தோட்டங்களை விட்டு வெளியேறச்சொன்னால் தொழிலாளர்கள் எங்கே சென்று வாழ்வது ?

Published By: Digital Desk 3

24 Jul, 2023 | 04:25 PM
image

சிவலிங்கம் சிவகுமார்

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியாவிட்டால் குடியிருப்பை ஒப்படைக்க வேண்டும் என தோட்ட நிர்வாகத்தின் கடிதங்கள் தற்போது தொழிலாளர்களின் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. இது குறித்து தாம் அங்கம் வகித்து வரும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்கள் அறியப்படுத்தினாலும் அவர்களுக்கு இவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வுகளைத் தர யாரும் முன்வரப்போவதில்லை.

தற்போது பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. 22 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்களில் பதிவு செய்யப்பட்ட சுமார் ஒரு இலட்சம் வரையான தொழிலாளர்களே உள்ளனர். இவர்களில் பலர் ஓய்வூதியம் பெறவுள்ளனர்.

பல தொழிலாளர்கள் வேதனத்தைக் காரணங்காட்டி அதை விட நாட்கூலி அதிகமாக உள்ள வேறு தொழில்களில் இணைந்து வருகின்றனர். நிர்வாகங்கள் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை நாளாந்த வேதன முறையின் கீழ் தொழிலில் இணைத்துக்கொண்டாலும் போதியளவான உற்பத்தியை அவர்களால் பெற்றுத் தரமுடியவில்லை. 

இதன் காரணமாக வேறு தோட்டங்களிலிருந்தும் அல்லது வெளியாரை இத்தொழிலில் ஈடுபடுத்த சில நிர்வாகங்கள் முயற்சி எடுத்து வருகின்றன. அவ்வாறு வருகை தரும் தொழிலாளர்களை தங்க வைப்பதற்கு புதிய குடியிருப்புகள் இல்லாத காரணத்தினால் பணிக்கு சமூகமளிக்காத தொழிலாளர்களின் குடியிருப்புகளை மீளப்பெறும் நடவடிக்கைகளில் தோட்ட நிர்வாகங்கள் இப்போது இறங்கியுள்ளன. 

இந்த விவகாரத்தில் மலையகத் தொழிற்சங்கங்களுக்கு வாய் திறக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளது. ஏன் பணிக்குச் செல்லவில்லையென தொழிலாளர்களிடம் கேள்வி எழுப்பினால் அவர்கள் வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய முடியாத குறைந்த நாட்சம்பளத்தையே சுட்டிக்காட்டுகின்றனர். 

மறுபக்கம் பணி செய்யாவிட்டால் தொழிலாளிக்கு எவ்வாறு குடியிருப்பை வழங்குவது என்ற தோட்ட நிர்வாகத்தின் நெருக்குதலையும் தொழிற்சங்கங்களால் சமாளிக்க முடியவில்லை. இன்று பெருந்தோட்டப்பகுதி குடியிருப்புகளில் வாழ்ந்து வருவோரில் ஐம்பது வீதத்துக்கும் குறைவானோரே அத்தோட்டத்தில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். ஏனையோர் வேறு தொழில்களை செய்பவர்களாக உள்ளனர். இப்படி தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள் அனைவரும் தோட்டங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று நிர்வாகங்கள் கூறுமானால், தோட்டங்கள் மயானக் காடாகி விடும். அவ்வாறு தொழிலாளர்களை வெளியேறக் கூறினால் அவர்கள் எங்கு செல்வர் என்ற கேள்வியே இங்கு பிரதானமானது.

இதற்கும் பதில் இல்லாத விழிபிதுங்கிய நிலைமையிலேயே தொழிற்சங்கங்கள் உள்ளன. ஏனென்றால் சட்டரீதியாக தொழிலாளிக்கு காணி உரித்து இருந்தால் அவர்களை எவரும் எங்கும் போகச் சொல்ல முடியாது. அந்த உரிமை இல்லாமல் இருநூறு வருடங்களை கடந்த ஒரு சமூகத்திடம் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலைமைக்கு தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன. 

நிலவுரிமை பற்றிய அக்கறையின்மை காரணமாகவே இன்று தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று தோட்ட நிர்வாகங்கள் சட்டத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. நிலவுரிமை தொடர்பில் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு சாதகமான எந்த சட்டங்களும் இலங்கையில் இல்லை. கம்பனிகள் தோட்டங்களை நிர்வாகம் செய்தாலும் காணிகள் அரசாங்கத்துக்குரியவை.  1979 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1983 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க திருத்தச் சட்டங்களின் கீழ் அரச காணிகளை எந்நேரமும் மீளப்பெறலாம். 

பெருந்தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்தவரை இது மிகவும் அபாயகரமானதொரு சட்டம். தோட்டங்களில் தொழில் செய்யாவிட்டால் அக்குடியிப்புகளில் இறக்கும் வரை அவர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ வாழலாம் என எங்கேயும் சட்ட ஏற்பாடுகள் இல்லை. அதை தோட்ட முகாமையாளரே முடிவு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் லயன் குடியிருப்புகள் மாளிகைகள் அல்ல. அவற்றின் நிலைமைகளை நாடே அறியும். ஆகவே இங்கு குடியிருப்பு அல்ல பிரச்சினை. 

தொழிலாளர்களுக்கு காணி உரித்து இருந்தால் அவர்களை எவரும் வெளியேறச் சொல்ல முடியாது. அதற்காக இப்போது தொழிற்சங்கங்கள் உடனடியாக காணி உரித்தை வாங்கிக்கொடுக்கவும் முடியாது. இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதற்கு செவிசாய்க்கவோ அரசாங்கத்துக்கு நேரமில்லை. அரசாங்கத்தைப்பொறுத்தவரை இது ஒரு விவகாரமே இல்லை.

ஆனால் தொழிலாளர்களுக்கு இது எதிர்கால அச்சறுத்தலாக விளங்கப்போகின்றது. தேயிலை உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் தொழிலாளர்கள் தமது உழைப்பை வழங்க வேண்டும்.  தொழிலாளர்களை தோட்டங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளல் என்பது தோட்ட நிர்வாகங்களுக்கு சவாலான விடயம். 

ஆகவே குறைந்த சம்பளத்துடனாவது அவர்களை தக்க வைத்துக்கொள்ள இந்த குடியிருப்பு விவகாரத்தை தோட்ட நிர்வாகங்கள் கையிலெடுத்துள்ளன என்றே தெரிகின்றது. குடும்பமாக இருக்கும் தொழிலாளிகள் நகரத்திற்கு இடம்பெயர்ந்து காணி வாங்கி வீடு கட்டும் அளவில் இல்லை. இன்னும் சிறிது காலத்துக்கு குறைந்த வேதனத்துக்காக இல்லாவிட்டாலும், குடியிருப்பை பாவித்துக்கொள்வதற்காகவாவது பணிக்கு செல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தோட்டங்களை விட்டு வெளியேறச் சொன்னால் எங்கு போய் பிழைப்பது என்ற ஒவ்வொரு தொழிலாளியின் கேள்விக்கும் பதில் என்ன என்பதை அவர்கள் சந்தா செலுத்தும் தொழிற்சங்கங்கள் தான் கூற வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15