அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி விரைவில் ஏலத்திற்கு வரவிருக்கிறது.

நாஸிப் படையினரால் ஹிட்லருக்கு பரிசளிக்கப்பட்டிருந்தது இந்தத் தொலைபேசி. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, பெரும்பாலான கட்டளைகளை இந்தத் தொலைபேசி வாயிலாகவே ஹிட்லர் பிறப்பித்ததாகக் கருதப்படுகிறது.

இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கும் ஆணைகளையே ஹிட்லர் இந்தத் தொலைபேசி மூலம் பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

1945ஆம் ஆண்டு முதல் பேர்லினில் வைக்கப்பட்டிருந்த இந்தத் தொலைபேசி, முதன்முறையாக அமெரிக்காவில் ஏலத்தில் விடப்படவிருக்கிறது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் ஏல விற்பனை நிறுவனமே இதை ஏலத்தில் விற்கவுள்ளது.

சீமன்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த கறுப்பு நிறத் தொலைபேசிக்கு சிவப்பு வர்ணம் பூசப்பட்டதுடன், அதில் ஹிட்லரின் பெயரும் அவரது நாஸிப் படையைக் குறிக்கும் ஸ்வஸ்திக் சின்னமும் பொறிக்கப்பட்டது.

‘ஹிட்லரின் அழிவுச் சாதனம்’ என்று இந்தத் தொலைபேசியைக் குறிப்பிட்டிருக்கும் ஏல நிறுவனம், ‘வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய கொடூர ஆயுதம்’ என்றும் வர்ணித்திருக்கிறது.