அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவில் 6 இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று அண்மையில் ஏற்பட்ட மழையினால் தாழ்ந்துள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 95 பேர் அவதான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்தில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இக்குடியிருப்புக்களில் உள்ள சுமார் 10 இற்கும் மேற்பட்ட வீடுகளில் பாரிய அளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இவ் வெடிப்புக்கள் காரணமாக இங்கு வாழும் மக்கள் இரவு வேளைகளில் கடும் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். 

1926 ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்பு கடந்த காலங்களில் எவ்வித புனர் நிர்மானமும் செய்யப்படாத நிலையில் காணப்படுவாகவும் இதனால் மழைக்காலங்களில் வீட்டினுள் கூரையிலிருந்தும் பூமியிலிருந்து மழை நீர் கசிந்து வருவதாகவும், மழைநீர் காரணமாக தூக்கமின்றி பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும்,  இந்த மழைநீர் மற்றும் நீர் கசிவு காரணமாக இக்குடியிருப்பு தாழ்ந்துள்ளதாகவும் இத்தாழ்வு காரணமாக தமது குடியிருப்புக்களுக்கும், உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்து எற்பட்டுள்ளதாகவும் இக்குடியிருப்புக்களில் வாழ்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தோட்டத் நிர்வாக்த்திடமும் அரசியல் வாதிகளிடமும் தெரிவித்த போதிலும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆபத்தான நிலையில் உள்ள தமது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்ற உதவுமாறும் இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.