இது போதுமானதல்ல… சரியான சூழலை உருவாக்குங்கள்! 

Published By: Vishnu

23 Jul, 2023 | 01:02 PM
image

(ரொபட் அன்டனி) 

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்ட நெருக்கடிகளை பார்க்கும்போது தற்போது நிலைமை மீட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.    ஆனால் சவால்கள், நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பல சவால்களை அடுத்த வருடத்திலும் இந்த வருடத்தின் இறுதி பகுதியிலும் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர். நிதி  ஸ்திரத்தன்மை, விலை ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல்வேறு சவால்கள்  நீடிக்கின்றன. சர்வதேச நாணய நித்தியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவி திட்டத்தின் கீழ் இலங்கை சென்றிருப்பதால் தற்போது சர்வதேச மட்டத்தில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. 

தொடரும் சவால்கள் 

அதனடிப்படையில் சர்வதேச நிதி நிறுவனங்கள் புதிய கடன்களை வழங்குவதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் தற்போது பல பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  வெரிட்டே ரிரிசேர்ச் அமைப்பு செய்திருக்கின்ற அண்மைய ஆய்வின்படி இலங்கை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய 100 உறுதிமொழிகளில் இதுவரை 33 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆனாலும் கூட இன்னும் நிலைமை சவால் மிக்கதாகவே இருக்கின்றது.  இதுவரை இலங்கையும் சர்வதேச கடன்களை மீள் செலுத்துவதற்கு ஆரம்பிக்கவில்லை.  கிட்டத்தட்ட 42 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்யவேண்டிய நிலைமையில் இலங்கை இருக்கின்றது.  அதில்   17 பில்லியன் டொலர்களை இலங்கை மறுசீரமைப்பு   செய்யவேண்டும்.   கடன்களை மீள் செலுத்த ஆரம்பிக்கும்போது  மேலும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியேற்படலாம். 

டொலர் வருகையில் தங்கியுள்ள மீட்சி 

எப்படியிருப்பினும் கடந்தகால நெருக்கடி மற்றும் எதிர்கால மீட்சி செயற்பாடுகள் அனைத்துக்கும்  அடிப்படையாக அமைவது டொலர் உள் வருகையாகும்.  அதாவது சர்வதேச வர்த்தகங்களை செய்யக்கூடிய நாணயமான டொலர் இலங்கைக்குள் வரும் பட்சத்திலேயே இந்த நிலைமையை சீர்செய்ய முடியும்.  

டொலர் இலங்கைக்குள் வருவது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பாரிய சரிவை சந்தித்ததன் காரணமாகவே   நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டது. நாட்டில்  தீர்மானம் எடுக்கும் தரப்பினரால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட பல தவறான தீர்மானங்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று   உள்ளிட்ட பல காரணங்களை  இதற்கு கூறிக்கொண்டு போகலாம்.  

 டொலர்களை உள்கொண்டுவர பல மூலங்கள் காணப்படுகின்றன. பிரதானமாக இலங்கையின் ஏற்றுமதி வருமானம் காணப்படுகிறது.  வருடம் ஒன்றுக்கு  இலங்கை ஏற்றுமதி வருமானத்தின் ஊடாக கிட்டத்தட்ட 12 பில்லியன் டொலர்களைப் பெறுகிறது.  அடுத்ததாக மிகப்பெரிய டொலர் வருமானமாக வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற  அந்நிய செலாவணி காணப்படுகிறது. 

கிட்டத்தட்ட வருடம் ஒன்றுக்கு ஆறு பில்லியன் டொலர்  அளவில் இதன்மூலம் கிடைக்கின்றது.  கடந்த காலங்களில் அது குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. அடுத்ததாக சுற்றுலாத்துறை ஊடாக    கிட்டத்தட்ட வருடம் ஒன்றுக்கு ஐந்து பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆற்றல் இலங்கைக்கு காணப்படுகிறது.  கடந்த காலங்களில் அது கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது அந்த துறையும் மீண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.  

நேரடி முதலீடுகள் 

அதேபோன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இங்கு முக்கியமாக அமைகின்றன.  இந்த கட்டுரையில் நாம் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் தன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாகவே ஆராய்கின்றோம்.  வெளிநாட்டு நேரடி முதலீடுகள் என்பது   சர்வதேச  நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை செய்வதை குறிக்கின்றது.

இலங்கையில் காணப்படுகின்ற    மனித வளம்,  நீர் வளம்,  மண்வளம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை பயன்படுத்தி இலங்கையில் பல நாடுகள் முதலீடுகளை செய்யும்.    இலங்கையில்  பொருட்களை உற்பத்தி செய்து இலங்கையிலே விற்பனை செய்யும்,  அல்லது இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்.  இதனூடாக இலங்கைக்கு வரி வருமானம் அதிகரிக்கும்.  அதேபோன்று தொழில்வாய்ப்புக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும். பொருளாதார செயற்பாடுகள் விரிவடையும்.  

போதுமானதல்ல 

எனினும் கடந்த காலங்களை எடுத்து நோக்குகையில் இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடு போதுமான அளவு வரவில்லை.  2018 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு பில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. ஏனைய காலங்களில் ஒரு பில்லியன் டொலர் அளவிலேயே  முதலீடுகள் அமைந்துள்ளன. இது மகிழ்ச்சி அடையக்கூடிய நிலைமையான அந்த புள்ளி விபரங்கள் அல்ல.  

இலங்கை ஆடை ஏற்றுமதி துறையில் கடந்தகாலங்களில் சிறந்து விளங்கியது. காரணம்  இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி எஸ் பி பிளஸ் பிளஸ் வரி சலுகை கிடைத்திருக்கிறது.  அதன் காரணமாக இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடையுற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் போது வரி தீர்வை கிடைக்கிறது.  எனவே பல சர்வதேச நாடுகள் இலங்கையில் வந்து ஆடைத் துறையில் முதலீடு செய்கின்றன.   

எனினும்  வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஊடாக இலங்கையில் அடையப்படும் வருமானம் டொலர்களாக   மாற்றப்பட்டு  குறிப்பிட்ட நாடுகளுக்கு மீண்டும் எடுத்து செல்லப்படுவதாகவும் எனவே அதில் ஒரு பாதகமான நிலைமை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும்கூட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஒரு நாட்டுக்கு முக்கியத்துவமிக்கதாக அமைகின்றன. 

அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.  முக்கியமாக குறித்த வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் உழைக்கின்ற நிதியை மீண்டும் அந்த துறையிலேயே முதலீடு செய்வதற்கான ஒரு சாத்தியமும் காணப்படுகிறது. எப்படியோ சர்வதேச வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அவசியமானதாகவே உள்ளன. 

முதலீடுகளை கவர என்ன செய்வது? 

அதாவது வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இலங்கையில் அதிகரிப்பதற்கு தேவைகள் நிறைவேற்றப்படவுள்ளன.  முக்கியமாக முதலீடுகளை செய்வதற்கான ஒரு சூழல் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும். வர்த்தக பாதுகாப்பு,  வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான இலகுத்தன்மை,    சட்ட தேவைகளை நிறைவேற்றிக் , கொள்வதற்கான இலகு தன்மை என பல தேவைகள் காணப்படுகின்றன.

ஊழல் மோசடியற்ற ஒரு சூழலும்   தேவையாக இருக்கின்றது.  இவற்றை நிறைவேற்றும் பட்சத்தில்  நிச்சயமாக வெளிநாடுகளில் இருந்து நேரடி முதலீடுகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை உருவாக வேண்டும். நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதன் ஊடாகவே இதனை முன்னேற்ற முடியும்.  

அரசாங்கம் என்ன கூறுகிறது? 

இதுதொடர்பில்  பதில் முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சர் திலும் அமுனுகம பல விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை முதலீட்டு சபை 211 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் 682 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகள், இலங்கை முதலீட்டு சபை அங்கீகாரம் வழங்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் பதில் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்   முதலீடு செய்யும்போது நீண்டகாலமாக  பின்பற்றப்பட்டுவரும் சட்டக் கட்டமைப்பை திருத்த வேண்டியுள்ளதோடு, முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்வதற்கான பின்னணியை உருவாக்க வேண்டும். மேலும், இந்த நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் உரிமையைப் பெறுவதில்லை. இதற்கு ஒரு தீர்வாக, அவர்களின் முதலீட்டு உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பதில் அமைச்சர் குறிப்பிடுகிறார். 

அவசர நடவடிக்கை 

எப்படியிருப்பினும் புள்ளி விபரங்களை பார்க்கும்போது இலங்கைக்கு கிடைக்கின்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகள் போதுமானதாக இல்லை. அவை அதிகரிக்கப்பட வேண்டும்.  அவற்றின் ஊடாகவே இலங்கை   சர்வதேச பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய முடியும்.  டொலர் உள்வருகையை அதிகரித்துக் கொள்ளலாம்.   வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஊடாக டொலர் உள்வருகை, புதிய தொழில்வாய்ப்புக்கள், பொருளாதாரம் விரிவடையும் தன்மைக்கான சூழல் உருவாகின்றது.   

கடந்த காலங்களில் டொலர் பற்றாக்குறை  காரணமாக எரிபொருள்,  பால்மா,  எரிவாயு கிடைக்காமல் இறக்குமதியில் நெருக்கடியை சந்தித்தோம்.    டொலர் உள்வருகையில்  தடைகள் ஏற்படும் பட்சத்தில் நிச்சயமாக நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும்.  எரிபொருள் எரிவாயு  என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் நாட்டின் முழு பொருளாதார கட்டமைப்புமே நெருக்கடிக்கு உள்ளாகிவிடும். அதனால் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் என்பது இந்த இடத்தில் எவ்வளவு முக்கியத்துவமிக்கது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

முதலீட்டு  சூழல் அவசியம் 

அரசாங்கம் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கான சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும். முதலீட்டாளர்கள் இலங்கையில் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பது தொடர்பாக  கவனிப்பது  மிக அவசியமாகும். ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கக்கூடாது.

வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் பத்து பில்லியன் டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக இலங்கை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடையும். மிகமுக்கியமாக வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தங்களும் உள்வீட்டு சவால்களும்

2025-04-23 17:50:20
news-image

புதுப்பிக்கப்பட்ட கூட்டணி ; அண்ணா தி.மு.க.வுக்கு...

2025-04-23 09:36:25
news-image

மூன்று மாத கால அவகாசத்தில் இலங்கை...

2025-04-22 14:14:15
news-image

ஒரு துறையைத் தவிர ஏனைய சகல...

2025-04-22 12:13:58
news-image

முதுமையில் இளமை சாத்தியமா?

2025-04-22 09:36:33
news-image

அடுத்த பாப்பரசர் யார் ? பிரான்சிஸின்...

2025-04-21 17:34:19
news-image

பாப்பரசரின் மறைவுக்குப் பின் நடைபெறப்போவது... !...

2025-04-21 16:23:25
news-image

புதிய குடிவரவு ‘ஒடுக்கு முறை’ சட்டங்களும்,...

2025-04-20 21:24:37
news-image

தமிழ்த் தேசியவாதத்தின் பெயரில் எதிர்காலத்தை உள்ளூராட்சி...

2025-04-20 17:29:55
news-image

என்.பி.பி.யின் கனவு பலிக்­குமா?

2025-04-20 15:53:10
news-image

ஈஸ்டர் தாக்­குதல் : வில­குமா மர்­மங்கள்?

2025-04-20 15:52:01
news-image

இந்­தி­யாவின் மூலோ­பாய மாற்றம்

2025-04-20 15:28:07