மன்னார் மறை மாவட்ட புதிய ஆயர் தெரிவு தொடர்பாக நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஒரிரு ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லம் அதை மறுத்துள்ளது.

ஆயர் தெரிவில் கத்தோலிக்க திருச்சபை அதன் மரபுகளுக்கு அமைவாகவே நடைமுறைப் படுத்தவதுடன் இரகசியத்தையும் கடைப்பிடிப்பதே வழமையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறை மாவட்ட புதிய ஆயர் தெரிவு தொடர்பாக நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஓரிரு ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் இவ் செய்தியில் உண்மை இல்லையென மன்னார் ஆயர் இல்லம் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளது.

அதாவது மன்னார் மறை மாவட்ட ஆயர் தெரிவுக்காக தற்பொழுது குரு முதல்வராக இருக்கும் அருட்பணி ஏ.விக்ரர் சோசை, மடு ஆலய பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை, அருட்பணி எஸ்.ஜெயபாலன் குரூஸ், அருட்பணி தேவராஜா கொடுதோர் ஆகிய அடிகளார்களின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஆயர் இல்லம் தெரிவித்ததாக ஓரிரு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆனால் இவ் செய்தியை ஆயர் இல்லம் மறுத்துள்ளது. இது தொடர்பாக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்,

புதிய ஆயர் தெரிவில் கத்தோலிக்க திருச்சபையின் மரபுகளுக்கும் பாரம்பரியமான நடைமுறை கோட்பாடுகளுக்கும் அமைவாகவே செயல்படுகின்ற காரியமாகவும் இருக்கின்றது.

அத்துடன் இவ் செயல்பாட்டில் திருச்சபை இரகசியத்தையும் பேணி பாதுகாத்து வருவதும் வழமை. இவ்வாறு இருக்க இது சம்பந்தமான செய்தி வெளியிடப்பட்டதையிட்டு அணைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயர் தெரிவில் பாப்பரசரின் தெரிவு முற்று முழுதாக திருபீடத்தைச் சார்ந்ததாகும். இவ்வாறு இருக்க ஆயர் தெரிவு சம்பந்தமாக இங்குள்ளவர்கள் யாரையும் இங்கு எதிர்வு கூற முடியாது.

ஆகவே ஆயர் தெரிவு விடயமாக செய்திகள் வெளியிடப்பட்டதை மன்னார் ஆயர் இல்லம் மறுப்பு தெரிவிப்பதுடன் இது குறித்து மேலும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.விக்ரர் சோசை அடிகளாளர் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.