரசியல், சமூகம், கலை, இலக்கியம், வர்த்தகம், பல்சுவை, ஜோதிடம் சார்ந்தும் சிறுவர்கள், பெண்கள், வளர்ந்தவர்களுக்காகவும் தனித்தனி சிற்றிதழ்களை வெளியாகின. 

எனினும், கடந்த காலங்களில் கொவிட் 19 மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இதழியல் துறையிலும் தாக்கம் செலுத்தியதால் சில சஞ்சிகைகள் இடைநிறுத்தப்பட்டன. இருப்பினும், அவை எடுத்துச் சென்ற உள்ளடக்கங்களை வீரகேசரி எனும் தலைமை பத்திரிகை தாங்கி, அரசியல் ஆக்கங்களோடு பிற விடயதானங்களையும்  விரிவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

வீரகேசரி வெறுமனே செய்தி, ஆக்கங்களை பிரசுரிப்பது மட்டுமன்றி, பல நாவல்களை பதிப்பித்து,  நூல்களை அச்சிட்டு வெளியிட்டு,  அதனூடாக பல எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், கல்வியியலாளர்களை அறிமுகப்படுத்தி முன்னேற்றிய பெருமையையும் கொண்டுள்ளது. 

வீரகேசரி வரலாற்றில் ஆசிரியராகவும் ஆசிரியர் குழாமில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் புத்திஜீவிகளாகவும் கல்விமான்களாகவும் சமூக ஆர்வலர்களாகவும் இதழியல் துறை மற்றும் வீரகேசரி பத்திரிகையை சேவை நோக்கில் நேசித்தவர்களாகவும் காணப்பட்டனர். 

இணையம் ஏறிய செய்தித்தாள் 

இதழியல் ஊடகமான வீரகேசரி இன்றை நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு டிஜிட்டல் தளத்திலும் பயணித்துக்கொண்டிருக்கிறது. 

இலங்கையில் முதல் தமிழ் செய்தி இணையத்தளமாக virakesari.lk 2002இல் உருவாக்கப்பட்டது. 

இதழியலை இலத்திரனியலோடு இணைக்கும் அடுத்தகட்ட முயற்சியாக 2005இல் வீரகேசரி மின்னிதழாக (E-paper) பதிவாகத் தொடங்கியது. 

இணையம் மூலம் பத்திரிகையை பல தளங்களும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் சென்ற வீரகேசரி இணையத்தளம் 2010ஆம் ஆண்டில் இலங்கையின் அபிமான தமிழ் இணையத்தளமாக bestweb.lkஆல் தெரிவுசெய்யப்பட்டது. 

செய்திகள், நேர்காணல்கள், அரசியல் கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள், கருத்துக்கணிப்புகள் போன்ற பல நிகழ்ச்சிகள் வீரகேசரி யூடியூப் தளத்தில் ஒலி/ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், உலக நிகழ்வுகள் போன்ற பல விடயங்களில் இணைய மற்றும் யூடியூப் தள நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்பட்டு வருகின்றன. 

ஏட்டில் இருந்த செய்திகள் இணையத்தில் ஏற்றப்பட்டு, தமிழை அடையாளமாகக் கொண்ட அத்தனை வாசகர்களின் உள்ளங்கைக்குள்ளும் இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக யூடியூப், வட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களிலும் கடந்த 21 வருடங்களாக வீரகேசரி தவழ்கிறது என்றால் அது தமிழின் மற்றுமொரு அசுர வளர்ச்சி. 

பத்திரிகை, நாட்டுச் சுதந்திரத்தின் மிகப் பெரிய காவலாளி. ஆனாலும், அந்த பத்திரிகைக்கே வாசகர்கள்தான் பலம். வாசகர்களின் கருத்துக்கள், விமர்சனங்களே பத்திரிகைகளுக்கு வலு சேர்க்கின்றன. 

93 ஆவது ஆண்டை நோக்கிய வீரகேசரியின் பயணத்தில் தோளோடு தோள் நின்று வீரகேசரியின் கரங்களை பற்றிப் பயணித்த வாசகர்கள் அளித்த மாபெரும் அங்கீகாரமே ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகைக்கான விருதாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. 

நூற்றாண்டை நோக்கிய வீரகேசரியின் பயணத்தில் பல அங்கீகாரங்கள், கௌரவங்கள், உயரிய விருதுகள் எம்மைப் பலப்படுத்தி பெருமைப்படுத்தினாலும் வாசகர்கள், விளம்பரதாரர்கள், பத்திரிகை முகவர்கள், எழுத்தாளர்கள், நலன் விரும்பிகள் என சகலரும் வீரகேசரி மீது கொண்டுள்ள உயரிய நம்பிக்கையே அனைத்துக்கும் மேலான மகுடமாகும்.

வீரகேசரியின் நெஞ்சார்ந்த நன்றிகள் அனைவருக்கும் உரித்தாகட்டும் !

வாழ்க! வெல்க!!


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06