(நிவேதா அரிச்சந்திரன்)
நாட்டில் சுகாதாரத்துறையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து பாவனை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றில் சூடுபிடித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிராக எதிர்கட்சி தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.
இது இவ்வாறிருக்க சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு முன்பாக சிவில் அமைப்புக்கள், சட்டதரணிகள், வைத்தியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அரச வைத்தியசாலைகள் பலவற்றுக்கு இலங்கை மின்சார சபை சிவப்பு பட்டியல் அறிவிப்பை விடுத்துள்ளது. அதேநேரம் கொழும்பு தேசிய வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளின் மின் பயன்பாட்டில் ஏதேனும் தடைகள் ஏற்படுமானால் அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது எனவும் பராமரிப்பில் இருந்து விலகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் காணப்படும் 6 அரச வைத்தியசாலைகளில் மாத்திரம் கிட்டத்தட்ட 159 மில்லியன் ரூபா மின் கட்டணம் செலுத்தப்படாமலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறிருக்க அண்மைக்காலமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிலர் மருந்து ஒவ்வாமைக் காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகள் தொடர்பிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த மே மாதமளவில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையிலும் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும் கண் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்தில் ஒருவகை கிருமித்தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் கண் சத்திர கிசிக்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியிருந்தது. நுவரெலியா வைத்தியசாலையில் மாத்திரம் சத்திரசிகிச்சைக்கு பின்னர் கிட்டத்தட்ட 10 பேருக்கு கண்பார்வை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் குறித்த மருந்து பாவனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் பேராதனை ஆதார வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ௨௧ வயது யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் பதிவானது.
செப்டிரியாக்சோன் என்ற ஒருவகை மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்ட நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து குறித்த மருந்து தரமற்றது என தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டதோடு பாராளுமன்றிலும் இந்த தரமற்ற மருந்து பாவனை தொடர்பான சர்ச்சை சூடுபிடிக்க தொடங்கியது.
காரணம் குறித்த மருந்து செலுத்தப்பட்ட மேலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன்ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். குறித்த மருந்தில் 10 வகை காணப்படுவதாகவும் இதில் வேறு ஒரு வகையினாலேயே ஏனையோர் பாதிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று இந்த மாதம் குளியாப்பிட்டி பண்டுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகார பிரிவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாத கைக்குழந்தையொன்று உயிரிழந்த சம்பவமும் பதிவானது. இதையடுத்து அகில இலங்கை தாதியர் சங்கம் தரமற்ற மருந்து பாவனையே காரணமென தெரிவித்து பணிப்புறக்கணிப்புக்கு தயாரான வேளை பின்னர் கைவிடப்பட்டது.
இதையடுத்து கடந்த வாரம் கேகாலை வைத்தியசாலையில் நுண்ணுயிர் கொல்லி மருந்து செலுத்தப்பட்ட 57 வயதுடைய நபரொருவர் உயிரிழந்த சம்பவமொன்றும் பதிவானது.
குறித்த நபரின் மரணத்துக்கான அடிப்படையான காரணங்களில் அவருக்கு செலுத்தப்பட்ட நுண்ணுயிர் கொல்லி மருந்தும் அடங்குவதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் கெஹெலிய ரம்புக்கெலவின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்பதை எதிர்கட்சி சுட்டிக்காட்டி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் தெரிவிக்கையில்,
அரச வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்து மற்றும் மருந்து பற்றாக்குறை குறித்து அரசாங்கத்துக்கு தொடர்ந்து நாம் தெரிவித்து வருகின்றோம். தரமற்ற மருந்துகளால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் ஆராய்வதற்கு பதிலாக சுகாதார அமைச்சர் சம்பந்தமில்லாத காரணங்களை தெரிவித்து வருகிறார். இதனாலேயே இவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டில் மருந்து மாபியா இடம்பெறுவதாக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ள அரச தரப்பினர் நேர்மையானவர்களாயின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்
சுகாதாரத்தறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய தேவை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் எனக்குள்ளது. மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து என்ற பல குற்றச்சாட்டுக்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தரமற்ற மருந்து என்ற பிரசாரத்தை முன்னெடுப்பதால் சுகாதார துறைக்கு பாரிய சவாலை ஏற்படுத்தும். அதேநேரம் பொதுமக்கள் மத்தியில் அரச வைத்தியசாலைகள் தொடர்பில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மக்களை தனியார் வைத்தியசாலைகள் பக்கம் திசைதிருப்பும் திட்டமாகவே இது அமைந்துள்ளது.
எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம் கொடுக்க நான் தயார். தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையின் ஒருசில முறையற்ற செயற்பாடுகளை தடுத்ததால் எனக்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன.
ராஜபக்ஷ விலகியவுடன் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதுபோல என்னை பதிவியிலிருந்து விலக்கிவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என எண்ணுகிறார்கள்.
சுகாதார துறை தொடர்பில் வெளியாகும் போலி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய விசேட கவனம் செலுத்தியுள்ளோம். 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான மருந்து வகைகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல உயிர்காக்கும் 14 மருந்து வகைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒருசிலர் இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள் என்றார்.
உயிரிழப்பு சம்பவங்களும் கெஹெலிய கூறும் காரணங்களும்
மருத்துவமனைக்கு செல்லும் சகலருக்கும் உயிர் உத்தரவாதம் வழங்க முடியாது என்ற யதார்த்தமான கருத்தொன்றை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கடந்த வாரம் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
பேராதனை வைத்தியசாலையில் பதிவான யுவதியின் மரணம்
பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஐ.வி. வகையான தடுப்பூசி நாடளாவிய ரீதியில் சகல அரச வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 145,000 க்கும் அதிகமான தடுப்பூசிகளில் 79,000 க்கும் அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பேராதனையில் உயிரிழந்த யுவதியின் மரணத்தை தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மருந்துகளில் மோசடி இடம்பெற்றுள்ளது என்றொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட மருந்து 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் ஊடாக இந்த மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறுகிய நோக்கங்களுக்காக இலவச சுகாதார துறையை பலவீனப்படுத்தும் வகையிலான போலிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
குறித்த யுவதிக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி அன்றைய தினம் 10க்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியில் பேராதனை வைத்தியசாலைக்கு மாத்திரம் 24,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11,000க்கும் அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
குளியாப்பிட்டி பகுதியில் பதிவான 4 மாத குழந்தையின் மரணம்
குளியாப்பிட்டி பகுதியில் 4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய அதேநாளில் ஏனைய 19 குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.இது தொடர்பில் ஆராய அறிக்கை கோரியுள்ளோம்.
மருந்து ஒவ்வாமை விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை ஆராய 7 பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளேன். வெகுவிரைவில் உண்மை வெளிப்படுத்தப்படும் என்றார்.
சுகாராத அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசெல குணவர்தன கூறுவது:
கேகாலை வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
குறித்த நபர் 10ஆம் திகதி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு 13 தடவைகள் நுண்ணுயிர் கொல்லி மருந்து ஏற்றப்பட்டுள்ளது. 14ஆவது முறை மருந்து ஏற்றப்பட்டபோது ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதுடன் அவர் அவசர சத்திர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் குறித்த நுண்ணுயிர் கொல்லி வழங்கப்பட்ட பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் குணமடைந்துள்ளார். எனினும் இதற்கு முன்னர் உடலில் காணப்பட்ட நோய் நிலைமையே(சிரோசிஸ்) உயிரிழப்புக்கு காரணமென பரிசோதனைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த வேளையில் பாரிய ஒத்துழைப்புகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக சுகாதார துறைக்கும் நிதியுதவிகளை வழங்கியுள்ளது.
இந்தியா பல ஆண்டுகாலமாக பல்வேறு உலக நாடுகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்கிறது. குறுகிய நோக்கங்களுக்காக இருநாட்டு நல்லுறவை குழப்ப வேண்டாமென சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும் நாட்டின் நிலையறிந்து செயற்பட வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. சுகாதாரத்துறை என்பது வெறுமனே அமைச்சர் ஒருவரின் தலையீடு என்பதற்கு மாறாக ஒட்டுமொத்த அரசாங்கமும் சம்பந்தப்படும் துறையாகும். எனவே விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரவை மாற்றுவதால் நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் ஆளுந்தரப்பும் எதிர் கட்சிகளும் இணைந்து தீர்மானிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM