நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தையும் உடைத்தால் கூட அபிவிருத்திகளுக்கு பணம் போதாது எனவும் சர்வதேசத்துடன் இணைந்தே நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடவத்தை முதல் தம்புள்ள வரையிலான மத்திய அதிவேக பாதையின், 2ஆம் கட்ட  நிர்மாணப்பணிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிரியுல்ல கொடகமன பகுதியில் இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர்,

 நாட்டில் தற்போது பல வலயங்களாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரு பிரதான கட்சிகள் ஒன்றினைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சியமைத்தமையினாலே இவ்வாறான அபிவிருத்தி பணிகளை எம்மால் முன்னெடுக்க கூடியதாக உள்ளது.

கட்சிகளுக்குள் பிளவுகள் காணப்பட்டாலும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அபிவிருத்தி பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும்.

நாட்டில் இவ்வாறான பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு எங்கிருந்து முதலீடுகளை பெறமுடியும். இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளையும் உடைத்தால் கூட அபிவிருத்தி பணிகளுக்கு பணம் போதாது. நாட்டில் வேலைகளை செய்யாமல் வெற்றி பெறமுடியாது.

கட்சிகள் ஒன்றிணைந்தது போன்று உலக நாடுகளளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

கடவத்தை முதல் தம்புள்ள வரையிலான மத்திய அதிவேக பாதையின், 39.29 கிலோமீற்றர் தூரம் கொண்ட  மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான 2ஆம் கட்ட  நிர்மாணப்பணிகளுக்கு 137 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.