முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு ஓரிருமாதகால அவகாசத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க  அதிபரும்  முல்லைத்தீவு விமானப்படை தளபதியும் கோரிய போதிலும் அத்தோடு மக்கள் பிரதிநிதிகள் பலரும் சமரச முயற்சிகளிலில் ஈடுபட்ட போதிலும் அதை எவற்றையும் ஏற்றுக்கொள்ளாத கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை முகாமின் இரண்டாவது பிரதான வாயில் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர்.
 

தமது  காணிகளை தம்மிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பிலவுக்குடியிருப்பு கிராம மக்களை நேற்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் சி.குணபாலன் மற்றும் முல்லைத்தீவு இராணுவத்தளபதி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் ,மற்றும் மக்கள் பிரதிநிதிகளான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்,சிவசக்தி ஆனந்தன்,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாணசபை  உறுப்பினர் ரவிகரன் ,புவனேஸ்வரன்,சிவநேசன் ஆகியோர் நேரில் சந்தித்து  மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு சமரச முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும்  வெற்று வாக்குறுதிகளை விட தமது நிலங்கள்தான் தமக்கு வேண்டும் எனவும் தமது போராட்டத்தை அதுவரையில் கைவிடப்போவதில்லை என மக்கள் உறுதியாக தெரிவித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை கையளிப்பதற்காக நேற்று வருகைதருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் கிராம மக்கள் அங்கு சென்றிருந்தனர்.
எனினும் எந்தவொரு அதிகாரியும் காணிகளை அளந்து கையளிப்பதற்கு வருகைதராத நிலையில், தமது காணிகள் மீள வழங்கப்படுவது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.
இதனையடுத்து வனவளத் திணைக்களத்தினருடன் கலந்தரையாடி காணிகளை வழங்குவது குறித்து அறிவிப்பதாக தொலைபேசி ஊடாக பிரதேச செயலாளர் வழங்கிய உறுதிமொழியை ஏற்பதற்கும் மக்கள் மறுத்தனர்.
இந்த நிலையில் நேற்றுமாலை அளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகள் வன வளத் திணைக்களத்திற்கு சொந்தமானது அல்லவென்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை பிரதேச செயலாளரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் அந்த உறுதிமொழியையும் ஏற்க மறுத்த பிலவுக்குடியிருப்பு மக்கள் அங்குள்ள இராணுவ முகாமிற்கு அருகில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அந்த மக்களை சந்தித்து, மூன்று மாதகால அவகாசத்தை கோரியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் இன்று அதிகளவான பொலிசாரும் குவிகப்பட்டிருந்ததோடு அதிகளாவான போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இந்த  நிலையில்  இன்று மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பெருமளவிலான இளைஞர்கள் அப்பகுதிக்கு வருகை தந்திருந்ததோடு தம்மாளான் உணவு குளிர்ப்பானம் போன்ற உதவிகளையும் வழங்கியிருந்தனர்.

அத்தோடு குறித்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிலான பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் ஈடுபட்டுள்ளதால் இரவு நேரத்தில் அவர்களுக்கான வெளிச்ச வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு  குறித்த பிரதேசத்தை சுற்றிலும் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதால் இரவு வேளைகளில் உரிய பாதுகாப்பும் தமக்கு வழங்கப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.