என்.கண்ணன்
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்த சர்வகட்சிக் கூட்டம், வழக்கம்போலவே, எந்த முடிவும் இல்லாமல் முடிந்திருக்கிறது.
கடந்த புதன்கிழமை மாலை கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த சர்வகட்சிக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்க் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும், மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்குமாறும் வலியுறுத்த, சிங்களக் கட்சிகள் பல, அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் முதல் குழப்பம் ஏற்பட்டது.
அதிகாரப் பகிர்வு என்பதை தீண்டத்தகாத ஒன்றாகவே சிங்களக் கட்சிகள் பார்க்கின்றன. அதிகாரப் பகிர்வை பிரிவினையாக அர்த்தப்படுத்துகின்ற போக்கு அவர்களிடம் உள்ளது.
இத்தகைய நிலையில் 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்க விடயத்தில் சிங்களக் கட்சிகளிடம் கருத்து ஒற்றுமையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
இதுதான் நிலைமை என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றாகவே தெரியும். இந்நிலையில்தான் அவர் இவ்வாறான சர்வகட்சிக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
சர்வகட்சிக் கூட்டங்களில் இறுதியான முடிவை எடுக்க முடியாது. குழப்பங்கள் ஏற்படும், ஒரு கட்டத்துடன் அந்தக் கூட்டம் முடிவுக்கு வந்து விடும்.
அதற்கு பின்னர், அந்த விவகாரம் குறித்து அதிகம் பேச வேண்டி வராது, தன்னிடம் கேள்விகளை எழுப்புவோருக்கு, “சர்வகட்சி கூட்டத்தை கூட்டினேன், யாரும் ஆதரவளிக்க முன்வரவில்லை” என்று நழுவிக் கொள்ளலாம்.
இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம். அவரது கட்சிக்கு ஒற்றை ஆசனம் மட்டும் இருப்பதும் வசதியான ஒன்று. பொறுப்புக்கூற வேண்டிய தேவை அவருக்கு இல்லை.
அண்மையில் கூட அவர், ‘என்னால் யோசனைகளை முன்வைக்க முடியுமே தவிர, ஏனைய கட்சிகள் தான் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானிக்க முடியும்’ என கையைக் காண்பித்து விட்டுத் தப்பியிருந்தார்.
இந்தியாவுக்குப் புறப்பட முன்னர் அவர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீரவாக ஏற்றுக் கொள்ள செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்தது போன்ற கருத்தொற்றுமையை அவரால் ஏற்படுத்த முடியவில்லை.
இப்போது ஜனாதிபதி ரணில், சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டி சிக்கலை மேலும் மோசமாக்கியிருக்கிறார்.
சர்வகட்சிக் கூட்டத்தில் 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் அல்லது அதிகாரப்பகிர்வு தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.
ஏனென்றால் இது இனவாத தேசம். பேரினவாதச் சிந்தனைகளும், தமிழர்களை விரோதமாக பார்க்கின்ற போக்கும் இங்கு அதிகம். அதனை மீறி ஒரு தீர்வை எந்த சிங்களத் தலைவராலும் வழங்க முடியாது.
எந்தவொரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவது கடினம் அல்ல. ஆனால், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்ற அடையாளத்துடன் எந்த தீர்வைக் கையில் எடுத்தாலும் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள்.
இது சிங்களக் கட்சிகளின் பாரம்பரியம். இந்த வழக்கத்தை அவர்களை மாற்றவும் மாட்டார்கள், அதிலிருந்து மாறவும் மாட்டார்கள்.
இத்தகையதொரு நிலைமையில் ரணில் விக்கிரமசிங்க ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்த திட்டம் போட்டார். அந்த திட்டம் தான் சர்வகட்சி மாநாடு.
சர்வகட்சி மாநாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புக் கிளம்பும். அது அவருக்கு சாதகமான விடயம்.
ஏனைய கட்சிகள் ஒத்துழைக்காததால், சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்டிராத தன்னால், எதையும் செய்ய முடியாது என்று இலகுவாக சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
அதேபோன்று தான், தமிழ்க் கட்சிகள் மத்தியில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள கொள்கைத் தளம்பல்களை ரணில் விக்கிரமசிங்க சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
அவர் தமிழ் அரசியல்வாதிகள், கட்சிகளை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஐதேக ஆட்சியில் இருந்த காலத்தில், அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ்க் கட்சிகளைப் பயன்படுத்தி முரண்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இது அவருக்குள்ள இரண்டாவது சாதகமான விடயம்.
தமிழ்க் கட்சிகள் எந்தச் சந்தர்ப்பத்தில் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றனவோ அந்தக் கட்டத்தில் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியும்.
அதனை ஊகித்தே அவர் தமிழ்க் கட்சிகளின் கூட்டங்களையும், சர்வகட்சி கூட்டங்களையும் அடிக்கடி நடத்திக் கொள்கிறார்.
தமிழ்க்கட்சிகளுக்கு மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதும், அந்த முரண்பாடுகளின் ஊடாக தான் வெளியே வருவதும் தான் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம்.
விடுதலைப் புலிகளையும் அவர் இவ்வாறே கையாண்டார். ஆரம்பத்தில் பிரச்சினைகளை தீர்க்க பேச்சுக்களை நடத்த ஆரம்பித்து, உள் முரண்பாடுகளை ஏற்படுத்தினார். அதனால் ஆரம்பத்தில் தீர்வுக்காக நடத்தப்பட்ட பேச்சுக்கள் பின்னர் போகப் போக, பேச்சுக்கான பேச்சுக்களாக மாறியது.
புலிகளை பேச்சுக்களில் இருந்து விலகும் சூழ்நிலையை தோற்றுவித்து சர்வதேசத்தின் முன்பாக அவர்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தினார்.
அவரது அடுத்த கட்டம், புலிகளை அழிக்கும் இராணுவ நகர்வாகவே இருந்திருக்கும். சந்திரிகா முந்திக் கொண்டு அவரது அரசாங்கத்தைக் கலைத்து, தேர்தலை நடத்தியதால் ரணில் விக்ரமசிங்கவின் திட்டம் பிசகியது.
ஆனாலும், புலிகளை அழித்தல் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால இலக்கு மட்டும் நிறைவேறியது.
அதேபோன்று தான் இப்போது, அவர் சர்வ கட்சிக் கூட்டம், 13 ஆவது திருத்தம் என்று காய்களை நகர்த்துகிறார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையையும் அவர் முன்னெடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது குறித்து எல்லா கட்சிகளின் ஒத்துழைப்பை பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இவ்வாறான நிலையில் சர்வகட்சிக் கூட்டத்தில், தமிழ்க் கட்சிகள் மாகாணசபைத் தேர்தலையும், அதிகாரப் பகிர்வையும் வலியுறுத்த, கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ரணில்.
அதிகாரப் பகிர்வு வேண்டுமா? மாகாண சபைத் தேர்தல் வேண்டுமா? ஏதாவது ஒன்றை தீர்மானியுங்கள் என்று நிபந்தனை விதிக்க, இரண்டும் தேவை என்று தமிழ்க்கட்சிகள் வலியுறுத்த, ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
அந்த வாக்குவாதங்களை அடுத்து, ஜனாதிபதி ரணில் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக எழுந்து போக, வழக்கம்போலவே சர்வகட்சிக் கூட்டம், முடிவேதும் இன்றி முடிவுக்கு வந்தது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவும் 1990இல் சர்வகட்சி கூட்டத்தை தடல்புடலாக நடத்தினார்.
விடுதலைப் புலிகளின் சார்பில் யோகரட்ணம் யோகி அதில் பார்வையாளராக கலந்து கொண்டிருந்தார். அந்த சர்வகட்சி கூட்டமும் எந்த முடிவும் இல்லாமலே முடிந்தது.
அதுபோல, சந்திரிகா, மஹிந்த, மைத்திரிபால சிறிசேன என்று ஆட்சியாளர்கள் பலரும சர்வகட்சிக் கூட்டங்களை நடத்தினரே தவிர, அதன் ஊடாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இப்போது ரணில் விக்கிரமசிங்க தேர்தலா,- அதிகாரப்பகிர்வா என்று கேட்டு விட்டு, தமிழ்க் கட்சிகள் முதலில் ஒரே நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என்று பந்தை தூக்கி வீசி விட்டுப் போயிருக்கிறார்.
தமிழ்க்கட்சிகள் மத்தியில் குழப்பம் இருப்பதால் தன்னால் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறுவது தான் ரணிலின் திட்டம்.
ஆனால், அதிகாரப்பகிர்வு என்றால் மாகாண சபைகள் இருக்க வேண்டும். மாகாண சபைகள் இயங்கினால் தானே அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்த முடியும். இவ்வாறான நிலையில் அதுவா- இதுவா என்ற கேள்விக்கு இடமில்லை, அதுவும், இதுவும் வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு என்று தமிழ்க்கட்சிகள் கூறுகின்றன.
அதையெல்லாம் ஜனாதிபதி ரணில் கண்டு கொள்ளவில்லை. ஜே.ஆர் ஆட்சியில் இருந்தபோது, போரா, சமாதானமா எதற்கும் தயார் என்று தமிழர்களைப் பார்த்து சவால் விட்டார். ஆனால், ரணில் சற்று வித்தியாசமாக, தேர்தலா, அதிகாரப்பகிர்வா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தப் பிரச்சினை தீர்வதற்குள், விவகாரம் வேறொரு கட்டத்துக்குப் போயிருக்கும் அல்லது திசை திருப்பி விடப்பட்டிருக்கும்.
இதனை தான் ஆட்சியாளர்கள் எதிர்பார்க் கிறார்கள். ஏமாற்றுவதையே வழக்கமாக கொண்ட சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து நியாயமான தீர்வை எட்ட முடியாது என்ற பாடத்தை தமிழர்களுக்கு மீண்டும் கற்பிக்கப் போகிறார் ரணில்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM