* மீண்டும் சூடுபிடித்துள்ள நில ரீதியான ஓர் தொடர்பு!
* போர்க்கொடி தூக்கும் கடும் போக்காளர்கள்!
* இந்தியாவை எதிர்ப்போர் சீனாவை எதிர்க்காதது ஏன்?
ஆர்.பி.என்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில ரீதியாக ஓர் தொடர்பை ஏற்படுத்தினால் அது எவ்வாறு அமையும்? இதை கற்பனை செய்து பார்க்கும்போதே சிலருக்கு மகிழ்ச்சியாகவும், பலருக்கு அது நிறைத்த அதிர்ச்சியாகவும் அமைந்து விடுகின்றது. அதாவது, இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நில ரீதியான தொடர்பிருந்தால் தமது பொருளாதார வளத்தை உயர்த்தலாம் என்று கருதுகின்றனர். ஆனால், கடும்போக்கு சிங்கள மக்களோ தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று கருதுகின்றனர். அதாவது, ஒரு மணி நேரத்தில் இந்திய படை இலங்கை வந்து விடும் என்று கூறுகின்றனர். ஏலவே, கடல் மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் இலங்கை வர இந்திய படைகளுக்கு என்ன மாத கணக்காக எடுத்தது? என்று அவர்கள் தரப்பில் கேட்க எவருக்கும் துணிவில்லை.
சரி விடயத்துக்கு வருவோம்.
அண்மைக்காலமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில ரீதியாக ஓர் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பான விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் இரு நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு இந்தியாவுடன் "நில ரீதியான அணுகலை" வழங்க பாக்கு நீரிணையின் குறுக்கே பாலம் ஒன்றினை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக்கொண்டனர்.
உண்மையில் இரு நாடுகளினதும் பொது நலனுக்காகவும், தெற்காசியப் பிராந்தியத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்திற்காகவும் ஒரு நில ரீதியான இணைப்பை ஏற்படுத்த தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என்று கூறலாம். ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளும் தமக்கிடையில் நில ரீதியான மற்றும் கடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில், திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு நில ரீதியான அணுகலை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நில இணைப்பை ஏற்படுத்துவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், இது இரு நாடுகளுக்கும் இடையே பழமைவாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்துகிறது. அத்தகைய இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் விரைவில் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவே, பழமைவாதிகளான கடும்போக்காளர்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களில் வர்த்தக, தொழில் நுட்ப ரீதியான பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவிலிருந்து நேரடியாக எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கையை அனுமதிக்கும் பெற்றோலியக் குழாய் நிர்மாணத்திற்கு சாத்தியக்கூறு குறித்த ஆய்வை நடத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்த நடவடிக்கையானது இலங்கை இதர எண்ணெய் ஏற்றுமதி நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அதேவேளை, கணிசமான செலவைக் குறைக்கவும் உதவும்.
அதேவேளை, இரு நாடுகளையும் இணைக்கும் தரைப் பாலம் அமைப்பதன் மூலம் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்புகளை மேலும் வலுப்படுத்த முடியும். அத்துடன், இந்தியா மின்சார வலைப்பின்னலை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையின் மின் வலு சக்தியை மேம்படுத்த முடியும் என்பது முக்கியமானது.
மோடி - ரணில் சந்திப்பு
இந்த விஜயத்தின் பெறுபேறுகள் இலங்கைக்கு பல வாய்ப்புகளை வழங்கினாலும், நாடு இந்தியாவை அதிகமாக நம்பி அதன் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்தை இழக்கக்கூடும் என்ற கவலை கடும்போக்காளர்கள் மத்தியில் காணப்படுகிறது. மேலும், இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்தல், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் இலங்கையின் பல்வேறு விவகாரங்களில் இந்தியா தலையிடுவது அதன் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்திய உதவியை ஏற்றுக் கொள்வது இந்த தலையீட்டை மேலும் ஆழப்படுத்தலாம் மற்றும் இலங்கையின் முடிவெடுக்கும் சுயாட்சியை சமரசம் செய்து விடும் என்றும் கடும்போக்காளர்கள் மத்தியில் அச்சம் உள்ளது.
மேலும், இந்த விஜயமானது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு இந்திய உதவிகளை பெற்றுக்கொடுக்கும் ஒரு வழியாக பலராலும் பார்க்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்றாலும், பெறப்படும் உதவிகள் இலங்கையின் நலன்கள் மற்றும் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் கருத்து.
கடும் போக்காளர்களின் கண்டனம்
இதனையடுத்து, வரிந்து கட்டிக்கொண்டு எழுந்த பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவருமான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம, இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது என தெரிவித்தார். பதிலுக்கு பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று போர்க்கொடி தூக்கினார்.
கொழும்பு துறைமுக நகரம்
இந்தியா பாலம் அமைப்பதன் மூலம் இலங்கை ஆக்கிரமிக்கப்படும் என்று கூறும் கடும்போக்காளர்கள், ஏலவே சீனா இலங்கையில் அபிவிருத்தி என்ற போர்வையில் பாரிய நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளமை குறித்து வாய் திறக்காது இருப்பது ஆச்சரியமானது.
இலங்கையின் வரை படத்தையே மாற்றியமைத்து, காலி முகத்திடலின் கடலை ஆக்கிரமித்து, கடலிலிருந்து எடுக்கப்பட்ட மணலைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த நகரம், சீனாவால் ஓர் உயர் தொழில்நுட்ப நகரமாக மாற்றப்பட்டு, வெளிநாட்டு சர்வதேச நிதி மையமாகவும், குடியிருப்பு பகுதியாகவும் கட்டமைக்கப்படவுள்ளது.
665 ஏக்கர் (2.6 சதுர கி.மீ) புதிய நிலப்பரப்பை உருவாக்குவதற்கு சீனா 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாக நம்பப்படுகிறது. அதற்காக இலங்கை சீனாவுக்கு 43 சதவீத நிலப்பகுதியை 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளது. தற்போழுது இத்திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது முழுமையாக நிறைவேற்றப்பட்டதும் இலங்கையின் மத்தியிலேயே ஒரு "குட்டி சீனா" உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
மகாகவி பாரதியின் கனவு
இவை அனைத்தையும் ஒருபுறம் வைத்துவிட்டு, இரு நாட்டிற்கும் இடையிலான வரலாற்றுப் பின்னணியை புரட்டிப் பார்த்தால்
" சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் " என்ற மகாகவி பாரதியார் பாடலுடன் ஆரம்பிக்கிறது இலங்கை - இந்திய "உறவுப்பாலம் "
" சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
“சிங்களத் தீவினுக்கோர் “ பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் "
என்றார் மகாகவி பாரதியார். அவரது கனவு, இன்றும் கனவாகவே இருந்து வருகிறது.
மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து காலா காலமாக பேசப்பட்டு வருகிறது.
இராமர் பாலம் (Rama's Bridge) என்பது தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக்குநீரிணையையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடலின் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரை உள்ளது.
2005 ஆம் ஆண்டு இந்திய அரசு இப்பாலத்தை சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி அருகே ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி, சுமார் 400 கிலோ மீற்றர் தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் இராம கர்மபூமி இயக்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டது.
வரலாற்றுப் பின்னணி
இராமாயணத்தில் இராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக மண், மிதக்கும் வகையில் கல் மற்றும் மரங்களை கொண்டு வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலமே இதுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தப் பாலம் தொடர்பில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஓர் அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில், இந்த பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொறியியல் கழகம் நடத்திய ஆராய்ச்சியின் பயனாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிட்டு கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பாலம் உண்மைக்கும் ஐதீகத்துக்கும் இடையிலான ஓர் சவாலாகவே காணப்படுகின்றது.
இராமர் சேது பாலம் (ஆதாமின் பாலம்)
இராமர் பாலம் அல்லது ஆதாமின் பாலம் (ராமசேது) என அழைக்கப்படும் இந்த பாலம் தமிழ்நாடு இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையான மன்னார் தீவுகளுக்கு இடையே 48 கிலோ மீற்றர் நீளமுள்ள மணல் திட்டுகள் மற்றும் சுண்ணாம்புக் கற்கள் கொண்ட சங்கிலியாகும். இலங்கை இராமாயண தலங்களில் முக்கிய தலமாக சித்தரிக்கப்படுகிறது.
இந்து மதக் கோட்பாடுகள் அல்லது மாபெரும் இந்திய காவியமான இராமாயணத்தில் ராமர் பாலம் வானர படையால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. முக்கியமாக இந்த மணல்மேடு பாதை இன்றும் வான்வழிப் பார்வையில் தெரியும். இராமபிரான் தனது படை அணிகள் சகிதம் இலங்கை வருவதற்கும் இலங்கை மன்னன் இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்கும் இந்தப் பாலம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
சேதுவின் வரலாற்று பின்னணி
இந்தப்பாலம் இயற்கை பேரழிவுகள் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக 1,400 ஆண்டுகளின் பிற்பகுதியில் ஓரளவு கடலில் மூழ்கியது என்றும், இன்றும் இந்தியாவின் தனுஷ் கோடிக்கும் இலங்கையின் தலை மன்னார்க்கும் இடைப்பட்ட 16 இடங்களில் இந்த அமைப்பு மணல் திட்டுகளாக வெளிப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பாலத்தின் தோற்றம் சர்ச்சைக்குரியது. இந்துக்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமெரிக்க ஆய்வு நிறுவனமான நாசா கூட ராமர் பாலத்தின் தோற்றம் பற்றிய சர்ச்சையில் உள்ளன.
