சபிக்கப்பட்ட மாதமா ஜூலை!

Published By: Vishnu

23 Jul, 2023 | 12:17 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

இலங்கையைப் பொறுத்தவரை ஜூலை மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்குக் காரணம் 1983 கலவரமாகும். ஆடிக்கலவரம் என்றும் கறுப்பு ஜூலை இன்று வரை இந்த மாதம் அழைக்கப்பட்டு வருகின்றது.

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான வன்முறை நிகழ்வாக கறுப்பு ஜூலை  சம்பவங்கள்  வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.

பாரியளவான தமிழர்களின் இடப்பெயர்வையும் புலம்பெயர்வையும், உயிர்ச்சேதத்தையும்  உருவாக்கிய அதே வேளை தொடர்ச்சியான சுமார் 26 வருட உள்நாட்டு யுத்தத்துக்கு இது வழிவகுத்தது.

இந்தியாவின் இராணுவ மற்றும் அரசியல் தலையீட்டுக்கு இந்த ஜூலை கலவரம் வழிவகுத்தது எனலாம்.  83 ஜூலை கலவரத்துக்குப்பிறகு, அப்படியானதொரு சம்பவம் இலங்கையில் இடம்பெறவே கூடாது என்ற அக்கறையில், ஒவ்வொரு வருடமும் ஊடகங்களும் சிவில் அமைப்புகளும் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து வருகின்றன.

83 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் முன்னெடுத்த தாக்குதலில் 13  இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதிக் கிரியைகள் கொழும்பில் இடம்பெற்ற பிறகே திட்டமிட்டவகையில் ஆடிக்கலவரம் ஆரம்பமாகியது. 

ஆனால் அண்மைக்காலமாக இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது, ஜுலை மாதம் ஒரு சபிக்கப்பட்ட மாதமாகத்தான் இருக்குமோ என்று கூறத்தோன்றுகின்றது. 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்ட ‘அரகலய’ போராட்டங்கள் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் மக்கள் போராட்டத்தால் இடையில் பதவியை இராஜிநாமா செய்தமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. 

 இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெறாத பல அதிசயங்கள் நிகழ்ந்தன. இவை அரசியலமைப்பை தாண்டி இடம்பெற்ற சம்பவங்களாகும். மகிந்த பிரதமர் பதவியை துறந்த பிறகு ரணில் விக்ரமசிங்க மே மாதம் பிரதமரானார். ஜூலை அரகலயவுக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய தனது பதவியை இராஜிநாமா செய்த பின்னர் ஜுலை 13 ஆம் திகதி தற்காலிக ஜனாதிபதியாகிய ரணில் அதே ஜூலை மாதம் 21 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இல்லங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. பல விலை மதிக்கப்பட முடியாத அரிய பொக்கிஷங்களாக ரணில் பாதுகாத்து வந்த புத்தகங்கள் இருந்த அவரது இல்லம் எரியூட்டப்பட்டது.

39 வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர் மற்றும் அவரது அருகில் இருந்த  இனவாத எம்.பிக்களால் தூண்டி விடப்பட்டு உருவான ஜுலை கலவரத்தால் தலைநகரில் பல தமிழர்களின் வீடுகளும், வர்த்தக ஸ்தாபனங்களும் எரியூட்டபட்டதை மறக்க முடியாது.  அதே கட்சியின் தற்போதைய தலைவரான ரணில் விக்ரமசிங்க , அதே கலவரம் இடம்பெற்ற மாதத்தில் இவ்வாறு தனது வீடும் எரியூட்டப்படும் என்பதை நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.   

இவ்வருடம் அதே சம்பவ காலகட்டத்தைப் பற்றி பலர் கூறும் போது,  ‘கோட்டாபய ஆட்சியிலிருந்து விலகினாலும் இலங்கையில் எந்த அதிசயங்களும் இடம்பெறவில்லை. அப்படியேதான் நாடு உள்ளது’ என்றவாறு கருத்துகளை கூறியிருந்தனர். ஆனால் ஜூலை  9 ஆம் திகதிக்குப்பிறகு சில அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள்  பதிவாகி வருகின்றன.

முக்கியமாக நாட்டில் சுகாதாரத் துறை முற்றும் முழுதாக செயலிழந்து போயுள்ளமையை,  அரசாங்க வைத்தியசாலைகளில் ஏற்பட்டு வரும் மரணங்கள்  சான்று பகிர்கின்றன. மக்கள் தமது நோய்க்கு சிகிச்சைப் பெற அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். 

தரம் குறைவான மருந்துகள் இறக்குமதி, சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் தான்தோன்றித்தனம், அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகள் தட்டுப்பாடு என, நாட்டின் முழு சுகாதார கட்டமைப்பும் ஆட்டங்கண்டுள்ளது.  1990 களில் உலக சுகாதார ஸ்தாபனத்தால் பாராட்டப்பட்ட இலங்கை சுகாதார சேவைகள் தற்போது மக்கள் அஞ்சி நடுங்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது. 

கடந்த  பல தசாப்தங்களுக்கு முன்பு ஜூலை மாதங்களில் இலங்கையில்  இடம்பெற்ற பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல வரலாற்று நிகழ்வுகளும் இடம்பெறாமலில்லை. இப்படியான ஒரு ஜுலை மாதம் 29 ஆம் திகதியே (1987) இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரத பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியே 13 ஆவது திருத்தச்சட்டமும் மாகாண சபைகள் முறையும் உருவாக காரணமாகின. 

இந்த ஜூலை மாதம் (2023) 13 ஆம் திருத்தச்சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளார் என்பது முக்கிய விடயம். இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு செல்வதற்கு முன்பதாக அவர், ‘பொலிஸ் அதிகாரங்களின்றி 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த தயார்’ எனக் கூறியுள்ளார்.

இலங்கை –இந்தியாவுக்குகிடையில் இராஜதந்திர உறவுகளை பாதித்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமும் ஜூலை மாதம் இடம்பெற்றது. ஒப்பந்தம் கைச்சாத்தான மறுநாள் ஜூலை 30 ஆம் திகதி  பாரத பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை கடற்படையினரின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்று நடந்து செல்லும் போது கடற்படை வீரரான விஜேமுனி விஜித ரோகன டி சில்வா திடீரென தனது துப்பாக்கிக் கட்டையால் ராஜீவ் காந்தியின் தலையை தாக்க முயல அவர் திடீரென விலகி தப்பினார்.

துப்பாக்கிக் கட்டை அவரது தோற்பட்டையையே தாக்கியது. இந்த சம்பவம் இந்திய உபகண்ட நாடுகளை மாத்திரமல்லாது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்தியாவில் உடனடியாக போர் விமானங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டன. ஆனால் தான் தாக்கப்பட்ட சம்பவத்தை  ஒரு பொருட்டாகவே ராஜீவ் காந்தி எடுக்கவில்லை.

அவரது பண்பும் மன்னிக்கும் குணமும் இலங்கையை காப்பாற்றி விட்டன என்றே கூற வேண்டும். அந்த கடற்படை வீரரருக்கு மனநல பாதிப்பு எனக் கூறி மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி ஜே. ஆர். இராணுவ நீதிமன்றால் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விஜிதமுனி, இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டமை எல்லாம் வரலாறு.

 1987 ஜுலை 5 ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு ஒரு முக்கியமான நாளாக அமைந்தது. அது தான் புலிகள் முதல் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்திய தினமாகும். யாழ் நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரக் வண்டியை செலுத்தி சுமார் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட காரணமான அந்த சம்பவம் இலங்கை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் அது வரை உலகம் தற்கொலை குண்டுத் தாக்குதலை அறிந்திருக்கவில்லை.

இத்தாக்குதலை வெற்றிகரமாக முன்னெடுத்தவர் கெப்டன் மில்லர் என்று அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் என்பவராவார். இந்த சம்பவத்துக்குப்பிறகே ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம் 5 ஆம் திகதியை கரும்புலிகள் தினமாக எல்.ரி.ரீயினர் அனுஷ்டித்து வந்தனர். 

1996 ஜூலை மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு இராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டமை, அத்தாக்குதலில் கிட்டத்தட்ட 1400இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமை, 2001 ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமானத்தளம் புலிகளால் தாக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டமை என, ஜுலை மாத சம்பவங்களை பட்டியல்படுத்தலாம். 

ஜூலை ஆனது,  இலங்கை – இந்திய அரசியல் உறவுகளில் பல மறக்க முடியாத நிகழ்வுகளை ஏற்படுத்திய மாதமாகும். மிக முக்கியமானதொரு தருணத்தில் இம்மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில்  இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை அரசியலில் இந்தியாவின் வகிபாகமும் தலையீடும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

ரணிலின் விஜயம் இலங்கையில் தற்போது நிலவி வரும் நெருக்கடிகள் சிலவற்றையாவது தீர்த்து வைக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இது ஜூலை மாதமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15