ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை 30 நாட்களுக்குள் அழித்தொழிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அதற்கான முன் நடவடிக்கையாக சிரிய இராணுவப் படையினருக்கு முதன்முறையாக அமெரிக்க கவச வாகனங்களை அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டிருக்கிறது சிரியா. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிடும் குர்திஷ்-சிரிய கூட்டுப்படைகளுடன் இணைந்து அமெரிக்காவும் ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப், பயங்கரவாதத்தை குறிப்பாக ஐ.எஸ். இயக்கத்தை முற்றாக அழிக்கப் போவதாக சூளுரைத்திருந்தார். இது தொடர்பில், அடுத்த ஒரு மாதத்துக்குள் ஐ.எஸ். இயக்கம் பூண்டோடு அழிக்கப்படும் என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.

இதையடுத்து, இராணுவ உயரதிகாரிகளுடன் ட்ரம்ப் நடத்திய ஆலோசனையின் பேரில், சிரிய கூட்டுப் படையினருக்கு கவச வாகனங்களை அளிக்க முன்வந்துள்ளார். 

ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியிருக்கும் சிரிய இராணுவம், கவச  வாகனங்களின் வருகையுடன் தமது படை புத்துணர்ச்சி பெற்றிருப்பதாகவும், எதிரிகளுடன் போரிடுவதற்கு ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.