ஹரிகரன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் போது, எரிசக்தி, மின்சக்தி மற்றும் துறைமுகத் திட்டங்கள் குறித்து, கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியிருக்கிறார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, கொழும்பு வந்து இறங்குவதற்கு முன்னர், அலி சப்ரி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக, கொழும்பு வந்த வினய் மோகன் குவாத்ரா தனது பயணத்தின் முடிவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இலங்கை,- இந்தியா இடையிலான உறவில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
பதவியேற்று ஒரு வருடத்துக்குப் பின்னர் இந்தியாவுக்குச் செல்லும் ரணில் விக்கிரமசிங்கவிடம், புதுடெல்லி பல விடயங்களை எதிர்பார்க்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தை பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் மாற்றுவதற்கான பேச்சுக்களை முன்னெடுக்கவே இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கொழும்பு வந்திருந்தார். இது இரண்டு தரப்புகளுக்குமிடையிலான பேச்சு நிகழ்ச்சிநிரலை இறுதி செய்து, முக்கியமான உடன்பாடுகளை எட்டுவதற்கான ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது.
1987இல், இந்திய- இலங்கை உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன் னர், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் மேனன் பலமுறை கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொழும்புப் பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
அதேபோன்று தான் தற்போது, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கொழும்பு வந்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க எத்தகைய தயார்படுத்தல்களுடன் வரவேண்டும் என்பதை திட்டவட்டமாக தெரிவிப்பது தான் அவரது இலக்கு எனக் கருதப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லிக்கு அழைப்பதற்கு இந்தியா பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பல வாரங்களாகவே பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது.
அதாவது, இந்தியாவின் திட்டங்களுக்கு காணப்படுகின்ற இடையூறுகளை களைதல், சீனாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுதல், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களில் இந்தியா வாக்குறுதிகளை எதிர்பார்க்கிறது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கொழும்புக்கு நிபந்தனைகளை விதிப்பதாகவும், அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் கூறப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல்களை அறிவிக்க வேண்டும், என்பதும் அவ்வாறான நிபந்தனைகளில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடாமல், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த ஏற்பாட்டையும் முன்னெடுக்காமலேயே ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லியில் சென்று இறங்கப் போகிறார்.
இது ரணில் விக்கிரமசிங்க விடயத்தில் இந்தியாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருப்பதைக் காட்டுகிறதா அல்லது, இந்தியாவின் நிபந்தனைகள் தொடர்பாக பரவிய கதைகள் உண்மைத்தன்மையற்றவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணம், பூகோள அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கையும் இந்தியாவும் அண்டை நாடுகள். நீண்டகால கலாசார, வாழ்வியல் தொடர்புகளைக் கொண்ட நாடுகள்.
இவ்வாறான இரண்டு நாடுகளுக்கிடையில் தலைவர்கள் பயணம் மேற்கொள்வதில் என்ன பூகோள அரசியல் இருக்கப் போகிறது எனக் கேள்வி எழுப்புவோரும் உளர்.
இலங்கையின் ஒவ்வொரு அரசியல், இராஜதந்திர, இராணுவ நகர்வுகளிலும்- பூகோள அரசியல் இருக்கிறது. பூகோள அரசியலின் தாக்கம் எதிரொலிக்கிறது.
இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் தான், இந்தப் பூகோள அரசியல் சூதாட்டத்தின் மையமாக விளங்குகிறது. இந்த அமைவிட முக்கியத்துவம் இல்லையென்றால், இந்தியாவோ, சீனாவோ, அமெரிக்காவே எட்டியும் பார்க்காது.
இந்தியாவுக்குத் தெற்காக, மிக அண்மையில் அமைந்திருக்கின்ற இந்த தீவை தங்களின் கைக்குள் போட்டுக் கொள்வதன் மூலம், இந்தியாவின் மீது பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி பாதுகாப்பு ரீதியாகவும் அழுத்தங்களைக் கொடுக்கலாம் எனச் சிந்திக்கிறது சீனா.
இந்தியாவை பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாக சுற்றிவளைத்தல் என்ற சீனாவின் வியூகத்துக்குள் இலங்கையை ஒரு பாத்திரமாக மாற்றும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வியூகத்துக்குள் இலங்கை எந்த இடத்தில் இருக்கப் போகிறது என்பதை தீர்மானிப்பதில் ரணில் விக்கிரமசிங்க வின் இந்தியப் பயணம் கணிசமான தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்குப் பிந்திய இலங்கையில், அதாவது ரணிலின் தலைமைத்துவம் உறுதி செய்யப்பட்ட இலங்கையில், இந்தியா- சீனா என்ற இரண்டு போட்டி நாடுகளையும், அமெரிக்கா- ரஷ்யா என்ற இரண்டு வல்லரசுகளையும், எவ்வாறு கையாளுவது என்ற தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டம் இதுவாகும்.
இலங்கை நெருக்கடியில் சிக்கிய போது, எந்த நாட்டுக்கும் வழங்காதளவுக்கும், எந்த நாடும் வழங்காதளவுக்கும் 4 பில்லியன் டொலர்களை கொடுத்து உதவிய நாடு இந்தியா.
இந்தியாவின் அந்த உதவிகள் கிடைக்காது போயிருந்தால், பட்டினி , நோய்கள் போன்ற பல காரணிகளால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நேர்ந்திருக்கும். சமூக குழப்பங்களும் உருவாகியிருக்கும்.
சீனாவின் கடன்பொறியினால் தான் இலங்கை நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது என்ற குற்றச்சாட்டுகள் சீனாவுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியதும், இந்தியா, அமெரிக்காவின் அழுத்தங்களும், இலங்கையின் போக்கும் சீனா நெருக்கடியான தருணத்தில் வரையறுக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளையே பெரும்பாலும் வழங்கியது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், நெருக்கடியில் இருந்து மீட்கும் சர்வதேச முயற்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுத்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியது.
இலங்கைக்கு வெளிநாட்டு நாணய உழைப்பை அளிக்கும், சுற்றுலாத் துறையை தூக்கி விடுவதில் ரஷ்யா கணிசமான பங்களித்திருக்கிறது.
இவ்வாறான நாடுகளுடன் உறவுகளை பேணுவதும் கையாளுவதும் மிக முக்கியமானது.
ஒன்றுடன் ஒன்று முரண்படாத வகையில், ஒன்றுடனான உறவு, இன்னொன்றுக்கு புண்படுத்ததாத வகையில், நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த நாற்பக்க வியூகத்துக்குள் இலங்கை சரியான இடத்தை தெரிவு செய்யத் தவறினால், எல்லாமே பிழைத்து விடும்.
அதற்கான கவசமாகவே அணிசேரா கொள்கையை இலங்கை பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், இது எல்லா நேரங்களிலும் பொருத்தமானதோ, எல்லா நாடுகளையும் சமாளிக்க கூடியதாகவோ இருக்கும் என்றில்லை.
குறிப்பாக, இந்தியா- சீனா விடயத்தில், ‘ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்’ என்ற நிலை தான் காணப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்குப் பிந்திய இலங்கை, எரிசக்தி, மின்சக்தி துறைகளில் முதலீடுகளை எதிர்பார்க்கிறது. அதற்கு தேவையும் அதிகம் இருப்பதால், இந்த துறைகளில் முதலீட்டை ஈர்க்க முனைகிறது.
அதுபோலவே துறைமுகத் திட்டங்களையும் விரைவுபடுத்துவதன் மூலம், கடல் போக்குவரத்து வாய்ப்புகளை இலகுபடுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி திட்டத்தை கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்று தெரிகிறது.
திருகோணமலை துறைமுகம் மீது இந்தியாவுக்கு நீண்ட காலமாகவே ஒரு கண் இருக்கிறது, அதன் அருகில் சீனக்குடா எண்ணெய் குதங்களும் இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்து, பிராந்தியத்தின் எண்ணெய் கேந்திரமாக்குவது அரசாங்கத்தின் திட்டமாகத் தெரிகிறது.
இது இந்தியப் பிரதமர் மோடி 2015இல் முதல் முறையாக இலங்கைக்கு வந்த போது இணங்கிக் கொள்ளப்பட்ட விடயம். ஆனால், 8 ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வரவில்லை.
திருகோணமலை விடயத்தில் இந்தியாவுக்கு அக்கறையுள்ள நிலையில், அதனை வைத்து சீனாவின் முதலீடுகளின் மீதான இந்திய அழுத்தங்களை குறைக்க ரணில் அரசாங்கம் திட்டமிடுகிறது.
ரணில் விக்கிரமசிங்க வரும் ஒக்ரோபர் மாதம் சீனாவுக்குச் செல்லவிருக்கிறார். அங்கு மேற்கொள்ளப் போகும் முதல் பயணத்தில், பெருமளவில் முதலீடுகளைக் கொண்டு வரும் நோக்கம் அரசாங்கத்துக்கு உள்ளது.
சீனாவின் சினோபெக் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்கள், அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பெரியளவில் முதலீட்டை மேற்கொள்ள திட்டங்களை முன்மொழிந்திருக்கின்றன.
அதுபோல பல மூலோபாயத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சீனா விரும்புகிறது.
ரணில் விக்கிரமசிங்க சீனப் பயணத்தின் போது, இறுதி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
அதனால் அவர் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்தியாவைச் சமாளிக்கும் திட் டங்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பு கிறார்.
குறிப்பாக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலையின் மூலம், இந்தியாவைச் சமாளிக்க அவர் முற்படுகிறார்.
ஆனால், இந்தியா, இலங்கையில் தனது நலன்களை அடைவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறதா- சீனா, நலன்களை அடைய விடாமல் தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறதா என்பதைப் பொறுத்தே, ரணில் விக்கிரமசிங்கவின் இந்த இலக்கு வெற்றிகரமானதாக அமையுமா என்பது தீர்மானிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM