நமது அரசியல் நிருபர்
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை சந்திப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இந்தத் திட்டம் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மைக் கட்சி தலைவர்களை ஒவ்வொருவராக அழைத்து இந்த விடயங்கள் தொடர்பில் ஆலோசித்து வருவதுடன் அவர்களது ஆதரவை கோரும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக தெரிகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் கட்சித் தலைவர் ஒருவரை அழைத்து தனது எதிர்கால அரசியல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியிருக்கின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியுடன் செல்லப் போவதில்லை என்றும் அந்தக் கட்சியிலுள்ள ஒரு குழுவினரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அந்தவேளையில் சிறுபான்மைக் கட்சிகள் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும். அந்தக் கட்சிகள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தொகையில் பெரும்பான்மையான தீர்மானம் எடுக்காத வாக்குகள் (மிதக்கும் வாக்குகள்) தற்போது அதிகரித்துள்ளன. அந்த வாக்குகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை இணைந்து சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வரமாட்டார். அவரை இந்தக் கணக்கெடுப்பில் எடுக்காமலேயே நாம் எமது திட்டத்தை வகுத்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிகின்றது.
இதிலிருந்து ஜனாதிபதிக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளமையும் அதற்கான கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றமையும் நிரூபணமாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்திய வெளியுறவு செயலரை சந்திக்க முயன்ற சம்பந்தன்
இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட்ட அரசாங்க தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு செல்லவுள்ளார். அவரது விஜயம் தொடர்பில் கலந்துரையாடும் வகையிலேயே இந்திய வெளியுறவுச் செயலாளரின் இந்த விஜயம் அமைந்திருந்தது.
இலங்கை வந்திருந்த வெளியுறவுச் செயலாளரை சந்திப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை மாலை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் புதன்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தார்.
ஆனாலும் அவரை சந்திப்பதற்கான சம்பந்தனின் முயற்சி கைகூடியிருக்கவில்லை. இதன் காரணமாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே புதன்கிழமை பிற்பகல் சம்பந்தனை அவரது கொழும்பிலுள்ள இல்லத்தில் சென்று சந்தித்து பேசியிருந்தார். இதன்போது புதுடில்லி செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் சம்பந்தன் எடுத்துக் கூறியுள்ளார்.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சம்பந்தன் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியிருந்தார். இதன்போது இந்திய விஜயத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது என்று இந்திய உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவித்துள்ளதுடன் முடிந்தால் அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று கோரி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்தக் கடிதத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் கையொப்பத்தை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை மட்டும் அமுல்படுத்தக் கோரும் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட சம்பந்தன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே இலங்கை வந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவாத்ராவை சந்திப்பதற்கு சம்பந்தன் முயன்றதாக தெரிகின்றது. ஆனாலும் அந்த முயற்சி பயனளிக்காத போதும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியதுடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் மூன்று பிரிவாகியிருக்கும் ஐ.ம.ச.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் தொடர்ந்தும் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒரு பிரிவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட வேண்டும் என்று இந்தத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவே கூடாது, நாம் தனித்தே தொடர்ச்சியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை விட மூன்றாவது தரப்பினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லுறவை கொண்டிருக்கின்றார். அவர்களில் 25 பேர் வரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்களாயிருந்தால் அவர்களுடன் இணைந்து அடுத்த தேர்தல்களை சந்திக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிகின்றது.
கடந்த வாரம் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்துக்கான கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ, பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய, சட்ட மா அதிபர் உட்பட்டோர் பங்கேற்றிருந்தனர். இதில் ஐக்கிய மக்கள் சக்தி
யின் பாராளுமன்ற உறுப்பினர் தலாதா அத்து கோரளவும் பங்கேற்றிருந்தார். இவரும் முன் னர் நீதியமைச்சராக கடமையாற்றியிருந்தவர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் பல தடவைகள் அளவலாவி இருந்தார். இந்த விடயமானது நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தும் அணியில் தலதா அத்துகோரளையும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் தரப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதாக இல்லை. இந்த விவகாரத்தில் அவர் கடும் போக்கு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார். இதனால் அடுத்த தேர்தலொன்று அறிவிக்கப்படுமிடத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் முரண்பாடு தலைதூக்குமென்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லியை சமாளிக்கும் யுக்தியில் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி புதுடில்லிக்கு விஜயம் செய்கின்றார். 21ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் ஜூலை மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார். சரியாக ஒரு வருடங்களுக்குப் பின்னர் இந்தியப் பிரதமரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேசவுள்ளார். இலங்கையில் ஜனாதிபதியாக பதவியேற்கும் அரசியல் தலைவர்கள் உடனடியாகவே இந்தியாவுக்கு விஜயம் செய்வது வழமையாகும். ஆனாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக அழைப்பதற்கு இந்தியா விரும்பியிருக்கவில்லை. இதனால்தான் இவ்வளவு காலதாமதத்துக்குப் பின்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தையடுத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். சீனாவில் நடைபெறும் முக்கிய மகாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்த அழைப்பு சீன அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதியின் புதுடில்லி விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன் சீன விவகாரம் தொடர்பில் ஆராயப்படுமென்று தெரிகின்றது. இதனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது முக்கியத்துவம் உடையதாக அமைந்துள்ளது. அத்துடன் இந்திய மத்திய அரசின் கடும்போக்கு நிலைப்பாடும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
ஆனாலும், சீனா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் தெரிகின்றது.
