குமார் சுகுணா
உலகம் முழுவதும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகம் பேசப்பட்டு வருகின்ற விடயம் பூமி வெப்பமயமாதலாகும். இதன் ஆபத்துக்கள், எதிர்விளைவுகள் தொடர்பில் பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது.
இதனை தடுப்பதற்கான முயற்சிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது. இதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவினால் பல்வேறு இயற்கை சீற்றங்களை தற்போது உலகம் முழுவதிலும் மக்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஜூலை மாதத்தில் உலக வரலாற்றில் அதிகூடிய வெப்ப நாட்கள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2016ஆம் ஆண்டுதான் அதிகூடிய சராசரி வெப்பநிலை அதிகரித்த நாள் உலகில் பதிவானது. ஆனால், அதனை விடவும் அதிகமாக இவ்வருடம் நிலவுகின்ற வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அந்த வகையில் 2016ஆம் ஆண்டு 16.92 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதை மிஞ்சும் வகையில் கடந்த ஜூலை 3ஆம் திகதி 17.01 பாகை செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனையடுத்து, ஜூலை 4ஆம் திகதி 17.18 பாகை செல்சியஸ் என்றும் 6ஆம் திகதி 17.23 பாகை செல்சியஸ் என்றும் வெப்பநிலை பதிவானது.
இவ்வாறு ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டியுள்ளது. இது மிகவும் அபாயகரமானது. எதிர்காலத்தில் இதனை விடவும் அதிகரிக்கலாம்.
புவி வெப்பமடையும்போது இயற்கை தனது சமநிலையை இழக்கும். இதனால் காட்டுத்தீ, கடல் மட்டம் அதிகரிப்பு, சராசரி வெப்பநிலை உயர்வு, ஆர்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவது, கடும் பஞ்சம், அதிகளவில் மழை அல்லது வறட்சி போன்ற பல இயற்கை சீரழிவுகளை ஏற்படுத்தும் விடயங்கள் காணப்படுகின்றன.
இயற்கையை தொடர்ந்து சீரழித்து வருவதால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை, பிரச்சினைகளை உலக நாடுகள் தற்போது சந்தித்து வருகின்றன. பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக உலக நாடுகள் வறட்சியையும், வெள்ள பாதிப்பையும் சந்தித்து வருகின்றன. அதன் வெளிப்பாடாக அரிசி, தானிய உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஊர்களில் பஞ்சம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சமும் காற்று மாசும் தொடர்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய கண்டத்தில் தற்போது வெப்ப அலையின் தாக்கத்தினால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
தூய்மையான காற்று, தண்ணீர், மண், உணவு முறை, வாழ்வாதாரம், சுகாதாரம் தொடர்பான அனைத்து அம்சங்களும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன.
புவி வெப்பமடைவதற்கு காரணம், பச்சை வீட்டு வாயுக்களின் அதிகரிப்பே. இயற்கைக்கு மாறாக, இந்த பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரிப்பதற்கு மனித செயற்பாடுகளே காரணம். குறிப்பாக, தற்போதைய காலத்தில் பெற்றோல், டீசல், நிலக்கரி போன்ற புதைப்படிம எரிபொருள்களை கட்டுமீறி பயன்படுத்துகிறோம்.
தொழில் புரட்சியின் பின்னர் புதைப்படிம எரிப்பொருட்கள் அதிகமாக மனிதர்களினால் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு புதைப்படிம எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் உமிழ்வுகளும் புவி வெப்பமடைதலுக்கான காரணங்களாக உள்ளன.
அது போல அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்ப காடழிப்புகளும் அதிகரித்துள்ளன. அதாவது நகரமயமாக்கல், அதனுடைய விளைவுகளான குடியிருப்புகள், தொழிற்சாலைகள், சாலை வசதிகள் மற்றும் மக்களின் தேவைக்கேற்ப காடழிப்புகள் நடைபெற்று வருகின்றன. இவையும் புவி வெப்பமடைவதில் முக்கிய பங்கினை செலுத்துகின்றன. அத்தோடு வாகன புகைகள், குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியாகும் வாயுக்கள் போன்றனவும் காரணங்களாக அமைகின்றன.
மேலும், அதிகரித்துவரும் கடல் வெப்பம், அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவில் பனிப்பாறைகள் உருகுவது போன்றவை குறித்து விஞ்ஞானிகளில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இதன் வேகமும் காலமும் கணிக்க முடியாதபடி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
வெப்பமடைதல் பிரச்சினையானது அனைத்து பிராந்தியங்கள், மண்டலங்கள் என பூமியின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை பூமியில் வாழும் அனைவருமே முன்னெடுக்க வேண்டும்.
பாரிஸ் ஒப்பந்தப்படி, 2030ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலையை குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆயினும், தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்தே செல்கின்றது. வெப்பம், கடும் மழை, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் இனி அதிகளவில் குறைந்த இடைவெளியில் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
புவி வெப்பமடைதலை குறைப்பதற்கான பல சட்டதிட்டங்களை கடைப்பிடிப்போம் என்று உலக நாடுகள் கூறினாலும், நடைமுறையில் இந்த சட்டதிட்டங்கள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்றால் அது கேள்விக்குறியே.
உலகின் மிகப் பெரிய பசுமை காப்பகமாக விளங்கும் அமேசன் காட்டினை கூட அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதன் பாதகம் புவி வாழும் உயிரினங்கள் அனைத்தினது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் என்று தெரிந்தும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோல உலகில் வாழும் அனைத்து மக்களுமே ஏதோ ஒரு வகையில் இயற்கையை சீண்டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
புவி வெப்பமடைதலுக்கான முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே. இயற்கைக்கு முரணான விடயங்களில் நாம்தான் ஈடுபடுகின்றோம். எனவே, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதனை நாம் தவிர்க்க வேண்டும்.
நாம் வாழ்வதற்குரிய ஒரே கிரகமான பூமியை பாதுகாக்க வேண்டியது நமது தலைமுறைக்கு நாம் செய்யவேண்டிய கடமை. இதனை கருத்திற்கொண்டு புவி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயற்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்தது காடழிப்பில் ஈடுபடாமலாவது இருப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM