கார்வண்ணன்
அண்மைக் காலத்தில் சமூக ஊடகங்களில், காவி அணிந்த மூன்று பௌத்த பிக்குகள் தொடர்பான காணொளிகள் அதிகளவில் பகிரப்பட்டன.
விகாரையில் உள்ள அறைக்குள் தாயும், மகளுமான இரண்டு பெண்களுடன் இருந்த போது, அகப்பட்ட பல்லேகம சுமண தேரர் தொடர்பான காணொளி முதலாவது.
புத்தர் கூறிய பரிநிர்வாண நிலைக்கு மாறாக- பௌத்த தர்மத்துக்கு விரோதமாக பெண்களுடன் நிர்வாண நிலையில் இருந்த பல்லேகம சுமண தேரரை சிலர் விகாரைக்குள் புகுந்து தாக்கி, காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர்.
பௌத்த பிக்குவை அம்பலப்படுத்துவது என்ற போர்வையில், சிலர் நடந்து கொண்ட முறை அதைவிடக் கேவலமானது. குறித்த பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம், மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டது.
அதேவேளை, தமிழருக்கெதிராக இனவாதம் கக்கிய பிக்குகளில் ஒருவரான பல்லேகம சுமண தேரரின் மறு முகத்தை தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருக்கிறது அந்தக் காணொளி என்பதில் சந்தேகம் இல்லை.
ஜப்பானில் ஓர் இளைஞனுடன் பாலியல் உறவு கொள்ள முயன்றதாகக் கூறப்படும் மாகல்கந்தே சுதந்த தேரருடன் மக்கள் வாக்கு வாதப்படும் காணொளியும் அண்மையில் வெளியானது.
சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளரான மாகல்கந்தே சுதந்த தேரர், தமிழருக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளில் மாத்திரமன்றி, சிங்கள பௌத்த அடிப்படைவாதச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர்.
பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருடன் இணைந்து செயற்படுகின்றவர்.
அவர் ஜப்பானில் இவ்வாறானதொரு சம்பவத்தில் சிக்கியிருப்பது, தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுவோருக்கு மாத்திரமன்றி சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
மூன்றாவது காணொளி, மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி, அம்பிட்டியே சுமண தேரர் தொடர்பானது.
பொலிஸருடன் வாக்குவாதம் செய்யும் அவர், திடீரென தன் முன்பாக நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் குத்தி தாக்குகிறார். அம்பிட்டியே சுமண தேரரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமில்லை.
ஏனென்றால் கடந்த காலங்களில் அவர் பல தடவை பொலிஸாரை தாக்க முயன்றிருக்கிறார். தூற்றியிருக்கிறார். ஆவேசமாக நடந்து கொண்டிருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது, மட்டக்களப்புக்கு சென்றிருந்த வேளையில் அவர் தன்னை வந்து சந்திக்கவில்லை என்பதற்காக, மைத்திரிபால சிறிசேனவினால் திரைநீக்கம் செய்யப்பட்ட கல்வெட்டு ஒன்றை சுத்தியலால் அடித்து உடைத்தவர் அம்பிட்டியே சுமண தேரர்.
அதுபோல, தமிழர்களின் காணிகளை அபகரிப்பதிலும், இனவாத செயற்பாடுகள் போராட்டங்களிலும் சண்டித்தனம் செய்து வருபவர் அவர். இந்த மூன்று காணொளிகளாலும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பௌத்த பிக்குகளை, அரசியல் பிக்குகள் என்று குறிப்பிட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்.
இவர்கள் பௌத்த மதத்தை போதிக்கும், பௌத்தர்களுக்கு வழிகாட்டும், அவர்களை வழிநடத்தும் துறவிகளாக இருந்திருந்தால், தமிழர்கள் அவர்களைப் பற்றி விமர்சிக்கும் நிலைக்குச் சென்றிருக்கமாட்டார்கள்.
மாறாக, இவர்கள் மூவரும், தமிழருக்கு எதிரான இனவாத உணர்வுகளை கிளப்பி வருபவர்கள். தமிழரின் நிலங்களையும் உரிமைகளையும் அபகரிக்கும் எண்ணம் கொண்டவர்கள். தமிழருக்கு எதிரான திட்டமிட்ட சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்பவர்கள்.
அதனால் இந்த மூவரின் நடத்தைகள் தொடர்பான காணொளிகள் தமிழர் மத்தியில் அதிக பேசுபொருளாக மாறியிருப்பது ஆச்சரியமில்லை. நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர,இது சிங்கள பௌத்த நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தமிழ் நீதிபதியை எச்சரிக்கிறார்.
ஆனால், சிங்கள பௌத்தத்தை போதிக்கும் பௌத்த பிக்குகளில் சிலர், தாம் சார்ந்த பௌத்த மதத்தையே இன்று சந்தி சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
பௌத்த மதத்தை கேவலப்படுத்துபவர்கள் வேறெவரும் அல்ல. அதனைப் பின்பற்றுபவர்கள் தான், அந்த மதத்தின் புனிதத்தை கெடுக்கிறார்கள். அதன் உண்மையான போதனைகளை நிந்திக்கிறார்கள்.
பௌத்தம் அன்பையும் அறத்தையும் போதிக்கும் மதம். ஆனால், இலங்கையின் வரலாற்றில், தமிழருக்கு எதிரான அநீதிகளுக்கும் குரோதங்களுக்கும் வழிகாட்டியாக இருந்தது பௌத்த பிக்குகளும், பௌத்த பீடங்களும் தான்.
பௌத்த மதத்தில் மூன்று பிரதான பிரிவுகள் உள்ளன. தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம், வஜ்ரயான பௌத்தம் ஆகியனவே அந்த மூன்று பிரிவுகள்.
இலங்கையில் பிரதானமாக பின்பற்றப்படுவது தேர வாத பௌத்தம். இது புத்தரின் வழிகளை அப்படியே பின்பற்றுவது. அவரது காலத்தில் துறவறம் எவ்வாறு பின்பற்றப்பட்டதோ அதுபோன்று கடைப்பிடிக்கும் முறை.
உலகில் தேரவாத பௌத்தத்தின் தலைமையகமாக இலங்கையே விளங்குகிறது.
இந்த பௌத்த மார்க்கத்தைப் பின்பற்றும் பௌத்த பிக்குகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாலியல் உறவுகளை-, ஆசைகளை துறக்க வேண்டும். திருடக் கூடாது. எந்தச் சிறிய உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது. இயற்கைக்கு மாறான எந்த அருஞ்செயலையும் தன்னால் செய்ய முடியும் என காட்டக் கூடாது.
துறவறத்தில் புத்தாடைகளை அணியக் கூடாது. பழந்துணிகளையும், பிணங்களைப் போர்த்திய ஆடைகளையுமே உறங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். கந்தலாடைகளைக் கூட மூன்றுக்கு மேல் வைத்திருக்க கூடாது, வருமானம் ஈட்ட முயற்சிக்கக் கூடாது, வீடுகளில் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் சென்றே உணவருந்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால், இந்த வழிகளை பின்பற்றுகின்ற பௌத்த பிக்குகள் நாட்டில் எத்தனை பேர் உள்ளனர்? பௌத்த பிக்குகள் அறத்தையும், அன்பையும், போதித்த காலம் போய், இனவாதத்தையும், இனக்குரோதத்தையும் தூண்டி விட்டது தான் வரலாறு.
இப்போது, அவர்களின் பாலியல் நடத்தைகள் பௌத்த மதத்தின் சிறப்பியல்புகளையே கேள்விக்குட்படுத்துகிறது.
தேரவாத பௌத்தம் துறவறத்தில் உள்ள பௌத்த பிக்குகளின் பாலியல் இச்சைகளையும் தடை செய்கிறது. அதேவேளை தென்கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படும் மகாயான பௌத்தத்தில், பௌத்த பிக்குகளுக்கு இந்த தடை இல்லை.
உலகில் மகாயான பௌத்தம் தான், 53 வீதமானோரால் பின்பற்றப்படுகிறது. தேரவாத பௌத்தத்தை, 36 வீதமானவர்களும், வஜ்ரயான பௌத்தத்தை 6 விதமானவர்களும் பின்பற்றுவதாக கூறுகிறது ஆய்வு.
மகாயான பௌத்தம் புத்தர் அழிவற்றவர் என்கிறது. போதிசத்துவர்கள் மீது நம்பிக்கை கொள்கிறது. இதுவே பிரதான பௌத்த மார்க்கம் என்றும் கூறுகிறது.
இப்போது இலங்கையில் ஏகபோகத்தைக் கொண்டிருக்கும் தேரவாத பௌத்தத்தைக் கடைப்பிடிப்பவர்கள், கோட்பாட்டு ரீதியான பிளவு ஒன்றை நோக்கியும் செல்லத் தொடங்கியுள்ளனர். கத்தோலிக்க மதத்தில் துறவு சார்ந்த வாழ்க்கை நெறி வலியுறுத்தப்பட்டதால், பிளவுகள் தோன்றின.
அதேநிலை இப்போது தேரவாத பௌத்தத்துக்கும் ஏற்படுகின்ற நிலை தோன்றியிருக்கிறது. பௌத்த பிக்குகள் பலரின் பாலியல் நடத்தைகள், அவர்கள் தேரவாத பௌத்தத்தில் நீடிப்பதற்கு தகுதியற்ற நிலையை தோற்றுவித்திருக்கிறது.
அவ்வாறு வெளியேற்றப்படும் பௌத்த பிக்குகள், மகாயான பௌத்தத்தை ஆதரிக்கத் தலைப்படக் கூடும்.அது இலங்கையில் தேரவாத பௌத்தம் சிதைவடையும் நிலைக்கு வித்திடலாம்.
இது ஒரே நாளில் நடந்து விடக் கூடியதல்ல. படிப்படியாக நடந்தேறலாம்.
காலமாற்றமும், பராயமடையாத- குழந்தைப் பருவத்திலேயே துறவறத்துக்குள் தள்ளப்படுவதும், துறவறத்தை சரியாகப் பின்பற்ற முடியாமல் போவதும், இந்த நிலையை தோற்றுவிக்கும்.
இலங்கையில் பௌத்த மதம், அமைதி, சாந்தி, அன்பு போன்றவற்றுக்குப் பதிலாக வன்முறைகளையும், தமிழருக்கு எதிரான வன்மங்கள், குரோதங்களையும், ஆக்கிரமிப்பையுமே கற்றுக் கொடுத் திருக்கிறது. தங்களைப் பின்பற்றும் பௌத்தர்களுக்கும் போதித்திருக்கிறது.
இதுதான் இன்றைய இலங்கையின் சீரழிவுக்கு வித்திட்டது. தமிழருக்கு எதிரான பேரினவாதச் செயற்பாடுகளின் எதிர்விளைவுகள் இப்போது தேரவாத பௌத்தத்துக்கே சாபமாக மாறிக் கொண்டி ருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM