இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு தமிழக தொழில்முனைவோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ‘யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி’யில் கலந்துகொண்டபோதே அவர்கள் இவ்வேண்டுகோளை விடுத்தனர்.

கடந்த 27ஆம் திகதி யாழ் நகரசபை மைதானத்தில் ஆரம்பித்த இந்தக் கண்காட்சி 29ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில், 65 சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. 

இதில் பேசிய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை-இந்திய வர்த்தக உறவுக்கு தரைவழித் தொடர்பு மிக முக்கியம் எனக் கருத்துத் தெரிவித்தனர்.

வர்த்தக முயற்சிகளை எடுக்கவும் முதலீடுகளைச் செய்யவும் சிறந்த போக்குவரத்து வசதிகள் மிக முக்கியம். எமது வர்த்தகப் பொருட்களை கொழும்புக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலேயே சில சிரமங்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி, கொழும்பில் இருந்து அவற்றை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது. இதனாலேயே பல சர்வதேச நிறுவனங்கள் யாழ்ப்பாணத்துடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தத் தயங்குகின்றன.

இவற்றைத் தவிர்க்கும் முகமாக, இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தால், வர்த்தக உறவுகள் மட்டுமன்றி, சர்வதேச முதலீடுகளும் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்படலாம். மேலும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்வதற்காக வழங்கப்படும் இடைத்தரகுக் கூலி தவிர்க்கப்படலாம் என்பதால், பொருட்களைக் குறைந்த விலைக்கு யாழில் விற்பனை செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.