டில்லியானது சீனாவுடன் இணைந்து வர்த்தக தொடர்புகளை பேணி வருகின்றது. வர்த்தகம் தொடர்பான அமைப்பில் அங்கம் வகிக்கின்றது. இவ்வாறிருக்கையில் சீனாவுடனான எமது வர்த்தக பொருளாதார உறவுகள் தொடர்பில் இந்தியா எவ்வாறு விசனம் தெரிவிக்க முடியும் என்று ஜனாதிபதி அண்மையில் தன்னைச் சந்தித்த தலைவர் ஒருவரிடம் கேள்வியெழுப்பியதாகவும் தெரிகின்றது.
இந்திய விஜயம் கடுமையாகவே அமையலாம். ஆனாலும் இந்தியாவுடன் இணைந்தே, குறிப்பாக தமிழ்நாட்டுடன் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். தமிழ் நாட்டுடன் இணைந்தே வர்த்தக ரீதியில் முன்னேறலாம். இராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும். அடுத்த ஆட்சியில் இந்தப் பாலத்தை எத்தகைய எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் அமைக்க திட்டமிட்டுள்ளேன். இந்தியாவுடன் சேர்ந்து பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தலைவரிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்த விடயங்களை புதுடில்லி விஜயத்தில் சுட்டிக்காட்டுவதற்கு ஜனாதிபதி தயாராகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கூட்டுக்கு முயலும் டலஸ் அணியினர்
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த டலஸ் அழகபெரும தலைமையிலான அணியினர் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தற்போது அந்த அணியினர் தாம் தனித்து புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினர் சிறுபான்மைக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். மனோ கணே சன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல கட்சிகளின் தலைமைகளை அவர்கள் பேச்சுக்கு அழைத்துள்ளனர். தனித்தனியாக இந்தக் கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு பேச்சுக்களை நடத்தி புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு இந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சம்பிக்க ரணவக்கவுடன் பேச்சுக்களை நடத்தி ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலை சந்திப்பது தொடர்பிலும் இவர்கள் ஆலோசித்து வரு கின்றனர்.
இதனைவிட ஜே.வி.பியுடனும் பேச்சுக் களை நடத்தி அவர்களுடன் கூட்டணி அமைப்பது தொடர்பிலும் இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஜே.வி.பியுடன் கூட்டணி அமைத்து விட்டு ஜனாதிபதி வேட்பாளராக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினியை நியமிப்பது என்றும் பின்னர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் போது பிரதம வேட்பாளராக சம்பிக்க அல்லது டலஸ் ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் இந்தத் தரப்பினர் ஆலோசித்து வருவதாக தெரிகின்றது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை 'யால வனத்திற்கு' மாற்ற யோசனை
சில தினங்களுக்கு முன்னர் ஆளும் கட்சி தலைவர்களை ஜனாதிபதி ரணில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் 'அஸ்வெசும திட்டம்' குறித்த சர்ச்சைகள் தொடர்ந்தும் பேசப்படு கிறது. இது அரசாங்கத்திற்கு பாதகமாக அமைய லாம் என்று ஜனாதிபதியிடம் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை அரசியலாக்கி முன்னெடுக் கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியினரே இதனை கூடுதலாக தூண்டுகின்றனர் என்று அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் குறிப்பிட்டார்.
இந்த இரு கருத்துக்களையும் மௌனமாக செவிமெடுத்திருந்த ஜனாதிபதி ரணிலை நோக்கி, சற்று உரத்த குரலில்... முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உருவாக்கிய 'ஜனசவிய' திட்டத்தினை இரத்து செய்துதான் 'சமுர்த்தி' திட்டம் அன்று கொண்டு வரப் பட்டது. ஆனால் 'சமுர்த்தியை' பாதுகாக்க ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் இன்று துணை நிற்கின்றமை வேடிக்கையாக உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
இதற்கு மேலும் உரமிடுவது போல், ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக அன்று நம்பிக்கையில்லாப் பிரேரனையை கொண்டு வந்த போது, தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவே அவரை பாதுகாத்தார். ஜனாதிபதி ரணில் அன்று ரணசிங்க பிரேமதாசவை பாதுகாத்திருக்கா விடின், அவரது புதல்வாரன தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அரசியலில் இருந்திருக்க மாட்டார் என்று வஜிர அபேவர்தன கூறினார்.
இந்த கருத்துக்களுக்கு மௌனித்த புன்னகையை தவிர வேறு எந்தவொரு மறுமொழியும் ஜனாதிபதியிடமிருந்து வெளிப்படவில்லை. இதன் போது அமைச்சர் பந்துல குணவர்தன, ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் ஒரு யோசனையை முன் வைப்பதாக கூறினார். அதாவது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எமது யோசனை என ஜனாதிபதியை நோக்கி தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஜனாதிபதி உட்பட ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமைச்சர் பந்துல குணவர்தனவை வியப்புடன் பார்த்தனர். இதனால் சில நொடிகள் ஜனாதிபதியின் அலுவலக அறை மௌமாகியது.
மீண்டும் கருத்துரைத்த அமைச்சர் பந்துல, "நான் என்ன கூறுகிறேன் என்றால், எதிர்க்கட்சி தலைவர் எப்போதுமே யால வனவிலங்குகள் சரணாலயத்திலேயே உள்ளார். எனவே கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் ஒன்றை பராமரிப்பதை விட அதனை யால வனத்திற்கு இடமாற்று வதால் அரசாங்கத்திற்கு ஏதோவொரு வழியில் செலவுகள் குறையும் என்பதையே கூறுகிறேன்" என்றார்.
இதனை செவிமெடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களும் பேரொலியுடன் சிரித்தனர். இதனை தொடர்ந்து மௌனத்தை கலைத்த ஜனாதிபதி,
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதை விட, 'அஸ்வெசும' திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதே முக்கியமானதாகும். அதனை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை நோக்கி கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM