உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஸ்லிப்பர் (சாதாரண காலணிகள்) அணிந்துகொள்வதன் மூலம் மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, லண்டன் பாடசாலை ஒன்று அதன் கனிஷ்ட மாணவர்கள் ஸ்லிப்பர்கள் அணிந்துகொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடைமுறையின் பின்னர் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் முன்னேற்றம் இருப்பதாகவும் இப்பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேற்படி ஆய்வு குறித்த செய்தியொன்றை ‘ஃபின்டர்ன்’ கனிஷ்ட பாடசாலை ஆசிரியர் ஒருவர் வாசித்திருக்கிறார். அதுபற்றி அவர் தனது பாடசாலை நிர்வாகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையை ஏற்ற பாடசாலை நிர்வாகம், மாணவர்கள் ஸ்லிப்பர் அணிந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பைக் கேட்டு குதூகலித்த மாணவர்கள் மறுநாள் முதலே ஸ்லிப்பர்களை அணிந்து வரத் தொடங்கிவிட்டார்கள்.

அது மட்டுமன்றி, ஸ்லிப்பர்கள் அணியத் தொடங்கியதும் மாணவர்களிடம் சண்டை சச்சரவு குறைந்திருப்பதாகவும் மிக ஆறுதலான மன நிலையில் காணப்படுவதாகவும், நேரத்துடன் பாடசாலைக்கு வரவும், அதிகமாக வாசிக்கவும் ஆரம்பித்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது, ஆசிரியர்கள் சிலரும் பாடசாலை ஊழியர்கள் சிலரும்கூட ஸ்லிப்பர்களை அணிந்து வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டு காலமாக, உலகெங்கும் 25 நாடுகளில் போர்ன்மௌத் பல்கலைக்கழகமே நடத்திய ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.