மேலும், இராமாயணக் கதையின் காலம் மற்றும் பாலம் மாதிரிகளின் கார்பன் பகுப்பாய்வு சரியாக ஒத்துச்செல்வதாக அமைந்துள்ளது. இராமரின் பாலம் கடல் மட்டத்திற்கு மேல் இருந்ததாக நம்பப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு புறமிருக்க, இலங்கை - இந்தியாவுக்கிடையில் ஓர் நிரந்தர உறவுப் பாலமாக இது அமைந்து விட்டால், அதன் மூலம் இரு நாடுகளும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணலாம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
மலையக மக்களின் வருகை
1913 மற்றும் 14 இல், பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கை தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்களை அழைத்து வர ரயில் இணைப்பைப் பயன்படுத்த திட்டமிட்டனர். இந்தியப் பகுதியில் தனுஷ்கோடி வரையிலும், இலங்கைப் பகுதியில் தலைமன்னார் வரையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் முதலாம் உலகப் போர் காரணமாக பாக்குநீரிணைக்கு குறுக்கே பாலம் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காலா காலமாக பாலம் அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டாலும் ஏதோ ஒரு தடங்கல் வரவே செய்கிறது. 2001 தொடக்கம் 2004 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இந்த யோசனை மீண்டும் புத்துயிர் பெற்ற போதிலும் இறுதியில் அது தட்டிக் கழிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா புலிகள் ஊடுருவ இது வாய்ப்பாக போய்விடும் என்று கூறி பின்னடித்தார்.
ஜெயலலிதாவின் எதிர்ப்பு
தமிழ்நாட்டிற்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவுவதற்கு வசதியாக இருந்த நில இணைப்புக்கு ஜெயலலிதா எதிராக இருந்ததாலும், இந்தியாவில் இருந்து புலிகள் ஊடுருவிவிடலாம் என்று அஞ்சிய சிங்கள தேசியவாதிகளின் எதிர்ப்பை ரணில் விக்கரமசிங்க எதிர்கொண்டதாலும், அந்தத் திட்டம் செயல்படவில்லை.
மீண்டும் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் 2015 இல், இந்திய வீதி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன் 23 கிலோ மீற்றர் பாலத்தைக் கட்ட முன்மொழிந்தார். ஆனால் நிதின் கட்கரிஸின் முயற்சி இலங்கையில் ஒரு விரோதப் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது.
இந்த திட்டம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு கருத்து வெளியிடுகையில் வாசுதேவ நாணயக்கார, இந்தப் பாலம் கட்டப்பட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மில்லியன் கணக்கான தமிழர்கள் இலங்கையை சதுப்பு நிலமாக்குவார்கள் என்றும், மற்றொரு தேசியவாதியான உதய கம்மன்பில, பாலம் கட்டப்பட்டால் அதனை இடித்து அழித்து விடுவேன் என்றும் கூறியதாக கடந்த ஜூலை 31 ஆம் திகதி சிலோன் டுடே பத்திரிகையில் வெளியான கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடுருவல்
முன்னர் புலிகள் ஊடுருக்குவார்கள் என்று கூறி பரஸ்பரம் தட்டிக் கழிக்கப்பட்டது. ஆனால் இன்று அவர்களின் பிரச்சினை இல்லை. எவ்வாறெனினும், கடல் மார்க்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடுருவலை முற்றுமுழுதாக தடுக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அதிவேக படகுகள் மூலம் சில மணி நேரத்தில் இந்திய கரையை அடைந்து விடலாம்.
இந்திய மீனவர்களின் ஊடுருவல் மற்றும் சட்ட விரோத கடத்தல்கள் என்பவற்றை கட்டுப்படுத்த முடியாத திருப்பதற்கும் இதுவே காரணம். எனவே, பாலம் அமைவதால் மாத்திரம் ஊடுருவல் அதிகரித்துவிடும் என்று கூறுவது முட்டாள்தனமானது.
உண்மையில் இந்தியா-இலங்கைக் கிடையில் ஒரு தரைப்பாலம் அமைக்கப்பட்டால் 23 கிலோ மீற்றர் பாலத்தை ஒரு மணி நேரத்திற்குள் கடக்க முடியும். மேலும் வர்த்தகரீதியான செலவுகள் 50 வீதம் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பொருட்களை எடுத்து வர கொள்கலன் கொண்ட கப்பல்களுக்கு மொத்தம் 116 முதல் 122 மணிநேரமும் (சுமார் ஐந்து நாட்கள்), கொள்கலன் இல்லாத கப்பல்களுக்கு 40 முதல் 46 மணி நேரமும் (அதாவது சுமார் இரண்டு நாட்கள்) ஆகும். இது "அதிகப்படியானது" என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பொருளாதார மீட்சி
எவ்வாறாயினும், பொருளாதாரப் படுகுழியில் இருந்து இலங்கையை மீட்பதில் இந்தியா ஆற்றிய கணிசமான பங்கை மறக்க முடியாது. நாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கட்டத்தில் வீதிகளில் எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும், மருந்துவைகளுக்காகவும் வாரக்கணக்கில் வரிசையில் காத்திருந்த மக்கள் இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தால் போதும் என்று வெளிப்படையாக கூறினார்கள்.
அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சீனா குறித்தோ அல்லது சீனாவின் அரவணைப்பில் இருந்தால் நல்லது என்றோ கூற துணியவில்லை. அப்போது இந்த கடும்போக்காளர்களை காணவும் கிடைக்கவில்லை. இந்தியாவுடன் வலுவான பொருளாதார மற்றும் மூலோபாய உறவைக் கட்டியெழுப்புவதற்கான அவசியம் குறித்து இன்று சிந்திக்கபட்டு வருகின்ற நிலையில், நில ரீதியாக இந்தியாவுடன் தொடர்பொன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துள்ளார் என்றே கருத வேண்டும்.
இந்திய பொருளாதார வளர்ச்சி
இந்தியா இன்னும் பத்தாண்டு காலத்தில் பொருளாதார ரீதியில் அபரிதமான வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையிலேயே இலங்கை இந்தியாவுடன் இணைந்து பயணிக்குமானால், தற்போதைய மோசமான பொருளாதார சூழலில் இருந்தும் மீளக்கூடியதாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாகும். ஆனால், இலங்கையில் பொருளாதார வல்லுனர்களின் பார்வையும் கடும் போக்காளர்களின் பார்வையும் மிகவும் மாறுப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
பொருளாதார ரீதியான நெருக்கடியில் இருந்து மீள இந்தியாவின் உதவி அவசியம் என்று எதிர்பார்க்கும் இலங்கை அரசால், கடும்போக்காளர்களை எந்த வகையிலும் சமாளித்துக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.
இதுவரை இருந்த அரசியல் தலைவர்களும் இலங்கைக்கு ஒரு முகமும் இந்தியாவுக்கு மற்றொரு முகமும் கட்டுபவர்களாகவே இருந்து வந்தனர். இதனால், நம்பக்கூடிய தோழன் என்பதுக்கு மாறாக சந்தேகத்துக்குரிய தோழனாகவே இரு தரப்பும் ஒருவரை ஒருவர் பார்க்க வைத்துள்ளது.
இதனை தீர்க்க தரிசனத்துடன் நன்கு உணர்ந்த நிலையில் பாரத முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழ் தரப்பின் கோரிக்கைகளை அனுசரித்து சென்றார். எனினும், அவரது மறைவின் பின்னர் உருவான தவறான இராஜதந்திர அணுகு முறைகள் அனைத்தையும் சின்னாபின்னமாக்கின என்பதே யதார்த்தம்.
ரணில் மீதான நம்பிக்கை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் காரணமாகவே சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்தன. உரிய நேரத்துக்கு சர்வதேச கடனுதவிகள் வந்து சேராது போயிருந்தால் நாடு அதல பாதாளத்தை நோக்கி சென்றிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் நாட்டு மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், சர்வதேசம் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் மீட்சிக்கு பொருத்தமான ஒருவராகவே பார்க்கின்றது.
கடந்த காலங்களில் அவர் நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றிந்தாலும், அவர் ஒரே பலம் வாய்ந்த தலைவராக காணப்படவில்லை. எனினும், தற்போதைய நிலை சற்று மாறுபட்டது. அதனை அவர் எவ்வாறு கையாளப்போகிறார் என்பதிலேயே அவர் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் மாற்றமடையும். குறிப்பாக புரையோடிப்போன தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய, சீன விவகாரங்கள் என்பனவே அவர் எதிர்கொள்ளும் பாரிய சவால்களாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM