(நா.தனுஜா)
அனைத்துக் கடன்வழங்குனர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த cச் செயன்முறையின் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா, கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் கூட்டு ஊடக சந்திப்பு சனிக்கிழமை (29) கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா மேலும் கூறியதாவது:
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் கடந்த 4 வருடங்களில் முதற்தடவையாகவும், எனது வாழ்வில் முதன்முறையாகவும் இலங்கைக்கு விஜயம் செய்வதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு 19 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது.
அக்காலப்பகுதியில் நவீன ஜப்பானைக் கட்டியெழுப்பிய பல முக்கிய நபர்கள் ஐரோப்பாவுக்கான தமது விஜயத்தின்போது கொழும்பிலேயே தங்கிச்சென்றனர். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் 1951 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆற்றிய உணர்வுபூர்வமான உரையை ஜப்பானியர்களால் மறக்கமுடியாது. அது சர்வதேச அரங்கினுள் ஜப்பான் மீண்டும் பிரவேசிப்பதற்கான அடித்தளமாக அமைந்தது. அப்போதிருந்து ஜப்பான் இலங்கையுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது. எதிர்வருங்காலங்களிலும் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஜப்பான் விரும்புகின்றது.
அதன்படி சனிக்கிழமை (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தேன். ஓராண்டுக்குள் அவர் ஜப்பானுக்கு இருமுறை விஜயம் மேற்கொண்டமையானது இருநாடுகளுக்கும் இடையில் ஆழமடைந்துவரும் நல்லுறவுக்கான அடையாளமாகக் காணப்படுவதாக நான் அவரிடம் கூறினேன். மேலும் ஜப்பான் - இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் அலி சப்ரியுடன் விரிவாகக் கலந்துரையாடினேன்.
இலங்கை இந்து சமுத்திரப்பிராந்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி 'சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய - பசுபிக் பிராந்தியத்தை' உறுதிப்படுத்துவதில் இலங்கை முக்கிய பங்காளியாகத் திகழ்கின்றது. அதன்படி ஜப்பான் பிரதமரால் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய - பசுபிக் பிராந்தியம்' குறித்த புதிய திட்டம் பற்றி அமைச்சர் அலி சப்ரியிடம் விளக்கமளித்தேன். அதேபோன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை தலைமைதாங்கவுள்ள இந்துசமுத்திரப்பிராந்தி ரிம் அமைப்புடனான ஜப்பானின் ஒத்துழைப்பு தொடர்பிலும் எடுத்துரைத்தேன்.
மேலும் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்ததுடன், அனைத்துக் கடன்வழங்குனர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த கடன்மறுசீரமைப்புச் செயன்முறையின் அவசியத்தை வலியுறுத்தினேன்.
ஊழல் ஒழிப்புக்கான முயற்சிகள் மற்றும் கொள்கைவகுப்புச் செயன்முறையில் வெளிப்படைத்தன்மை என்பன உள்ளடங்கலாக சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்கீழ் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையாகும். அதேபோன்று தேசிய நல்லிணக்கம் தொடர்பான இலங்கையின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்பதுடன், அம்முயற்சிகளுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்கத்தயாராக உள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை வெகுவிரைவில் மீட்சியடையும் என்றும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் மத்திய நிலையம் ஆகியவற்றை நோக்கிய பாதையில் மீண்டும் பயணிக்கும் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM