என்.கண்ணன்
தமிழ் தேசியக் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் படலம் மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் கவனம் புதுடெல்லியின் மீது திரும்பியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை 9ஆம் திகதி மக்கள் புரட்சியை அடுத்து ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிய பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடிகள் சூழ்ந்திருந்த அந்தக் காலகட்டத்தில், உடனடியாக ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை.
நிலைமைகள் ஓரளவுக்கு சீரடையத் தொடங்கிய பின்னர், ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என பலமுறை தகவல்கள் வெளியாகின.
எனினும், இந்தியாவிடம் இருந்து, அழைப்பு வராததால், ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் தொடர்ச்சியாக தாமதமாகக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த தடை நீங்கி, அவர் இரண்டு நாட்கள் பயணமாக வரும் 20 ஆம் திகதி புதுடெல்லிக்கு செல்ல உள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீளத் தொடங்கியுள்ள நிலை யில், அதற்கு கை கொடுத்த இந்தியாவுக்கு, ஜனாதிபதியாக அவர் முதல்முறையாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் மூலம் அவர் இந்தியாவுடன் உறவுகளை பலப்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இனப்பிரச்சினை விவகாரமும் முக்கியத்துவம் பெறும் எனக் கருதப்படுகிறது.
இந்த நிலையில்தான், தமிழ்த் தேசியக் கட்சிகள் 3 கடிதங்களை இந்தியப் பிரதமருக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த பத்தாம் திகதி, இந்திய பிரதமருக்கான கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரிடம் கையளித்து விட்டது.
ஒற்றையாட்சியை நிராகரிக்கும் தமிழர் தரப்புக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும், திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வை பெற்று தருவதற்கு இந்தியா உதவ வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை வைத்திருக்கிறது.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வை தமிழர்களுக்கு இந்தியா பெற்றுத் தருமானால் இந்தியாவின் நலன்களுக்கு ஒத்துழைப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் நலன்களுக்கு உதவ தயார் என சமிக்ஞையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி காண்பித்து இருக்கிறது.
ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றாக கடிதம் அனுப்புகின்ற முயற்சி பிசுபிசுத்து போயிருக்கிறது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இந்திய பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட உள்ளதாக பல வாரங்களுக்கு முன்னரே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தக் கடிதம் மற்றும் அதன் உள்ளடக்கம் தயாராக முன்னரே செய்திகள் வெளியாகி விட்டன.
அந்த கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் கையெழுத்தையும் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பாக காணப்பட்ட முரண்பாட்டினால் அவர் அதில் கையெழுத்திடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து கட்சிகளின் கூட்டணி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை மட்டும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
எனினும், சமஷ்டித் தீர்வுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்பதையும் அதில் சேர்த்துக் கொள்ளுமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்திய போது, அதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஐந்து கட்சிகளும், தமிழ் மக்கள் கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரனும், கையெழுத்திட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை, இந்தப் பத்தி எழுதப்படும் போது, தமிழரசு கட்சி தனியாக ஒரு கடிதத்தை இந்திய பிரதமருக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவது ஒரு சம்பிரதாயமாகி விட்டது.
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி என பல கட்சிகள் அமைப்புகள் தனியாகவும் கூட்டாகவும் இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பி இருந்தன.
அந்த கடிதங்கள் பலவற்றுக்கு பதில் கூட வந்ததாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லியில் இருக்கும்போது தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்துமாறு இந்திய பிரதமரிடம் வலியுறுத்துவதுதான், தமிழ் கட்சிகளின் தற்போதைய கடிதம் அனுப்பும் படலத்தின் முக்கிய நோக்கம்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் இனச்சிக்கல், அதற்கு ஒரு நீண்டகாலத் தலைவலியாகவே இருந்து வருகிறது.
இந்த சிக்கல் ஒரு பக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இலங்கையில் அது தலையீடு செய்வதற்கான ஒரு வழி மூலமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
1980களின் தொடக்கத்தில் இலங்கையில் அமெரிக்கத் தளம் வரக்கூடும் என்ற அச்சம் இந்தியாவிடம் காணப்பட்டது. அந்தக் கட்டத்தில் தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்களைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்தது இந்தியா.
அவர்கள் அழுத்த சக்திகளாக மாறிய போது, இலங்கையுடன் அமைதி உடன்பாட்டைச் செய்து கொண்ட இந்தியா, 13 ஆவது திருத்தச்சட்டத்தை தமிழர்களுக்கான தீர்வாக அறிவித்தது.
1987இல் தமிழர் தரப்பினால் நிராகரிக்கப்பட்ட அந்த தீர்வையே, இன்றைக்கும் இந்தியா தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக வலியுறுத்துகிறது.
13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தமிழர்கள் அதிகாரம் பெறுவதற்கு இந்தியா ஆதரவு வழங்கவும் இல்லை, வழங்கத் தயாராகவும் இல்லை.
13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரையான- கடந்த 35 வருடங்களில், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.
இந்தியா தனது பாதுகாப்பு நலன்களை உறுதி செய்யும் விடயங்களில் கவனம் செலுத்தி விட்டு, 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கத்தை பொருட்டாக கருதவுமில்லை.
இதனை இலங்கை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை மெல்ல மெல்ல வலுவிழக்கச் செய்து வந்திருக்கிறது.
போர் முடிந்த பின்னர், 13 பிளஸ் வரை வாய்ப்பேச்சுக்கள் சென்ற போதும், 13 மைனஸ் கூட அமுல்படுத்தப்படவில்லை.
ராஜபக் ஷவினரும், மைத்திரிபால சிறிசேனவும் 13 விடயத்தை தந்திரமாக கையாண்டு விட்ட நிலையில் இப்போது பந்து ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளது.
அவர் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும், அது தான் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தார். மகாநாயக்கர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பின்னர், அவர் 13 என்ற பேச்சையே எடுக்கவில்லை.
இத்தகைய தருணத்தில் தான், ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் இடம்பெறப் போகிறது.
13ஐ நடைமுறைப்படுத்தும் விடயம் தொடர்பாக இந்தியாவிடம் அவர் என்ன வாக்குறுதி கொடுக்கப் போகிறார் அல்லது இந்தியா அவரிடம் எத்தகைய வாக்குறுதியை பெற்றுக் கொள்ளப் போகிறது என்பது முக்கியமான எதிர்பார்ப்புக்குரிய விடயமாக உள்ளது.
தமிழர் பிரச்சினை விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளதாகவும், தமிழர்களுக்கு நிலையான, கெளரவமான, நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாடு தங்களுக்கு இருப்பதாகவும், இந்தியப் பிரதமர் மோடியும், அவரது அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளும் பலமுறை கூறியிருக்கிறார்கள்.
அந்தக் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு தான், தமிழ்க் கட்சிகள் கடிதம் எழுதும் படலத்தை தொடங்கியிருக்கின்றன.
அது சரியானது தான்.
ஆனால், தமிழ்க் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவிடம் நிலையான தீர்வை வலியுறுத்தும் விடயத்தில் ஒன்றுபட்டிருக்கவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் அரசுக் கட்சியும் சமஷ்டித் தீர்வை வலியுறுத்த, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் என்ற குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவது பற்றியே பிரஸ்தாபிக்க முனைந்திருக்கின்றன.
தமிழர்களுக்கு பிரச்சினை உள்ளது என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன என்பதில் தமிழர்களிடமே குழப்பம் இருக்கிறது.
இந்தக் குழப்பத்தை தமிழர்கள் தீர்த்துக் கொள்ளாமல், அதாவது, தங்களின் இலக்கை அவர்கள் தெளிவாக வரையறுத்து, அதில் விடாப்பிடியான கொள்கையுடன் இருப்பதை உறுதி செய்யாமல், இந்தியா தீர்வைத் தரும் என்றோ, அமெரிக்கா தீர்வை தரும் என்றோ நம்ப முடியாது.
அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தங்களின் நலன்களுடனும் உறவுகளுடனும் இணைத்துப் பார்த்தே தீர்மானிப்பவர்கள்.
அவர்கள் தங்களுக்குத் தேவையானது கிடைக்கும் வரை அழுத்தங்களைக் கொடுத்து விட்டு, கிடைத்த பின்னர் கைவிடக் கூடியவர்கள். இந்த நெளிவுசுழிவுகளுக்கு மத்தியில் தான் தமிழர்கள் தங்களின் தீர்வைத் தேடவோ பெற்றுக் கொள்ளவோ முடியும்.
இவ்வாறான சிக்கல்களை உணராமல், கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்வதும், ஒற்றுமையாக ஒரே நிலைப்பாட்டை வலி யுறுத்துவதும் முக்கியமானது.
அந்த நிலை என்றைக்கு வந்து சேரும்?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM