நேர்காணல் - நா.தனுஜா
“சமஷ்டிக்கு சிங்கள அரசியல் கட்சிகள் தயாரில்லை. சமஷ்டி என்றால் பிரிவினை என்று அவர்கள் மத்தியிலும், சிங்கள மக்களிடையேயும் ஆழமாகப் பதிந்திருக்கின்றது. எனவே சமஷ்டியை எதிர்க்காவிடினும், வெளிப்படையான முறையில் சமஷ்டியை ஒரு தீர்வாகத் தருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சுவார். சிங்கள மக்களின் வாக்குகளை இழக்கநேரிடும், அனைத்து விதங்களிலும் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற எண்ணம் அதற்குக் காரணமாக இருக்கலாம்” எனதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
படப்பிடிப்பு: - எஸ்.எம்.சுரேந்திரன்
'வீரகேசரி' வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இவ்வாறு தெரிவித்த அவர், தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு, தமிழ்த்தேசிய கட்சிகள் ஒற்றுமைப்படவேண்டியதன் அவசியம், சமஷ்டி குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாடு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பகிர்ந்துகொண்டார். அவருடனான நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:
கேள்வி : பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு நீங்கள் இணங்கியிருக்கின்றீர்கள். அது முழுமையான அதிகாரப்பகிர்வாக அமையுமா?
பதில் : 13 ஆவது திருத்தத்தின் ஊடாக முழுமையான அதிகாரப்பகிர்வு எக்காலத்திலும் கிடைக்கமாட்டாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இப்போது பொலிஸ் அதிகாரங்களைத் தரமுடியாது என்று ஜனாதிபதி கூறவில்லை. மாறாக, அதுபற்றிப் பிறகு பேசிக்கொள்வோம் என்றுதான் கூறினார். அவர் அவ்வாறு கூறியதற்கு ஒரு காரணம் உண்டு. பொலிஸ் அதிகாரம் குறித்து இப்போது விவாதிக்க ஆரம்பித்து, அதனைப் பேசுபொருளாக்கினால் பின்னர் 13 ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத்தமுடியாத நிலையேற்படும். எனவே 13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரத்தை விடுத்து, ஏனைய அதிகாரங்களை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்வோம் என்றும், பொலிஸ் அதிகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றும்தான் ஜனாதிபதி கூறுகின்றார். எனவே அவர் பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டார் என்று என்னால் கூறமுடியாது.
சில விடயங்களைப் பொறுத்தமட்டில் 'இது கிடைக்கும், இது கிடைக்காது. இது இப்படித்தான் நடக்கும், நடக்காது' என்று நாம் பகிரங்கமாகப்பேசி, விவாதப்பொருளாக்கக்கூடாது. உதாரணமாக, பல வருட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைதியான முறையில், காதோடு காது வைத்தாற்போல விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்விடயத்தில் 'ஏன் இப்போது விடுவித்தீர்கள்? ஏன் முன்னர் இதைச் செய்யவில்லை?' என்று நாம் பரவலாகப் பேசினால், அது இரு பக்கமும் விவாதப்பொருளாகிவிடும். எனவே இப்போது ஜனாதிபதி சில விடயங்களை அமைதியான முறையில் படிப்படியாகச் செய்கின்றார். அவ்விடயங்களில் நாமும் குறிப்பறிந்து நடந்துகொள்ளவேண்டும். முதலில் 13 ஐப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதனை மேலும் வலுப்படுத்துவதும், வலுவிழக்கச்செய்வதும் எங்களுடைய கைகளில்தான் இருக்கின்றது.
கேள்வி : ஆனால், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் கூறப்படுவதும், வடக்கு கிழக்கில் அரங்கேறும் யதார்த்த நிலைவரமும் வெவ்வேறானவையாக இருக்கின்றன. எனவே, 13 இற்கு இணங்கிவிட்டால், பின்னர் சமஷ்டி குறித்த பேச்சுக்கே இடமிருக்காது என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து நியாயமானதல்லவா?
பதில் - ஒருபோதும் 13 ஆவது திருத்தச்சட்டம் எமது பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையாது. இருப்பினும், அரசியலமைப்பின் ஓரங்கமாக இருக்கக்கூடிய அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவதில் எந்தப் பிழையும் இல்லை. இருக்கின்ற சட்டத்தை அமுல்படுத்துவதால் எமது வருங்கால இலக்குகள் பாதிக்கப்படும் என்று கூறுவது தவறு. மாறாக, சர்வதேச சமூகத்துடனும், இராஜதந்திரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் ஊடாகவும், அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய கருத்தரங்குகளை நடத்துவதன் மூலமும் வருங்கால இலக்கான இறுதித்தீர்வை அடைந்துகொள்வதை முன்னிறுத்திய போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதற்கும், 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.
எனவே மேற்குறிப்பிட்டவாறான கருத்துக்களால் எமக்கு இதுவும் கிடைக்காமல், அதுவும் கிடைக்காமல் போகப்போகின்றது. ஏனெனில் 2018 ஆம் ஆண்டிலிருந்து மாகாண சபைத்தேர்தல்கள் நடைபெறவில்லை. அவர்கள் அத்தேர்தலைத் தொடர்ந்து நடத்தாமலேயே விட்டுவிடுவார்கள். எனவே 'எமக்கு சமஷ்டி ஒன்றே தீர்வு. நாம் வேறெதனையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்' என்று நாம் கூறிக்கொண்டிருக்கும் அதேவேளை, எமது காணிகள் பறிபோகின்றன. வட, கிழக்கு மாகாணத்தொடர்ச்சி பறிபோகின்றது. அங்கு சிங்களக் குடியேற்றங்கள் உருவாகின்றன. எனவே, இவற்றைத் தடுப்பதற்கு எமது மக்களுக்கு அதிகாரம் தேவை. ஆகவே, குறைந்தபட்சம் தற்போதுள்ள சட்டத்தின் கீழிருக்கும் அதிகாரங்களையேனும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதனால்தான் நான் 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு கூறுகின்றேனே தவிர, அதுவே தமிழ்மக்களுக்கான இறுதித்தீர்வென்று நான் ஒருபோதும் கூறவில்லை.
கேள்வி : மாகாண சபைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நீங்கள், மறுபுறம் மாகாணசபைகள் தொடர்பான ஆலோசனை சபை முறைமையைப் பரிந்துரைக்கின்றீர்கள். மாகாணசபைத் தேர்தல்களைக் காலந்தாழ்த்துவதை முன்னிறுத்தி, ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாகவே நீங்கள் இதனைச் செய்வதாக விமர்சனமொன்று முன்வைக்கப்படுகின்றதே?
பதில் : இது மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கான முயற்சி என்று கூறுகின்றீர்கள். அவ்வாறெனில் 2018 ஆம் ஆண்டிலிருந்து மாகாணசபைத்தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு நான் தான் காரணமா? எனவே இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை.
அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க எனக்கு ஒன்றைக்கூறி, அவருக்கு ஏற்றவாறு பேசவேண்டிய அவசியம் எனக்கில்லை. மாறாக, எல்லா விதத்திலும் அவருக்கு அறிவுரை வழங்கக்கூடிய நிலையிலேயே நான் இருக்கின்றேன்.
இந்நிலையில் அரசியலமைப்பின் 154 (எல்) மற்றும் 154 (எம்) ஆகிய சரத்துக்களின் பிரகாரம் மாகாணசபைகள் செயலற்று இருக்கும்போது ஜனாதிபதி சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. எனவே, அதனைப்பயன்படுத்தி மாகாணசபைகள் செயலற்று இருக்கும் இவ்வேளையில், அவற்றை மேலும் எவ்வாறு பலப்படுத்தலாம் என்று சிந்திக்கும் நோக்கிலேயே நாம் இந்த முன்மொழிவைச் செய்திருக்கின்றோம். 1987 ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை மாகாணசபைச்சட்டத்தில் பல்வேறு அதிகாரங்கள் குறைக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் இருக்கின்றன. அவ்வதிகாரங்களை மீண்டும் மாகாண சபைகளுக்கு வழங்கி, அக்கட்டமைப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்று ஆராய்வதற்கான ஆலோசனை சபை குறித்த முன்மொழிவையே நாம் முன்வைத்திருக்கின்றோம். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருக்கின்றார். எனவே, நாம் வழங்கிய யோசனையை அவர் பயன்படுத்துகின்றாரே தவிர, அவர் கூறுவதுபோல் நான் எதனையும் செய்யவில்லை.
கேள்வி : அந்த ஆலோசனை சபைக்கு நீங்கள் சிலரது பெயர்களை முன்மொழிந்திருப்பதாக அறிய முடிகின்றது. இது உண்மையா?
பதில் : ஆம், நான் அந்தப் பெயர்களை கடந்த புதன்கிழமை இரவு அனுப்பிவைத்தேன். இருப்பினும் அவர்களுடைய பெயர்கள் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட பின்னர் தான், என்னால் அப்பெயர்களை வெளியிட முடியும்.
கேள்வி : எத்தனை பேரின் பெயர்களை முன்மொழிந்திருக்கின்றீர்கள்? அதற்கான காரணம் என்ன?
பதில்:- 5 பேரின் பெயர்களை முன்மொழிந்திருக்கின்றேன். அந்த ஐவரும் வடக்கு, கிழக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் இயங்கிய காலப்பகுதியில், அவற்றில் அங்கம்வகித்து, போதிய அனுபவம் பெற்றவர்கள். எனவே மாகாணசபைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படக்கூடும், அவற்றை எவ்வாறு தவிர்க்கமுடியும் என்பன பற்றி ஆலோசனை வழங்கக்கூடியவர்கள் என்பதாலேயே நான் அவர்களது பெயர்களை முன்மொழிந்திருக்கின்றேன். அந்த ஆலோசனை சபை கூறுவதுபோன்று அரசாங்கம் செயற்பட்டால், எமக்கு சில நன்மைகள் கிடைக்கும். அவற்றைச் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார்.
கேள்வி : ஏற்கனவே அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமை உரியவாறு நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், மாகாணசபைத்தேர்தலை நடத்துவதன் மூலம் அதனை இயங்கச்செய்வது அல்லவா முதற்தேவை? இயங்குநிலையில் இல்லாதவொன்றை பலப்படுத்துவதற்கான முயற்சிகளை காலத்தை இழுத்தடிப்புச்செய்வதற்கான முயற்சியாகக் கருதலாம் அல்லவா?
பதில் : மாகாணசபைத் தேர்தல்களை நடத்தப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். அவர் முதலில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவாரா, அல்லது ஜனாதிபதித்தேர்தலை நடத்துவாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதாக அவர் உத்தரவாதம் வழங்கியுள்ளார். அவ்வாறு மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் பட்சத்தில், குறைந்திருக்கும் அவற்றின் அதிகாரங்களைக் கூட்டுவதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும், இந்நடவடிக்கை மூலம் பலப்படுத்தப்பட்ட மாகாணசபைகள் எமக்கு நன்மையைத்தான் தருமேயன்றி, தீமையைத் தராது. கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து மாகாணசபைத் தேர்தல்கள் தாமதப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை மேலும் 6 அல்லது 7 மாதங்களுக்குத் தாமதப்படுத்துவதால் எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை. எனவே ‘ஆக்கப்பொறுத்தவனுக்கு ஏன் ஆறப்பொறுக்கமுடியாது’ என்பது தான் கேள்வி.
கேள்வி : மாகாணசபைகளைப் பலப்படுத்துவது குறித்து இவ்வளவு தூரம் அக்கறைகொள்ளும் நீங்கள், வட மாகாண முதலமைச்சராகப் பதவிவகித்த காலப்பகுதியில் அப்பதவியை செயற்திறனான முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் உண்டு. உங்கள்மீது தமிழ்மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நீங்கள் பூர்த்திசெய்யத் தவறிவிட்டதாகக் கூறப்படுகின்றதே?
பதில் : அது உண்மை. சுமார் 25 வருடங்களுக்கு மேலாக சட்ட மற்றும் நீதித்துறையில் பணியாற்றிய நான், அரசியலுக்குள் புதிதாகாத்தான் பிரவேசித்தேன். எனவே கல்வி, சட்டம் சார்ந்து நான் அறிந்திருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. அதனை நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அதற்கும் மேலாக என்னோடு சேர்ந்திருந்தவர்கள் பற்றிய போதியளவு புரிந்துணர்வும் எனக்கு இருக்கவில்லை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கின்றது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. ஆனால், என்னுடன் இருந்த பலரே என்னை முன்னேறவிடக்கூடாது என்றும், என்னை இப்பணியில் வெற்றியடைய விடக்கூடாது என்றும், மாகாணசபை முறைமை வெற்றியடைந்தால் அதனுடன் நின்றுவிடும். சமஷ்டியைக் கோரமுடியாது என்றும் பலவிதமான சிந்தனைகளுடன் என்னை பல பிரச்சினைகளுக்குள் தள்ளியிருந்தார்கள்.
அவ்வாறிருப்பினும்கூட, முதலமைச்சர் என்ற ரீதியில் என்னால் இயன்ற பலவற்றைச்செய்து, அவற்றில் வெற்றிகண்டேன் என்றுதான் கூறவேண்டும்.
அப்போதைய சூழ்நிலை மற்றும் பின்னணியை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நான் செய்தவை மிகவும் சிறப்பாக அமைந்தன என்பதே என்னுடைய கருத்து. அவை எனக்குப் பெருமையையும் தன்னம்பிக்கையையும் அளித்தன. இப்போது நான் போதியளவு அனுபவம் பெற்றிருக்கின்றேன். எனவே இதுகுறித்துப் பேசுகின்றேன்.
கேள்வி : ஆனால், உங்களை அரசியலுக்குள் அழைத்துவந்த இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரைவிட்டு நீங்கள் பிரிந்தமை, தமிழ் மக்கள் உங்கள்மீது வைத்திருந்த நம்பிக்கையிலும் உங்கள் அரசியல் பயணத்திலும் சரிவை ஏற்படுத்தியிருப்பதாக உணர்கின்றீர்களா?
பதில் : நம்பிக்கை குறித்து எனக்குத் தெரியவில்லை. அது மக்களிடம் இருக்கவேண்டிய விடயம். ஆனால் தமிழ் பின்புலத்தில் வளர்ந்த என்னை கம்பன், வள்ளுவன், ஒளவையாரின் கருத்துக்கள் மிகவும் பாதித்திருக்கின்றன. அதன்படி 'மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெறும்' என்று ஒளவையார் கூறியதற்கு இணங்க, என்னை மதிக்காதவர்கள் மத்தியிலே, என்னைக் கைப்பொம்மையாக மாற்றவேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியிலே இருந்துகொண்டு என்னால் என்ன செய்யமுடியும்? எனவே அதிலிருந்து விடுபடவேண்டியிருந்தது. அதன்படி என்னை மதிக்காதவர்கள் மற்றும் நம்பாதவர்களிடமிருந்து விலகி, இப்போது என்னுடைய தனிப்பட்ட கட்சியை நான் திறம்பட நடத்திச்செல்கின்றேன்.
கேள்வி : உங்களை நம்பாதவர்களுடன் இணைந்து செயற்படமுடியாது என்று கூறும் நீங்கள், 'பிளவுபட்டும் நிற்கும் தமிழ்த்தலைமைகள் எமக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவார்கள்' என தமிழ்மக்கள் நம்ப வேண்டுமென எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
பதில் : எங்கிருந்தாலும் தமிழர்கள் கெட்டிக்காரர்கள். எனவே அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கேற்றவாறு 'இதுதான் சரி' என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பார்கள். ஆனால் 'நான் கூறுவது மட்டும் தான் சரி. மற்றவர்கள் கூறுவது, செய்வது எல்லாமே பிழை' என்று நிலைப்பாட்டை எடுக்கும்போதுதான் எமக்குள் முரண்பாடுகள் வருகின்றன. தமிழ்த்தேசிய கட்சிகள் அனைத்தும் அடிப்படையிலே சமஷ்டியைத்தான் கோருகின்றன.
ஆனால், அவற்றைக் கோருகின்ற, செயற்படுத்துகின்ற விதத்தில்தான் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த முரண்பாடுகளைத் தாண்டி, அடிப்படைத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்தி அனைத்துத் தமிழ்த்தரப்புக்களும் ஒருமித்துச் செயற்படுகின்ற காலம் விரைவில் வரும். அவ்வாறு வந்தேயாக வேண்டும். நாம் தொடர்ந்து இவ்வாறு பிரிந்திருந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. ஆகவே, எம்மத்தியில் அடிப்படையிலே எவ்வித வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இல்லை. அதன்படி வெகுவிரைவில் தமிழ்மக்களின் பிரச்சினைகளை நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அரசாங்கங்களிடம் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எங்களை வந்தடையும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு.
கேள்வி : ஜனாதிபதியிடம் இந்தியப்பிரதமர் சமஷ்டியை வலியுறுத்தவேண்டும் என்பதே ஏனைய தமிழ்த்தலைமைகளின் வேண்டுகோளாக இருக்கின்றது. இந்திய நிர்வாகக்கட்டமைப்பு முழுமையான சமஷ்டியைக் கொண்டிராத பின்னணியில், இந்தியா இலங்கையில் சமஷ்டிக்கு அழுத்தம் வழங்குமென எதிர்பார்க்கமுடியுமா? (இந்த நேர்காணல் ஜனாதிபதிக்கும் இந்தியப்பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னர் எடுக்கப்பட்டது)
பதில் : இல்லை, எதிர்பார்க்கமுடியாது. ஏனெனில், சமஷ்டி குறித்து இந்தியப்பிரதமர் மோடி பேசினால், 'தயவுசெய்து அதுபற்றிப் பேசவேண்டாம். அது எமது உள்நாட்டு விடயம்' என்று ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாகக் கூறமுடியும். இந்த நாட்டிலே எதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியாவால் கூறமுடியாது. ஆனால், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இந்தியாவால் பேசமுடியும்.
கேள்வி : சமஷ்டி குறித்து வலியுறுத்தினால் அதனை ஜனாதிபதி உடனடியாக மறுதலிக்கமுடியும் என்கிறீர்கள். அவ்வாறெனில், ரணில் விக்கிரமசிங்க சமஷ்டிக்குத் தயாரில்லை என்று கூறுகின்றீர்களா?
பதில் - சமஷ்டிக்கு சிங்கள அரசியல் கட்சிகள் தயாரில்லை. சமஷ்டி என்றால் பிரிவினை என்று அவர்கள் மத்தியிலும், சிங்கள மக்களிடையேயும் ஆழமாகப் பதிந்திருக்கின்றது.
இதற்கு போதியளவு புரிதலின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. சமஷ்டி என்றால் என்னவென்று ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரிந்தாலும்கூட, இவ்விடயத்தில் மக்களுடைய எண்ணங்களையும் அவர் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. எனவே சமஷ்டியை எதிர்க்காவிடினும், வெளிப்படையான முறையில் சமஷ்டியை ஒரு தீர்வாகத் தருவதற்கு ரணில் விக்கிரமசிங்க அஞ்சுவார். சிங்கள மக்களின் வாக்குகளை இழக்கநேரிடும், அனைத்து விதங்களிலும் தோல்வியைத் தழுவநேரிடும் என்ற எண்ணம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
கேள்வி - 'கோட்சூட்' அணிந்த ஜனநாயகவாதியாக நோக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் அண்மையகால நடவடிக்கைகள் ('அரகலய' போராட்டம் மீதான அடக்குமுறைகள், பயங்கரவாதத் தடைச்சட்டப் பிரயோகம் உள்ளிட்டவை) அவருக்குள் சர்வாதிகாரம் குடிகொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கின்றது அல்லவா?
பதில் : ஒருவர் நல்லவராக இருக்கும்போது அவர் அடுத்தடுத்த கட்டங்களில் எவ்வாறு செயற்படுவார் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும். எனவே, அவர் நல்லவர் என்ற முறையிலே சில நடவடிக்கைகளை எடுக்கும்போது, அடுத்தகட்டம் குறித்து எதிரிகள் தெரிந்துகொண்டு, அதற்கு முட்டுக்கட்டையாக செயற்படுகையில் அவரது முன்னேற்றம் தடைப்படுகின்றது. சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவற்றை எடுத்துத்தான் ஆகவேண்டும். ஜனாதிபதி செய்தவற்றை நான் சரியென்று கூறவில்லை. ஆனால், அவர் அழுவதுபோன்று கூறிய விடயங்கள் எனக்கு நினைவிருக்கின்றன. 'எங்கும் இல்லாத பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் வைத்திருந்தேன். அவ்வளவு புத்தகங்களையும் எரித்துவிட்டார்களே' என்று கூறினார். அது அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. நல்லவர்களும் சிலசமயங்களிலே கெடுதியான செயல்களில் ஈடுபடநேர்கின்றது. எனவே, ரணில் விக்கிரமசிங்கவின் கல்வி, அவரது பின்னணி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவர் ஒரு ஜனநாயகவாதியாகத்தான் தென்படுகின்றார். 'பட்டலந்த முகாமை' நினைத்தால் எமக்குப் பெரும் மனவருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், அந்தக் காலகட்டத்தையும் நாம் பார்க்கவேண்டும். ஒருவர் எல்லா சூழ்நிலைகளிலும் ஒரேவிதமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.
கேள்வி : அப்படிப்பார்த்தால் ஹிட்லரையும், அவரது செயற்பாடுகளையும்கூட நியாயப்படுத்திவிடலாம் அல்லவா?
பதில் : நிச்சயமாக. ஆனால், ஹிட்லர் ஜனநாயகமுறையில் தெரிவாகி, பின்னர் தனது தனிப்பட்ட குரோதங்களை வெளிக்காட்டத் தொடங்கினார். ஹிட்லரின் பக்கத்திலிருந்து பார்த்தால் அவை சரியாக இருக்கக்கூடும். ஆனால், நாம் எக்காலத்திலும் அவற்றைச் சரியென்று கூறமுடியாது. ஜனாதிபதியின் விடயத்திலும், அவர் செய்த பிழைகளை நான் சரியென்று கூறவில்லை. மாறாக இத்தகைய சூழ்நிலைகளில் நாம் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் என்னவென்றுதான் கூறினேன்.
கேள்வி : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் மனிதப் புதைகுழிகளை எவ்வாறு கையாள வேண்டும்?
பதில் : இம்மனிதப்புதைகுழிகளை அகழ்வதற்கு போதிய நிதி இல்லை என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இதுபற்றிப் பேசப்பட்டது. எனவே மனிதப்புதைகுழி அகழ்வுக்கு அவசியமான நிதியை வழங்குவதாக ஜனாதிபதி உத்தரவாதம் அளித்திருக்கின்றார். அதேபோன்று இந்நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தேன். இருப்பினும் அதற்குப் பதில் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
எது எவ்வாறெனினும், இவற்றைச் செய்தவர்கள் யார் என்ற உண்மை வெளியே வருவது ஜனாதிபதிக்கு நன்மையைத் தரும் என்று நான் கருதுகின்றேன். இம்மனிதப்புதைகுழிகள் பற்றிய விசாரணைகள் உரியவாறு மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் முடிவுகள் வெளியாகும்போது அதில் ஜனாதிபதிக்குத் தொடர்பில்லை என்பதும், வேறு யாருக்குத் தொடர்புண்டு என்பதும் வெளியானால், அதன் தாக்கம் அடுத்துவரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது.
கேள்வி : இந்த நேர்காணல் வெளியாகும் தினத்தன்று, 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி 40 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இன்னமும் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் அடையப்பட்டுள்ள தோல்விக்குக் காரணம் என்ன?
பதில் : எங்களுடைய வரலாறு சிங்கள மக்களுக்கு சரியாகப் புகட்டப்படவில்லை. எப்போது எங்களுடைய வரலாறு அவர்களுக்கு சரியாகப் புகட்டப்படுகின்றதோ, எப்போது அவர்கள் அதனைச் சரியாகத் தெரிந்துகொள்கின்றார்களோ, எப்போது அவர்களுக்குத் தமிழ்மக்கள்மீது இருக்கும் அசூயை அகழ்கின்றதோ, அப்போது சிங்கள, - தமிழ் மக்களிடையே சுமுகமான முறையில் நல்லுறவு கட்டியெழுப்பப்படும்.
ஆனால், அதற்கு எம்முடைய வரலாறு மீண்டும் எழுதப்படவேண்டும். இதனை நான் ஜனாதிபதியிடமும் கூறியிருக்கின்றேன். சரித்திர ஆசிரியர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்து, அதனைச் செய்வோம் என்று அவரும் கூறியிருக்கின்றார். அது சாத்தியமானால், தமிழ்மக்களின் உண்மையான வரலாற்றை சிங்கள மக்கள் சரியாக அறிந்தால், அவர்களது மனங்களிலே மாற்றம் ஏற்படக்கூடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM