(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
நடப்பு சம்பியன் லைக்கா ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் இடையில் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 4ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
தௌஹித் ஹ்ரிடோய் குவித்த அரைச் சதம், தென் ஆபிரிக்க ஹார்டஸ் வில்ஜோன், யாழ். மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த், அதிகூடிய விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டில்ஷான் மதுஷன்க ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகள், வீரர்களின் சிறந்த களத்தடுப்பு என்பன ஜெவ்னா கிங்கிங்ஸை வெற்றிபெறச் செய்தன.
முதல் மூன்று எல்பிஎல் அத்தியாயங்களில் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் அணி, நான்வாவது எல்பிஎல் அத்தியாயத்தை வெற்றிவாகையுடன் ஆரம்பித்துள்ளது.
இவ் வருடம் முதலாவது ஆட்டநாயகன் வியாஸ்காந்த்
இப் போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் மிக அருமையான பிடி உட்பட 2 பிடிகளை எடுத்த விஜயகாந்த் வியாஸ்காந்த் முதலாவது ஆட்டநாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.
ஆடம்பரமற்ற தொடக்க விழா வைபவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைக் குவித்தது.
ஜெவ்னா கிங்ஸ் அணியல் தற்காலிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பங்களாதேஷ் வீரர் தௌஹித் ஹ்ரிடோய் 39 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றதுடன் 22 ஓட்டங்களைப் பெற்ற ப்ரியமல் பெரேராவுடன் 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
அவர்கள் இருவருடன் ஜெவ்னா கிங்ஸ் சார்பாக துடுப்பெடுத்தாடிய வீரர்களும் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ஓட்டங்களையும் அணித் தலைவர் திசர பெரேரா ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் நிஷான் மதுஷ்க, சரித் அசலன்க ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் பந்துவீச்சில் பாகிஸ்தானின் நசீம் ஷா, மதீஷ பத்திரண, சாமிக்க கருணாரட்ன, லக்ஷான் சந்தகேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்ட்ரைக்ர்ஸ் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவர் நிரோஷன் திக்வெல்லவும் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாமும் 3.4 ஓவர்களில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், பாபர் அஸாம் 7 ஓட்டங்களை மட்டுமே பெற்றார். அவரைத் தொடர்ந்த பெத்தும் நிஸ்ஸன்க ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.
இந் நிலையில் நிரோஷன் திக்வெல்லவும் நுவனிது பெர்னாண்டோவும் 4ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.
எனினும் நுவனிது பெர்னாண்டோ 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் மொஹமத் நவாஸ் 3 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.
யஷோத லன்காவும் சாமிக்க கருணாரட்னவும் ஜோடி சேர்ந்து திறமையாக துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சாமிக்க கருணாரட்ன அநாவசியமாக அவசரப்பட்டு 23 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். (121 - 6 விக்.)
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 7 ஓட்டங்கள் சேர்ந்தபோத யஷோத லன்கா (11) ரன் அவுட் ஆனதுடன் நசீம் ஷா ஓட்டம் பெறாமல் அதே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார்.
மறு பக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரமேஷ் மெண்டிஸ் 10 பந்துகளில் 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (143 - 9 விக்.)
கடைநிலை விரர் மதீஷ பத்திரண 2 பவுண்டறிகளுடன் 8 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க ஜெவ்னா கிங்ஸின் வெற்றி உறுதியாயிற்று.
பந்துவீச்சில் ஹார்டஸ் வில்ஜோன் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஜயகாந்த் வியாஸ்காந்த் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
திங்கட்கிழமை (31) மேலும் 2 எல்பிஎல் போட்டிகள் இதே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் கோல் டைட்டன்ஸை தம்புள்ள ஒளராசையும் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் பி லவ் கண்டி அணியை கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸும் எதிர்த்தாடவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM