அடிக்கடி வானத்தைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்

Published By: Ponmalar

19 Jul, 2023 | 04:40 PM
image

நம்முடைய அன்றாட வாழ்வில் மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணங்கள் பல உண்டு. தற்போதைய வாழ்க்கை முறையில் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

 அதில் இருந்து மீள்வதற்கு, அடிக்கடி வானத்தைப் பார்ப்பது ஒரு சிறந்த வழியாகும். இது மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவும். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 'தி கிரேட்டர் குட் சயின்ஸ்' மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவு இவ்வாறு கூறுகிறது. 

பொதுவாக இயற்கை காட்சிகளைப் பார்ப்பது மனதுக்கு அமைதி அளிக்கும் என்பார்கள். நிறத்தின் அடிப்படையில் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே இதற்குக் காரணம். அதனால்தான் நீர்வீழ்ச்சி, பசுமையான வயல், அடர்ந்த செடிகள், மரங்கள், புதிதாக துளிர்க்கும் இலைகளை பார்க்கும்போது நம்முடைய மனதில் ஒருவித பரவசம் உண்டாகிறது. 

முழுநிலவு, நட்சத்திரங்கள் நிறைந்த இரவு நேர வானத்தைக் கண்டு ரசிப்பவர்கள் பலர் உண்டு. அதுபோலவே, பகல் பொழுதில் மேகங்கள் நிறைந்திருக்கும் வானத்தையும், மேகக்கூட்டங்கள் இல்லாமல் நீல நிற போர்வை விரித்தது போல இருக்கும் வானத்தையும் ரசிக்கலாம் என்று 'தி கிரேட்டர் குட் சயின்ஸ்' மையம் மேற்கொண்ட ஆய்வு குறிப்பிடுகிறது. 

பகல் அல்லது இரவு என எந்த நேரத்தில் வானத்தைப் பார்த்தாலும், ஒரு குறிப்பிட்ட புள்ளியை தேர்ந்தெடுத்து உற்று நோக்க ஆரம்பிக்கலாம் (பகல் வேளையில் நேரடியாக சூரியனை பார்ப்பதைத் தவிர்க்கவும்). இவ்வாறு பார்க்கும்போது நம்முடைய உணர்வில் சிறு மாற்றங்கள் ஏற்படும். அதை நாம் உற்று கவனிக்க வேண்டும். 

ஒவ்வொரு முறை நிமிர்ந்து வானத்தைப் பார்க்கும்போதும் பிரம்மிப்பை தூண்டுவது போன்ற உணர்வும், அலைபாயும் கண்களின் செயல்பாடும் இருந்தால் நீங்கள் வானத்தைப் பார்க்கும் முறை சரியானது. இதுவே உங்களுக்குள் ஒருவித எதிர்பார்ப்பை தூண்டி, மன மாற்றத்துக்கு வழிவகுக்கும். தொடர்ந்து மாறும் வானத்தின் வண்ணமே இந்த எதிர்பார்ப்பு உணர்வுக்கு காரணம் என்று கருதப்படுகிறது. 

இரவு நேரத்தில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பார்ப்பது, பிரபஞ்சத்தின் பரந்த தன்மையைப் பற்றி சிந்திக்க வைக்கும். இந்த எண்ணம், உங்களுடைய பிரச்சினைகளை முன்னோக்கி கொண்டு சென்று அவற்றுக்கான தீர்வைக் கண்டறிவதற்கு உதவும். மனம் நிம்மதி அடைந்த உணர்வை கொடுக்கும். 

நட்சத்திரங்கள் இல்லாத வானத்தைப் பார்க்கும்போது இயல்பாகவே உங்களுடைய சுவாச செயல்பாடு மெதுவாக நடக்கும். இதன்மூலம் உடலில் ஏற்படும் சிறு மாற்றங்களைக்கூட உங்களால் உணர முடியும். அந்த நேரத்தில் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கும் மற்ற எண்ணங்கள் இயல்பாகவே விலகி, உங்கள் உடலின் மீது கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள். இதனால், மனதில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். வெளிப்புறத்தில் ஏற்படும் ஒளி மற்றும் சத்தத்தில் இருந்து மனம் விலகி நின்று, ஓய்வு நிலையை அடையும். 

வேகமான வாழ்க்கை முறை, தொழில்நுட்ப சாதனங்களில் மூழ்கி இருப்பது போன்றவற்றால் நம்மில் பலரும் இயற்கையை விட்டு விலகி இருக்கிறோம். அடிக்கடி வானத்தைப் பார்ப்பது நம்மைச் சுற்றியுள்ளவற்றை மறந்து, இயற்கையோடு மீண்டும் இணைவதற்கு வழிவகுக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right