(பா.ருத்ரகுமார்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின்கீழ் உலக நாடுகளின் மத்தியில் இலங்கையின் மதிப்பு தற்போது தெளிவாக தெரியவந்துள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் ஈரானிய தூதுவருக்கிடையிலான சந்திப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு காலத்தில் சர்வதேச நாடுகளிடையே எமது நாட்டுக்கு எதிரிகளும் இருந்தனர். நண்பர்களும் இருந்தனர். ஆனால் தற்போது அவ்வாறான பிரிவுகள் இல்லை. இன்று இலங்கையுடன் நண்பர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்த நட்பு நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதேச நாடுகளுடனான தொடர்பு மிகவும் வலுப்பெற்று வருகின்றதென அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மொஹமட் செரி அமிரானி,

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இராஜதந்திர தொடர்புகளை தொடர்ந்து பேணவும் தயாராகவுள்ளோம். 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியாவிடமிருந்து ஈரான் விடுதலை பெற்றுக்கொண்டது.

இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான தொடர்பு இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே பேணப்பட்டு வந்துள்ளது. இந்த வரலாற்று ரீதியான தொடர்பை தொடர்ந்தும் வலுப்படுத்திக்கொள்ள ஆவலாக உள்ளோம் என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.