வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள சலூன் மற்றும் புடவைக் கடை என்பனவற்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பணம் திருடப்பட்டுள்ளது.

வழமையான செயற்பாடுகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு 8 மணியளவில் வியாபார நிலையங்களை மூடிவிட்டு இரு கடைகளின் உரிமையாளர்களும் சென்றுள்ளனர்.

எனினும் இன்று காலை தமது வியாபார நிலையங்களை திறப்பதற்குச் சென்றபோது வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தள்ளது.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டபோது, சலூனிலிருந்து 10 ஆயிரம் ரூபாவும் புடவைக்கடையிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா வரையிலும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, புடவைக்கடையிலிருந்த சி. சி. ரி கமெராவினை உரிமையாளர் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.