யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள மக்களுக்காக புதிதாக அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாவற்குழியில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் குடியமர்ந்திருக்கின்றனர். இதில் அங்கு குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் அத்து மீறிக் குடியமர்ந்துள்ளதாகவும் அவர்களுக்கு காணிகளையோ அல்லது வீடமைப்புத் திட்டங்களை வழங்கக் கூடாதென்றும் மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அங்கு குடியமர்ந்திருக்கின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்களும் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் இதற்கு தமிழ்த் தரப்புக்களிடமிருந்து எதிர்ப்புக்கள் வெயளியிடப்பட்டிருந்ததுடன் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அங்கு குடியமர்ந்திருக்கின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய தமிழ் மக்களுக்கு 200 வீடுகளும் சிங்கள மக்களுக்கு 53 வீடுகளும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வு இன்று காலை 10 .30 மணிக்கு நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் இரு பிரிவுகளாக தமிழ் மக்களுக்கான வீடமைப்பு திட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் என்றும் சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் என்றும் இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன.

ஆயினும் முதலாவதாக சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கே அரச அதிபரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இந் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் அங்கு இரானுவப் பிரசன்னமும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.