(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள் இல்லையேல் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்து பாதிக்கப்பட்டுள்ள அரச சேவையாளர்களுக்கு நியாயம் வழங்குங்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
வேட்புமனு தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கவனம் செலுத்தியுள்ளோம், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உறுதியான தீர்மானம் எடுக்கப்படும் என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய அரச சேவையாளர்கள் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடுவதற்கு 533 அரச சேவையாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் செய்தார்கள்.அதேபோல் ஏனைய அரசியல் கட்சிகள் சார்பிலும் பல அரச சேவையாளர்கள் போட்டியிட தயாராக இருந்தார்கள்.
வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை வழங்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு பிற்போட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியை வரையறுத்து அடிப்படை சம்பளம் மாத்திரம் வழங்கப்பட்டர்.ஒருசிலருக்கு அடிப்படை சம்பளம் கூட வழங்கப்படவில்லை.
தேர்தல் இழுபறி நிலையில் உள்ள பின்னணியில் வேட்பு மனு தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் நடைமுறையில் எதிர்மறையான நிலைமையே காணப்படுகிறது. ஆகவே ஒரு சுற்றறிக்கை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என ஆளும் தரப்பிடம் வலியுறுத்தினார்.
இதன்போதுகருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச ஆசிரியர்களுக்கு தூர பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொருத்தமற்ற பிரதேசங்கள் மற்றும் பாடத்திட்டங்களை கற்பிக்க பணிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் சேவைக்கு சமுகமளிக்காமல் உள்ளார்கள். இதனால் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே பிரச்சினைக்கு தீர்வு வழங்கி விட்டோம் என பேச்சளவில் குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல் செயலில் செயற்படுத்துங்கள் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும நிரந்தர அரச சேவையாளர்களுக்கு மாத்திரமே அடிப்படை சம்பளம்,இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அரச சேவையாளர்கள் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
ஒப்பந்த நிபந்தனையின் பிரகாரம் தொடர்ந்து ஆறு மாதகாலம் சேவைக்கு சமுகமளிக்காவிட்டால் உரிய நபரின் சேவை இரத்தாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் இதுவரை சேவையில் ஈடுபடவில்லை.ஆகவே இப்பிரச்சினை குறித்து விசேட கவனம் செலுத்துங்கள் என்றார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எப்போது இடம்பெறும் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.ஒன்று தேர்தலை நடத்த வேண்டும் அல்லது தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்து செய்து அரச சேவையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்றார்.
ய ஆளும் கட்சியின் பிரதம கோலாசான் ,அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடி உறுதியான தீர்மானம் எட்டப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM