கிராமத்து பின்னணியில் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

விஜய் - அட்லி மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பையும்,  அதைத் தொடர்ந்து வட இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று சென்னையில் ஈசிஆர் ரோட்டில் அமைந்துள்ள பனையூரில் பூஜையுடன் தொடங்கியது. இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கெனவே, கிராமத்து பின்னணியுடன் கூடிய அரங்கு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த அரங்கில் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. விஜய் முறுக்கு மீசை கெட்டப்புடன் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்த அரங்கில் தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகிகள் இல்லாது விஜய் மற்றும் பிற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் மட்டுமே இங்கு படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 வது படமாக இதை தயாரிக்கிறது.