நாகநாதர்
தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதைத் தவிர ஏனைய அனைத்து விடயங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர் மலையக பிரதிநிதிகள்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இது கடைசியில் வாங்கும் பொருள் அல்ல என்கிறார்.
தொழிலாளர்களின் காணி உரிமைக்காக யார் போராடினாலும் நான் களத்திலிறங்கி அவர்களோடு இணைவேன் என்று ஒரு சந்தர்ப்பத்தில் இ.தொ.கா பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தெரிவித்திருந்தார்.
அரச சார்பற்ற அமைப்புகளால் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட வாங்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
எல்லோராலும், எல்லா உரிமைகளைப் பற்றியும் பேச முடியும். ஆனால், இவ்வாறு பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றிணைந்தால் தான், உரிமைகளைப் பெற முடியும் என்ற விடயத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இவர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்க முடியும்?
நல்லாட்சி காலத்தில், சமூகம் சார்ந்து இயங்கும் சில அரச சார்பற்ற அமைப்புகளின் பங்களிப்பினால்தான் பிரதேச சபை சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இன்று பெருந்தோட்டங்கள் தோறும் இயங்கும் முன்பள்ளிகளை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றே வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது.
மலையக மக்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் பேசுவது போன்று பணம் பார்க்கும் வேலைகளை சில அரச சார்பற்ற அமைப்புகளும் தனி நபர்களும் செய்து வருவதை மறுக்க முடியாது.
சிலர் இந்த மக்களின் துன்பியல் வாழ்க்கையை மாத்திரம் படம் பிடித்துக் காட்டி, கண்காட்சி என்ற பெயரில் பணத்தை ஈட்டி வருகின்றனர். வேறு சிலரோ தமது பிரதேசத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணராது, மலையக தோட்டங்களுக்கு கமராவுடன் பயணம் செய்து இந்த மக்களுக்கு மலசலகூடங்கள் இல்லையே என புலம்பி தமது யூடியூப் அலைவரிசையை பிரபலப்படுத்துகின்றனர்.
இவ்வாறு இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் பல இலட்சம் ரூபாய் பணம் சேர்ந்தது என பரபரப்பாக பேசப்பட்டது. இறுதியில் அந்த பணத்தில் மலசலகூடம் கட்டிக்கொடுக்கப்படும் என்றெல்லாம் கூறியவர்களின் சத்தத்தையே காணவில்லை. பணத்துக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
மலையக சமூகத்தின் பால் அக்கறையுள்ள ஒரு சிலர் தம்மை வெளிப்படுத்தாது செயற்பட்டு வரும் அதேவேளை, இந்த மக்களை வைத்து பிரபல்யம் தேடுவதற்கும் பணம் பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் செயற்பட்டு வருவதை மறுக்க முடியாது.
ஆனால், இந்த காணி உரிமை விவகாரம் பற்றிய அடிப்படை தெரியாமல், பலரும் பேசி வருவது தான் வேடிக்கை.
கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, 'தோட்டத் தொழிலாளர்களுக்கு பத்து பேர்ச் காணி வழங்கப்படும் என்பது அமைச்சரவை முடிவு. ஆகவே அது படிப்படியாக செயற்படுத்தப்படும்' என்றார். ஆனால், காணி உரித்து வழங்கப்படுமா, இல்லையா என்பது பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை.
இந்த சம்பவம் இடம்பெற்ற இரண்டொரு நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பலர் தோட்டங்களில் பணியாற்றாதவர்களாக உள்ளனர். அப்படியானால், அவர்களுக்கும் வீடு அல்லது காணியை வழங்குவது எந்தளவுக்கு சாத்தியப்படும் என கேட்டிருந்தார்.
அரசாங்கமானது பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் குத்தகை ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு முடிவு செய்திருப்பதாக கடந்த மாதமே அறிவித்துவிட்டது. கம்பனிகளுடன் குத்தகை செய்திருந்தாலும் பெருந்தோட்டக் காணிகள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை. தொழிலாளர்களுக்கு அவற்றை வழங்க வேண்டுமா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதுவரை அரசாங்கம் அதை தன் வாயால் கூறவே இல்லை. இனியும் கூறப்போவதில்லை. இந்த நழுவல் போக்கானது கடந்த இருநூறு ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றது.
‘மலையக மக்களின் பாதுகாப்புக்காகவே நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடிவெடுத்தோம்’ என மக்களின் சம்மதமின்றி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற எவருமே தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி வாய் திறந்ததாக சிறு குறிப்புகள் கூட இல்லை.
ஒரு தடவை அமரர் ஆறுமுகன் தொண்டமான் நிகழ்வொன்றில் பேசும்போது ‘தொழிலாளர்கள் இருக்கும் வரை தமது குடியிருப்பில் இருக்கலாம். யாரும் அவர்களை போகச் சொல்ல முடியாது. அவ்வாறு இருப்பதற்கு ஆவணம் ஒன்றும் அவசியம் இல்லை. அது எமக்கு தானாக கிடைத்த உரிமை’ என்று கூறியிருந்தார்.
இன்று அவர் இல்லை. ஆனால், தோட்டங்களில் தொழில் செய்யாத தொழிலாளர்கள் குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டும் என பல தோட்ட நிர்வாகங்கள் கடிதம் அனுப்பிக்கொண்டிருக்கின்றன.
மலையக பிரதிநிதிகள் என்று தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்று அரசியல் செய்ய ஆரம்பித்தனரோ, அன்றிலிருந்து அவர்களின் பேச்சுக்கு எந்த அரசாங்கமும் செவி சாய்ப்பதில்லை. இதன் காரணமாகவே சம்பள உயர்வு போராட்டங்களும் கடந்த காலங்களில் பிசுபிசுத்துப் போயின.
அங்கே தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் போராடிக்கொண்டிருக்க இங்கே அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் கூட்டு ஒப்பந்தத்தில் தமது இஷ்டப்படி, ஒரு தொகையை பேசி கையெழுத்திட்டு முடிவு செய்திருப்பர்.
தொழிலாளர்களின் வேதனம், பெருந்தொட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அடிப்படை வசதிகள் தொடர்பிலேயே அரசாங்கம் அக்கறை காட்டாது இருக்கும்போது எங்ஙனம் காணி உரிமை பற்றி பேச முடியும்?
தொழிலாளர்களுக்கு காணி உரிமையை இந்திய பிரதமர் மோடி வழங்குவாரா? இங்குள்ள ஜனாதிபதியிடம்தான் அது பற்றி பேச முடியும். அதை செய்வதற்கு இங்குள்ள மலையக பிரதிநிதிகள் எவருமே திராணியற்றவர்களாகவே உள்ளனர்.
இலங்கையில் காணிச் சட்டங்கள் பற்றிய தெளிவு இவர்கள் எவருக்குமே இல்லை. அடுத்தது, தமது வாக்குகள் உள்ள பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசும் ஒரு அரசியல் கலாசாரத்தை இவர்கள் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வாரம் அவிசாவளை பென்றித் தோட்டத்தில் இடம்பெற்ற காணி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த அவ்விடம் சென்றிருந்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன்.
அச்சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குள் நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் தோட்டப்பகுதி ஒன்றில் தோட்டக்காணியை தனியார் ஒருவர் ஆக்கிரமிக்க முயல்வதை எதிர்த்து அத்தோட்ட மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஆனால், அது குறித்து பேசுவதற்கு அவ்விடத்துக்கு பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்றே தெரிகின்றது.
அதே போன்று நுவரெலியா மாவட்டத்தில் ரம்பொடை தனியார் தோட்டமொன்றில் தொழிலாளர்களை வெளியேறக் கூறி தோட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பிய விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன கடந்த வார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
தோட்ட நிர்வாகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கிடையிலான பிணக்குகளை தொழிற்சங்கங்களே தலையிட்டு தீர்க்க வேண்டும். ஆனால், பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்து பல தசாப்தங்களாகின்றன. அனைத்தையுமே அரசியல் மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற மயக்கத்தில் மலையக பிரதிநிதிகள் உள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுக்கு உரிமைகளை எவ்வாறு பெறுவது என்ற விடயம் தெரியாமலேயே போய்விட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை என்பது அரசியல் அதிகாரத்தால் சாத்தியமாகாத ஒன்று. அதை தொழிற்சங்க செயற்பாடுகள் மூலம் சாத்தியமாக்குவதற்குரிய வழிவகைகள் கடந்த காலங்களில் இருந்தாலும், அதை கை நழுவவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அரசியல் ரீதியாக அவர்களுக்கு கிடைத்த சலுகைகள் அவர்கள் கண்களை மறைத்துவிட்டன. அரசியல் அதிகாரம் என்பது நிரந்தரமானதல்ல. ஆனால், தொழிற்சங்க செயற்பாடுகளே என்றும் நிலைத்திருக்கும் என்ற உண்மையை இவர்கள் உணரும் நிலையில் இல்லை.
ஆகவே, இப்போது இவர்கள் பேசிக்கொண்டிருப்பது அரசியல் மாத்திரமே. அது மாத்திரமே அவர்களால் முடியும். காணி உரிமைகள் பற்றியும் இனி அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கப்போகின்றனர். அநேகமாக மலையகம் – 300ஆவது நிகழ்விலும் இவர்களின் வாரிசுகளால் அது பேசப்பட்டுக்கொண்டு மாத்திரமே இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM