இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையின் போது அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கல் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தின் அவசியம் தொடர்பிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கின்றார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டமானது இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. மாகாண சபை முறைமையானது அரைகுறை அதிகாரத்துடன் செயற்படுத்தப்பட்டதே தவிர முழுமையான அதிகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில்தான் தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் தொடர்பிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று ஒரு வருடம் தற்போது கடந்து விட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி அவர் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். ஜனாதிபதியாக அவர் பதவியேற்றதையடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்பட்ட 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அரசியல் கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த டிசம்பர் மாதமும் ஜனவரி மாதமும் இரண்டு தடவைகள் சர்வகட்சி குழுக் கூட்டமும் இடம்பெற்றிருந்தன. இதனை விட இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுடனும் அரசாங்கத் தரப்பினர் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று பெப்ரவரி மாதம் நடைபெற்ற இரண்டாவது சர்வகட்சி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி வழங்கியிருந்தார்.
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தாது தொடர்ந்தும் செயற்பட முடியாது. அரசியலமைப்பில் உள்ள விடயத்தை நடைமுறைப்படுத்தாது விட்டால் அது குறித்து சர்வதேச சமூகம் எம்மிடம் கேள்வியெழுப்பும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களுடன் அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடி இருந்தனர். ஜனாதிபதியின் அறிவிப்பு மற்றும் இத்தகைய கலந்துரையாடல்கள் 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தக் கூடிய சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
ஆனாலும் பௌத்த பீடங்களின் எதிர்ப்பு மற்றும் பௌத்த பிக்குகளின் போராட்டம் என்பவற்றையடுத்து 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை. மாறாக தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் அற்ற ஏனையவற்றை அமுல்படுத்துவதற்கு தயார் என்றும் இதற்கும் பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் கடந்த 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்பில் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து ஏனைய அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும். 13ஆவது திருத்தச் சட்டத்தின் முதலாம் இலக்கப் பட்டியலின் ஏற்பாடுகளும் 3ஆம் இலக்க பட்டியலின் ஒரு சில ஏற்பாடுகளும் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று அறிவித்திருந்த ஜனாதிபதி தற்போது பொலிஸ் அதிகாரமற்ற ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பது அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது.
பொலிஸ் அதிகாரமற்ற மாகாண சபை முறைமையை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது. அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், இந்த விடயங்கள் தொடர்பில் விளக்கம் அளித்திருக்கின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனும் அதிகாரப் பரவலாக்கல் என்று கூறி எம்மை ஏமாற்ற முயலவேண்டாம் என்றும் இனிமேலும் பொறுமை காக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஓரளவுக்கு அதிகாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகவுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதும் பொறுப்புக்கூறல் விடயத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து நடவடிக்கைகளை எடுப்பதுமே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.
இதனை முன்னிறுத்தியே வடக்கு, கிழக்கு தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பின்போது திட்டவரைபொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கின்றார். அந்த திட்டவரைபை அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய நோக்கமாகவுள்ளது. தற்போதைய நிலையில் அதற்கு அப்பால் செல்வதற்கு ஜனாதிபதி விரும்பவில்லையென்றே தெரிகின்றது.
உண்மையிலேயே தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வையே கோரி நிற்கின்றனர்.
கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தில் பேரழிவுகளை சந்தித்த தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை கோரி நிற்கின்றனர். அது கௌரவமானதாக அமைய வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. அத்தகைய ஒரு தீர்வை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் தலைவர்களது கோரிக்கையாகவுமுள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக் கூடிய முழுமையான தீர்வு சாத்தியமா என்ற விடயம் தொடர்பிலும் ஆராயவேண்டியுள்ளது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததையடுத்து நான்கு பௌத்த பீடாதிபதிகளும் அதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதத்தையும் அனுப்பியிருந்தனர். போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில் அடுத்தகட்டமாக நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ள வேளையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமஷ்டி தீர்வு குறித்து ஆராய்வதற்கு ஒருபோதும் தயாராகப் போவதில்லை. அதற்கான சாத்தியப்பாடுகளும் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை.
தற்போதைய நிலையில் கிடைப்பதை பெற்றுக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி செல்வதற்கு முயலவேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துமாறு கோருவதுடன் அதனை மேற் கொள் வதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும்.
அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும். இதனைவிடுத்து அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து இருப்பதையும் இழப்பதற்கு முனையக்கூடாது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலையில் யதார்த்ததை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM