எழுதியவர் - P. K. பாலச்சந்திரன்
சீன - இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு தோரணை, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இந்திய எதிர்ப்பு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அதன் ஆதரவு மற்றும் தெற்காசியாவில் இந்தியாவை சுற்றி வளைக்கும் முயற்சி ஆகியவை இந்தியாவை அமெரிக்காவின் காத்திருப்பு ஆயுதங்களுக்குள் தள்ளும் பிரதான காரணிகளாகும்.
ஆனால், அமெரிக்க அரவணைப்பில் இந்தியா முற்றிலும் சௌகரியமாக இருக்கவில்லை. காரணம், மீண்டும் சீனாவேயாகும்.
இந்தியா சீனாவுடன் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான எல்லையைக் கொண்டிருப்பதுடன், அங்கு அதன் படைகள் சீனர்களை கண்ணுக்கு நேராக எதிர்கொள்ளும். 1962 சீன ஆக்கிரமிப்பின் நினைவுகள் இன்னமும் இந்திய மனங்களில் நீடிக்கின்றன. 2023 இன் இந்தியா 1962 இன் இந்தியா அல்ல என்றாலும், புது டெல்லி சீனாவுடன் போருக்கு செல்வதற்கு மிகவும் தயங்குகிறது.
2020ல் இருந்து சீனர்கள் கைப்பற்றிய ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இந்தியப் பகுதியில் இருந்து இந்தியா ஏன் சீனர்களை வெளியேற்றவில்லை என்று கேட்டதற்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் "நம்முடைய பொருளாதாரத்தை விட ஐந்து மடங்கு பெரிய பொருளாதாரத்துடன் நாங்கள் போருக்குச் செல்வோம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?" எனக் கேள்வியெழுப்பினார்.
வெளிப்படையாகச் சொல்வதானால், சீனாவுடனான அமெரிக்காவின் மோதலில் தெற்காசியாவின் உக்ரைனாக மாற இந்தியா விரும்பவில்லை.
ஆயினும்கூட, இந்தியா அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வலிமையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்காவுடன் ஆழ்ந்த நட்பை விரும்புகிறது. இந்த ஆர்வம் கருத்தியல் அடிப்படையில் (ஜனநாயக ஆட்சிக்கான அர்ப்பணிப்பு மற்றும் பல) இருந்தாலும் கூட, அது கருத்தியல் அடிப்படையில் அமைந்ததல்ல.
கடந்த காலத்தில் அமெரிக்காவுடனான அதன் அனுபவத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா அதிகம் பேசப்படும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்குள்ள அர்ப்பணிப்பைக் காட்டிலும், அதனது தேசிய மற்றும் புவிசார் அரசியல் நலன்களால் அமெரிக்கா உந்துதல் பெற்றுள்ளது என்பதை இந்தியா அறிந்திருக்கிறது. 1962ல், கம்யூனிஸ்ட் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரித்த அமெரிக்கா, 1969-1970ல் கம்யூனிஸ்ட் சீனாவுடன் இணைந்த தருணத்தில், அதன் புவிசார் அரசியல் நலன்கள் இந்தியாவுடன் முரண்படும்போது, 1971ல் மேற்கொண்டதைப் போல், இந்தியாவை சங்கடமான நிலையில் கைவிட்டது.
அது எப்படியிருந்தாலும், காலங்கள் மாறிவிட்டதுடன் பொருளாதார மற்றும் இராணுவ சக்தியாக சீனாவின் எழுச்சியால் அமெரிக்கா மிகவும் சவாலானதாக உணர்கின்றது. இப்போது அமெரிக்காவிற்கு இந்தியாவும் மற்ற ஆசிய நாடுகளும் ஒரு விரிவாக்க சீனாவிற்கு எதிராக ஓர் அரணாக இருக்க வேண்டியது தேவையாகின்றது. இந்த நேரத்தில் நட்பை வளர்ப்பதற்கு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருவதாலும், அதன் அளவு சீனாவுடன் பொருந்துவதாலும், எல்லையில் சீனாவுடன் முடிவில்லாத மோதலில் இருப்பதாகத் தோன்றுவதாலும் அது மிகவும் பொருத்தமானதாகும்.
அதன் பங்கில், வளர்ந்து வரும் இந்தியா, அதன் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், சீனாவுடன் இராணுவ ரீதியாக பொருந்துவதற்கும் புதுப்பித்த தொழில்நுட்பத்திற்கான தேவையுடன் உள்ளது. இதற்காக நாட வேண்டிய நாடு அமெரிக்காவாகும். பாரம்பரியமாக, USSR அல்லது ரஷ்யாவிடமிருந்து இந்தியா இராணுவ தளவாடங்களை வாங்கினாலும், ரஷ்ய உபகரணங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பதில்லை. உக்ரைன் போர் உதிரிபாகங்களை வழங்குவதில் ஓர் வினாவை முன்வைத்துள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியா வலியுறுத்தும் நிபந்தனைகளில் ஒன்று, ஆயுத வழங்குனர் தொழில்நுட்பத்துடன் பகுதியாக இணைந்து இந்தியாவில் உற்பத்தியை அனுமதிக்க வேண்டும் என்பதாகும். ரஷ்யர்கள் இதற்கு அனுமதித்திருந்தாலும், அமெரிக்கர்கள் நுணுக்கமாக இருந்தனர். ஆனால், தடுமாறிய ரஷ்யர்களை நசுக்குவதற்கும், சீனாவின் நகர்வுகளை மழுங்கடிப்பதற்குமாக இந்தியாவைத் தன் பக்கம் சேர்த்துக்கொள்ளும் ஆர்வத்தில், அமெரிக்கர்கள் இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமான “தேஜாஸ்”க்கு நவீன பொது இலத்திரனியல் இயந்திரங்களைத் தயாரிக்க ஒப்புக்கொண்டனர். அமெரிக்காவும் சீனாவிற்கு எதிராக நவீன ட்ரோன்கள் அல்லது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் முன்னதாக உளவுத்துறை பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்ததுடன், இது எல்லையில் சீனாவின் சமீபத்திய சில நகர்வுகளை இந்தியா எதிர்கொள்ள உதவியது.
புதிய அமெரிக்க-இந்தியா இயந்திரத்தினை தூண்டுவதற்காகத்தான் பிடென் நிர்வாகம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அரசு முறைப் பயணத்திற்கு அழைத்ததுடன் அமெரிக்க காங்கிரஸில் உரையாற்ற ஏற்பாடு செய்தது. பிடென் இதனை ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் முஸ்லிம்களை துன்புறுத்துதல் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட மோடியின் தவறான தாராளமய ஆட்சிக்கு எதிராக அமெரிக்க தாராளவாதிகள் மற்றும் தாராளவாத ஊடகங்களின் வலுவான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் மேற்கொண்டாரெனில் அது இந்தியாவைத் தன் பக்கம் இழுக்க வேண்டிய அமெரிக்காவின் அவநம்பிக்கையான தேவையினாலாகும்.
அமெரிக்கா உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கிய போதிலும், ரஷ்யா உக்ரேனிய பிரதேசத்தை தொடர்ந்து வைத்திருப்பதுடன், மற்றும் அமெரிக்காவின் சில நட்பு நாடுகளால் சீனா அனுசரிக்கப்படுகிறது.
வொஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தையில், பிடனும் மோடியும் உடன்படுவதற்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துள்ளனர். இந்தியர்களை இரு நாடுகளுக்கும் மிகவும் திறமையானவர்களாகவும் பயனுள்ளவர்களாகவும் மாற்றுவதற்கு சில முக்கியமான இராணுவ வன்பொருள் மற்றும் அறிவாற்றல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
இரத்த உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் "ஒரே ஜனநாயக DNA" என்று பிடென் பேசுகையில், மோடி ரஷ்யாவையும் சீனாவையும் விமர்சித்து அமெரிக்க உள்ளங்களை சூடேற்றினார். ஆனாலும் அவர் தனது உறவுகளை அவ்வாறே வைத்திருப்பதற்காக அவற்றைப் பெயரிடவில்லை.
அமெரிக்கர்களுக்கு பெரும் கவலையாக உள்ள உக்ரைன் போரில் ரஷ்ய படையெடுப்புதொடர்பில் மோடி காங்கிரஸில் கூறுகையில்: “கடந்த சில ஆண்டுகளில் ஆழமான இடையூறுகள் விருத்தியடைந்து காணப்படுகின்றன. உக்ரைன் மோதலுடன், போர் ஐரோப்பாவிற்கு திரும்பியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இது பெரும் சக்திகளை உள்ளடக்கியதால், விளைவுகள் கடுமையானவையாகும். உலகளாவிய தெற்கின் நாடுகள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
"உலகளாவிய ஒழுங்குமுறையானது ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளுக்கான மரியாதை, சர்ச்சைகளுக்கு சமாதானமான தீர்வு மற்றும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது."
அவர் மேலும் கூறுகையில், “நான் நேரடியாகவும் பகிரங்கமாகவும் கூறியது போல், இது போரின் சகாப்தமல்ல. இது உரையாடல் மற்றும் இராஜதந்திரத்திற்கானதாகும். இரத்தம் சிந்துவதையும் மனித துன்பங்களையும் தடுப்பதற்கு நாம் அனைவரும் நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்” என்றார்.
சீனாவிடமிருந்தான சவாலை சுட்டிக்காட்டிய மோடி, “வற்புறுத்தல் மற்றும் முரண்பாட்டின் கருமேகங்கள் இந்திய பசிபிக் பகுதியில் தங்களது நிழலை வீசுகின்றன. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை எங்களின்’ பங்காண்மையின் பிரதான கரிசனங்களில் ஒன்றாக மாறியுள்ளது” என்றார்.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிற நாடுகளின் பாதுகாப்புக்கு சீனாவின் அச்சுறுத்தல் குறித்து, மோடி மீண்டும் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், “நாங்கள் (இந்தியாவும் அமெரிக்காவும்) பாதுகாப்பான கடல்களால் இணைக்கப்பட்ட சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடங்கலான, சர்வதேச சட்டத்தால் வரையறுக்கப்பட்ட, ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட, அனைத்து சிறிய மற்றும் பெரிய நாடுகளும் தங்கள் தேர்வுகளில் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் உள்ள முன்னேற்றம் சாத்தியமற்ற கடன் சுமைகளால் திணறலுக்குட்படாத, தொடர்புகள் மூலோபாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத எல்லா நாடுகளும் பகிரப்பட்ட செழுமையின் உயர் அலையால் உயர்த்தப்படுகின்ற ஆசியான் பிராந்தியத்தின் மையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய பசிபிக் தொடர்பான பார்வையை பகிர்ந்து கொள்கிறோம்” என்றார்.
ஆனால், இந்தியா சீனாவைக் கைப்பற்ற முயல்வதில்லை, அதைக் கட்டுப்படுத்தவே முயல்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், மோடி மீண்டும் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், “எங்கள் பார்வை கைப்பற்றவோ விலக்கவோ முற்படவில்லை, மாறாக சமாதானம் மற்றும் செழிப்பு கொண்ட ஓர் ஒத்துழைப்புப் பகுதியைக் கட்டமைக்க வேண்டும்” என்றார்.
அவர் இந்த செயற்பாட்டில் "தந்திரோபாய கலந்துரையாடலின்" (Quad) வகிபங்கைக் கண்டார். "நாங்கள் பிராந்திய நிறுவனங்கள் மூலமாகவும், பிராந்தியத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள எங்கள் பங்காளர்களுடனும் பணியாற்றுகின்றோம். இதில், தந்திரோபாய கலந்துரையாடல் இப்பிராந்தியத்திற்கு பிரதான சக்தியாக உருவெடுத்துள்ளது” என்றார்.
அமெரிக்காவில் உள்ள 4 மில்லியன் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் பயனுள்ளவர்களாக இருக்கின்றனர். அமெரிக்க குடித்தொகையில் இந்தியர்கள் ஒரு சதவீதத்தினரானாலும் 6% வரி செலுத்துகிறார்கள். அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இந்தியர்களும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். மோடி அமெரிக்கா செல்லும் ஒவ்வொரு முறையும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு அளிக்கும் பிரமாண்டமான வரவேற்புகளுக்கு இதற்கு சாட்சியாகும்.
மோடியின் வருகையை இந்தியாவின் உள்நாட்டு அரசியலின் கோணத்தில் பார்க்க வேண்டும், ஏனெனில் மோடி செய்யும் எதுவும் அதிகாரத்தை கைப்பற்றி தக்கவைத்துக்கொள்ளும் அவரது உள்நாட்டு அரசியல் ஆர்வத்திலிருந்து விலக்கப்படவில்லை.
மோடியின் வெளியுறவுக் கொள்கை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரேமாதிரியாகவே உள்ளது. அவர் வெளிநாட்டில் உள்ள தனது பிம்பத்தை மிகவும் உணர்ந்தவர். ஜவஹர்லால் நேருவைப் போலவே, அவர் வெளியுறவுக் கொள்கையை ஆளுகையின் முக்கிய அங்கமாகவும், உள்நாட்டில் தனது அரசியல் முறையீட்டாகவும் ஆக்கியுள்ளார். நேருவைப் போலவே, இந்தியா ஒரு "விஷ்வ குரு" (சொற்களின் ஆசிரியர்) ஆக்குவதற்காக ஓர் விரிவான உலகளாவிய வகிபங்கை அவர் கருதுகிறார். நேரு தன்னை ஆசியாவின் மீட்பாளராக சித்தரித்துக் கொண்டால், மோடி உலகளாவிய தெற்கு பிராந்தியத்திற்காக பேசுவதாக கூறுகிறார்.
தங்களை மறுமலர்ச்சியில் காணும் இந்தியர்கள், வெளிநாட்டில் மோடியின் சுரண்டல்களை தமது புதிய பெருமையின் சரிபார்த்தல்களாக கருதுகின்றனர். அமெரிக்கப் பயணத்தின் போது கிடைத்த ஊடகச் செய்திகள், வரும் மாநிலங்களவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தனக்கு அமோக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று மோடி நம்புகிறார். அவர் அமெரிக்க தாராளவாத ஊடகங்களில் வரும் எதிர்மறையான செய்திகளைக் கூட இந்தியர்கள் வெறுக்கும் வெள்ளையின மேலாதிக்க மற்றும் ஏகாதிபத்திய சகாப்தத்தின் சுவடுகளாகச் சித்தரிப்பதன் மூலமாக தனக்குச் சாதகமாக மாற்றுவார்.
அவரது அரசாங்கம் முஸ்லிம்களை நடாத்துவது பற்றிய பரவலான விமர்சனத்தை கருத்தில் கொண்டு, மோடி டெல்லி செல்லும் வழியில் கெய்ரோவில் உள்ள அல்-ஹக்கிம் மசூதிக்கு மிகவும் பிரபல்யப்படுத்தப்பட்ட விஜயத்தை மேற்கொண்டார். 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மசூதி, அவரது சொந்த ஊரான குஜராத்தைச் சேர்ந்த போஹ்ரா முஸ்லிம் புலம்பெயர்ந்தவர்களால் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அவர் தான் கட்டியணைத்து சகோதரத்துவத்துடனிருந்த பிரமிப்புக்குள்ளான போஹ்ராஸ்களிடம், தான் பிரதமர் என்று அழைக்கப்பட விரும்பவில்லை என்று கூறினார்.
அவர் அனைவரதும் மகிழ்ச்சிக்காக "நான் உங்களின் குடும்பத்தவன்!" என்று கூறினார்.
P.K. பாலச்சந்திரன் கொழும்பில் உள்ள ஒரு சுயாதீன ஊடகவியலாளரென்பதுடன் பல ஆண்டுகளாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதுகிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எக்னாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து அறிக்கை அளித்துள்ளார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்த பத்தி ஒன்றை எழுதுகின்றார்.
Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM