சதீஷ் கிருஷ்ணபிள்ளை
சிங்கப்பூரைப் பார்த்து பொறாமைப்படாத நாடுகளே இல்லை எனலாம். ‘எமது தேசத்தை சிங்கப்பூராக்கிக் காட்டுவேன்’ என்று அரசியல்வாதிகள் பெருமை பேசுவார்கள். சிங்கப்பூர் பிரபலம் பெற்றது, அதன் அபரிமிதமான வளர்ச்சியால் மாத்திரம் அல்ல. அதற்கு வழிவகுத்த ஆட்சி நிர்வாக முறையாலும் தான்.
அரசியல் இழுபறிகளோ, விவகாரங்களோ இல்லாத நாடு சிங்கப்பூர் என்பார்கள். இதுவே சிங்கப்பூரின் வணிக அடையாளமாகவும் திகழ்கிறது. உலக நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தூய்மையான அரசியல் மீது நம்பிக்கை வைத்து போட்டி போட்டிக் கொண்டு சிங்கப்பூரில் முதலீடு செய்வார்கள்.
இப்போது சிங்கப்பூரின் மீது கண்பட்டு விட்டதோ தெரியவில்லை. அடுத்தடுத்து அரசியல் விவகாரங்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கள். இவை ஆட்சி அதிகாரத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்துள்ளது போன்றதொரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது.
முதலில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் ஆகியேர் மீதான குற்றச்சாட்டு.
இவர்களின் பிரச்சினை கடந்த மே மாதம் தலைதூக்கியது. இவர்கள் வாடகைக்கு பெற்ற காலனித்துவ ஆட்சிகால பங்களாக்கள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி கேட்டார்.
இரு அமைச்சர்களுக்கு எந்த அடிப்படையில் ஆகவும் குறைந்த வாடகைக்கு பங்களாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது கேள்வியின் சாராம்சம். விவியன், கே.சண்முகம் பற்றி விசாரிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டார். விசாரணைகளின் முடிவில் இருவரும் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டது.
இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு இன்னொரு அமைச்சருக்கு வழங்கப்பட்டதால், விசாரணையின் பெறுபேறுகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஒரு அமைச்சர் குற்றம் செய்திருந்தால், அதனை மற்றொரு அமைச்சர் ஒப்புக் கொள்வரா, பகிரங்கமாக வெளிப்படுத்துவாரா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
அடுத்து, போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு. இவருடன் வணிகப் பெரும்புள்ளியான கோடீஸ்வரர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் மீதான விசாரணை மிகவும் வெளிப்படையானதாக இருக்கும், எதுவும் மறைக்கப்பட மாட்டாதென சிங்கப்பூரின் துணைப்பிரதமர் அறிவித்தார்.
இருந்தபோதிலும், இருவரும் கைது செய்யப்பட்ட இரு நாட்கள் கழித்தே கைது பற்றி செய்தி ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் ஈஸ்வரன் செல்வாக்கான அரசியல்வாதி. கொவிட் நெருக்கடிக்குப் பின்னர் சிங்கப்பூரை விமான மற்றும் கப்பல் போக்குவரத்து கேந்திரமாக மாற்ற பாடுபடுபவர்.
சிங்கப்பூரின கடந்த 40 வருடகால அரசியல் வரலாற்றில் இவருக்குமுன் எந்தவொரு அமைச்சரவை அமைச்சரும் ஊழல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதில்லை.
இப்போது அடுத்ததாக சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகரின் பதவி விலகல். அவர் பதவி துறக்க வேண்டுமென தாம் தீர்மானித்ததாக பிரதமர் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் டான் சுவான் ஜின்னின் பிரச்சினை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு. இவர் பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் உறவில் இருந்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது.
சபாநாயகருக்கு 54 வயது. அவர் திருமணமானவர். இவருக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த செங் லி ஹூயி என்ற பெண்ணுடன் இருக்கும் உறவு சகலரும் அறிந்த விடயம்.
தனித்து வாழும் ஹூயி உடன் கொண்டுள்ள முறைகேடான உறவை நிறுத்துங்கள் என்று கடந்த பெப்ரவரி மாதமே பிரதமர் எச்சரித்திருந்தார். இருவரும் கேட்கவில்லை. மாறாக, எதுவித காரணங்களையும் தெரிவிக்காமல், இருவரும் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்தார்கள்.
இந்த மூன்று விவகாரங்களும் சிங்கப்பூரில் தீவிர பேசுபொருளாக மாறி, அரசியலை ஆட்டிப் படைப்பதற்கு காரணங்கள் உண்டு.
இவை சுதந்திர சிங்கப்பூரை 1959ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சி செய்து வரும் மக்கள் செயற்பாட்டு கட்சியின் (பிஏபி) அரசியல் திடசங்கற்பத்துடன் தொடர்புபட்டவை. இன்று பல நாடுகளும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு சிங்கப்பூர் உயர்ந்திருக்கிறது என்றால், அதன் வளர்ச்சிக்குரிய பிரதான காரணம் பிஏபி அரசாங்கத்தின் கொள்கைகள்.
தமது எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் மிகவும் ஒழுக்கமுள்ளவராக இருக்க வேண்டும் என்பதில் பிஏபி கட்சி மிகவும் உறுதியாக இருக்கிறது. இந்த உறுதிப்பாட்டை பேணுவதற்கு கட்சிக்குள் கடுமையான விதிமுறைகள் இருக்கின்றன. இவை தீவிரமாக அமுலாக்கப்பட்டும் வருகின்றன. பிஏபி கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ஒருவர் கூறியதைப் போல, இந்தக் கட்சியில் சேர்வது பாதிரியாராக துறவறத்தில் இணைவதற்கு ஒப்பானது என்பார்கள்.
சிங்கப்பூரின் அரசியல் கறைபடியாததாக இருந்ததாயின், ஆளும் கட்சியின் இறுக்கமான கொள்கைகளால் கட்டியெழுப்பபட்ட தூய அரசியல் கலாசாரமே காரணம். ஆளும் கட்சி அரசியல் சட்டப்பேறு (Political Legitimacy) என்ற பதத்தை அடிக்கடி உபயோகப்படுத்துவது வழக்கம். அதாவது, அரசியல் ரீதியாக ஏற்புடைய தன்மை.
தூய்மையான மற்றும் ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுத்தால் மாத்திரமே மக்கள் தமது கட்சியை அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பிஏபி தாரக மந்திரமாக கொண்டுள்ளது.
இந்தக் கட்சி நேர்மை, நாணயம், நன்னெறி ஆகிய நற்குணங்களுடன் ஆட்சி செய்வதற்கு பெயர் பெற்றுள்ளதால், கட்சியின் மீது சிங்கப்பூர் மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
வேறு நாடுகளைப் போலல்லாமல், சிங்கப்பூரில் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் கௌரவமாக மதிக்கப்படுதற்கு இதுவே காரணம். வேறு நாடுகளைப் போலல்லாமல் அரசியல்வாதிகள் உயர்ந்த சம்பளம் பெறுவதற்கும் இதுவே காரணமாக உள்ளது.
எவரும் ஊழல் செய்து பணம் ஈட்ட முயலக்கூடாது என்பதற்காகவும், சிறந்த திறமைகளை ஈர்ப்பதற்காகவும் சிங்கப்பூரில் அரச உத்தியோகத்தர்களுக்கு ஆகக் கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது.
அந்நாட்டில் அமைச்சர் ஒருவருக்கான சம்பளம் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டொலர்களை எட்டுகிறது. அமெரிக்க டொலரின் அடிப்படையில ஆராய்ந்தால், அமைச்சரின் வருடாந்த சம்பளம் 822,000 டொலர்கள்!
இத்தகைய பின்புலத்தில், அடுத்தடுத்து நிகழும் ஊழல் மோசடி பிரச்சினைகள் சிங்கப்பூர் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன என்றால், அது மிகையில்லை. இந்த மக்கள் அரசியல் பிரச்சினைகளை அறியாதவர்கள்.
சமீபத்திய ஊழல் மற்றும் ஒழுக்கமீறல் பிரச்சினைகள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமையப் போவதில் சந்தேகம் இல்லை. இந்தப் பிரச்சினைகளை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது என்பது முக்கியமானது.
இவை பற்றி பிரதம மந்திரி லீ ஹ்சியென் லூங் பெரிதும் அலட்டிக் கொள்வதற்காக தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒன்றின் மேலாக ஒன்று குவிவது உண்டு தான் சரியானதை சரியான இடத்தில் வைத்து, இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
ஆளும் பிஏபி கட்சியின் மற்றொரு பலம் இது தான். தமது உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சினை இருக்கிறதென கண்டறிந்தால், முறையான ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி, உரிய தீர்வு காணக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கை ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு உண்டு.
இந்த நம்பிக்கை எதில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பது முக்கியமானது. குற்றமொன்றிற்காக விசாரிக்கப்படும் நபர் பலம் பொருந்திய அமைச்சராக இருக்கலாம். அவரை விசாரிப்பதற்குரிய முறையான பொறிமுறையொன்று அரசாங்கத்தில் உள்ளது என்பதன் அடிப்படையிலான நம்பிக்கையாக இருந்தால் அது ஆரோக்கியமானது.
மாறாக, மக்கள் தம்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தாம் சரியாகத் தான் விசாரிப்போம் என்ற மமதையின் அடிப்படையிலான நம்பிக்கையெனில், அது சரியானதாக அமையாது. இது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமையும். மக்கள் அரசாங்கத்தின் மீதும், ஆளும் கட்சியின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடும்.
இதில் உள்ள பிரச்சினை யாதெனில், தற்போது சிங்கப்பூர் முக்கியமான அரசியல் நிலைமாற்றத்தை நோக்கி நகர்கிறது. கடந்த 19 வருடங்களாக பிரதமராக கடமையாற்றும் லீ-யிற்கு இப்போது 71 வயது. அவர் ஓய்வு பெறுவது பற்றி அடிக்கடி பேசி வந்தார். சிங்கப்பூரின் அரசியல் தலைமைத்துவத்தை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் ஆர்வம் காட்டினார்.
இன்று அரசியல் பிரச்சினைகள் ஆளும் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உலுக்கியுள்ள பின்புலத்தில், அவரது திட்டம் சற்றுத் தாமதமாகியிருப்பதாக தெரிகிறது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அடுத்தாண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போவதில்லையென கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளாரெனின், ஆளும் கட்சியின் இருப்பு பற்றி அவரும் அச்சம் கொண்டுள்ளார் என்பது தானே அர்த்தம்?
இந்த விவகாரங்கள் ஆளும் கட்சியை ஓரங்கட்டச் செய்து, எதிர்க்கட்சிகளுக்கு பாதை அமைத்துக் கொடுக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், இதற்காக ஆளும் கட்சி அதிக விலையை செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதே உண்மை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM