சதீஷ் கிருஷ்ணபிள்ளை
இந்த உலகம் விசித்திரமானது. இங்கு கோட்பாடுகள் மோதிக் கொள்ளும். கோட்பாட்டு மோதல் ஆரோக்கியமான கருத்தாடல்களாக மாறலாம். அதனுடாக புதிய கோட்பாடுகள் தோன்றலாம். மாறாக, மாறுபட்ட கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் அடித்துக் கொண்டு சாகலாம். சண்டையை உருவாக்கிய காரணம் சல்லிக்கும் பெறுமதியற்றதாகக் கூட இருக்க முடியும்.
இன்றும் கோட்பாட்டு மோதல் நீடிக்கிறது. ஒரு மேலைத்தேய நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய மனிதன். இவனுக்கு உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டிய தேவை. தகாதது என்பதை அறிந்தும் தாம் செய்த செயல் மூலம் ஒரு மோதலுக்குக் காரணமாக இருந்திருக்கிறான். அதிர்ஷ்டவசமாக, இது ஆயுதமோதலாக பரிணமிக்கவில்லை.
ஈராக்கில் இருந்து சுவீடன் சென்ற சல்வான் மொமிக்கா. ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறையின் முதல் நாளன்று ஸ்டொக்ஹொம் நகர பெரிய பள்ளிவாசல் முன்னால் நின்றார். திருக்குர்ஆன் பக்கங்களைக் கிழித்தார். காலால் உதைத்தார். பின்னர், தீயிட்டுக் கொளுத்தினார். இந்தக் காட்சியை சமூக வலைதளங்களில் சேர்த்தார்.
இதுவொன்றும் எதேச்சையான சம்பவம் அல்ல. ஏற்கெனவே திட்டமிட்டதுதான். அல்குர்ஆன் பிரதியை எரிப்பதற்கு அனுமதி கேட்டபோது, சுவீடன் பொலிஸார் ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்தார்கள். எனினும், மொமிக்காவின் கோரிக்கையை ஏற்று, அவர் நினைத்ததை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது அவரது கருத்துச் சுதந்திரம் என்பதன் அடிப்படையில்.
மொமிக்காவின் செயல் சுவீடனில் மாத்திரமன்றி உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களை ஆத்திரப்படுத்தியதில் வியப்பில்லை. இதன் காரணமாக, உலகின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் பெற்றதிலும் ஆச்சர்யமில்லை. மொமிக்காவை மாத்திரமன்றி, சுவீடனையும் பெரும்பாலான நாடுகள் கண்டித்தன. சில முஸ்லிம் நாடுகள் ராஜதந்திர ரீதிலான நடவடிக்கை எடுத்தன.
கடைசியாக, இந்த விவகாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வந்தது. குர்ஆன் எரிப்பு சம்பவத்தின் அடிப்படையில், மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அடங்கிய மேற்குலகம் கடுமையாக ஆட்சேபித்தது.
மறுபுறத்தில், இந்தியா, பாகிஸ்தானுடன் சேர்ந்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. ஈற்றில், 28 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க தீர்மானம் நிறைவேறியது.
மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் தூண். சர்வதேச சட்டத்தில் அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்ட விடயம். எந்த விதத்திலும், எவருக்காகவும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று மேற்குலகம் கருதுகிறது.
மறுபுறத்தில், திருக்குர்ஆன் என்பது வெறும் புத்தகம் அல்ல. அது சமய ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் பெறும் புனித வசனங்களின் தொகுப்பு. அது இஸ்லாமிய மத நம்பிக்கையின் அடையாளம். திருக்குர்ஆனை எரித்தல் என்பது எல்லாம் வல்ல இறைவனை அவமானப்படுத்துவதற்கு சமமானது என இஸ்லாமிய மக்கள் கருதுவார்கள்.
சுவீடன் கருத்துச் சுதந்திரத்தை தீவிரமாக மதிக்கும் நாடாக இருந்தாலும், திருக்குர்ஆனை எரிப்பதை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற கோட்பாட்டுக்குள் அங்கீகரிக்க முடியுமா? கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் கீழ், ஒருவர் சகித்துக் கொள்ள முடியாததை கூறலாம். ஏசலாம். வசை பாடலாம். இந்த எதுவும் எந்தவொரு தனிநபருக்கோ, குழுவிற்கோ எதிராக வன்முறையைத் தூண்டுவதாக, வெறுப்பைக் கட்டவிழ்த்து விடுவதாக இருக்கக்கூடாது.
இது சர்வதேச சட்டங்கள் தாண்டிய அடிப்படை மனிதநேய தர்மம் என்று கூட சொல்லாம். எனவே, எங்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதைத் தவிர்த்தல் என்ற கோட்பாட்டை ஞாபகம் வைத்திருப்பது அவசியமாகிறது.
திருக்குர்ஆன் எரிப்புச் சம்பவத்தை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மதிக்கும் ஜனநாயகம் என்ற கோட்பாட்டுக்கும், அடிப்படை மத நம்பிக்கைகளை மதித்தல் என்ற கோட்பாட்டுக்கும் இடையிலான மோதலாகக் கருத முடியாது. இங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற பெயரில், சில மேலைத்தேய நாடுகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட தகாத செயல்கள் வன்முறைகளில் முடிந்திருக்கின்றன.
2005ஆம் ஆண்டில் டென்மார்க் பத்திரிகையொன்று நபி பெருமானின் உருவத்தை கேலிச்சித்திரங்களாக வரைந்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை சோதிக்க முற்பட்டமை தொடக்கம், கடந்த ஜனவரி மாதம் சுவீடனில் தீவிர வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் திருக்குர்ஆனை எரித்தமை வரையில் எத்தனையோ சம்பவங்களை உதாரணமாகக் காட்ட முடியும்.
இவையெல்லாம் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட செயல்களா அல்லது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் பெயரால் வெறுப்பை உமிழும் செயல்களா என்ற கேள்வி இஸ்லாமிய சமூகத்தில் உள்ளது.
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பது இஸ்லாத்திற்கு எதிராக காழ்ப்புணர்ச்சியைம், வெறுப்பையும் வெளிப்படுத்துவற்குரிய கருவியாக பயன்படுத்தப்படுகிறதா என்ற வினாவும் இருக்கிறது. வன்மமும், தீயநோக்கமும் கொண்ட எந்தவொரு மனிதரும் இஸ்லாத்தை அவதூறு செய்யலாம், அத்தகைய மனிதருக்கு கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பதன் பெயரால் மேற்குலகம் பாதுகாப்பு வழங்கும் என்று இஸ்லாமிய நாடுகள் கருதுகின்றன.
ஸ்டொக்ஹோமில் திருக்குர்ஆனை எரித்த மொமிக்காவின் பின்புலத்தை பார்க்கலாம். இதனை ஆராய்ந்தால், இந்த மனிதர் இஸ்லாத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டிருப்பதை தெளிவாக அறிய முடியும். இந்த மனிதர் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவீடனில் கால்பதித்திருக்கிறார்.
மூன்று வருடங்களுக்குப் பின்னர் இவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. சுவீடன் குடிவரவு அமைப்பு மொமிக்காவிற்கு வழங்கிய மூன்று வருடகால வதிவிட அனுமதிப் பத்திரம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலாவதியாகிறது. இதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமென்ற திட்டமிடலுடன் அவர் இயங்கியிருக்கிறார்.
தமது பேஸ்புக்கில் தம்மை நாத்திகராகவும், அறிவுபூர்வமான அரசியல்வாதியாகவும், சிந்தனாவாதியாகவும், எழுத்தாளராகவும் விபரித்திருக்கிறார்.
தமது பேஸ்புக், டிக்டொக் கணக்குகளை பிரசார கருவியாகவே பயன்படுத்தியிருக்கிறார். தாம் ஏதாவது வீடியோவை சமூக வலைதளங்களில் சேர்த்தால், அதனை ஆகக்கூடுதலான முஸ்லிம் நாடுகளில் பார்க்கக்கூடிய (ஹேஷ்டெக்) ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாம் செய்யத் திட்டமிட்டுள்ள சாகசக் காரியம் ஆகக்கூடுதலாக பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மொமிக்கா இயங்கியிருப்பது தெரிகிறது.
எனினும், இந்த மனிதர் ஈராக்கில் வாழும் காலத்தில் ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய இமாம் அலி படையணி என்ற கிளர்ச்சிக்குழுவுடன் சேர்ந்து இயங்கியமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஈராக்கில் உள்ள மற்றொரு கிறிஸ்தவ ஆயுதக் கிளர்ச்சிக் குழுவின் தலைவருடன் அதிகாரப் போட்டியின் விளைவால், மொமிக்கா சுவீடனுக்கு தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.
இங்கு இவர் ஸ்வீடிஷ் டெமொக்ரட்ஸ் என்ற தீவிர வலதுசாரி தேசியவாதக் குழுவுடன் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த மனிதருக்குத் தேவை சுவீடனில் நிரந்தர வதிவிடம் பெற்று சுவீடன் பிரஜையாக மாறுவது தான். இதற்காகவே திருக்குர்ஆன் எரிப்பு நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாகக் கருத முடியும்.
எது எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தின் எதிர்விளைவுகள் உயிர் கொல்லும் வன்முறைகளின் திசையில் செல்லாமல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றியும், மற்றவர்களுக்கு ஊறுவிளைத்தலை தவிர்த்தல் பற்றியும் தீவிர கருத்தாடலை ஏற்படுத்தியிருப்பது அதிர்ஷ்டவசமானது எனலாம். அது ஆரோக்கியமானதும் கூட.
திருக்குர்ஆன் எரிப்பு சம்பவத்தால் சுவீடன் சமூகம் பற்றி எரிகிறதாயின், இம்முறை உலகப் பஞ்சாயத்தில் தண்ணீர் ஊற்றுவது எவ்வாறு என்பது பற்றி ஆராயப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் மத வெறுப்பு அதிகரிப்பது பற்றி பேசியிருக்கின்றன. மத நம்பிக்கைகளை சகித்துக் கொள்வதில் உள்ள குறைபாடுகளை விவாதித்திருக்கின்றன. இதன் அடிப்படையில், பகைமையும், பாரபட்சமும், வன்முறை களும் தூண்டிவிடப்படுவது பற்றி ஆராய்ந்தி ருக்கின்றன.
இது தவிர, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சமீபகால மாக திருக்குர்ஆனை அவமதிக்கும் வகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட செயல்கள் வன்மை யாக கண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை உலகப் பொது அமைப்பாக இருக்கையில், அதன் மனித உரிமைகள் பேரவையில் ஜனநாயக ரீதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாவிட்டாலும், அதனை அனு சரித்து நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் மேற்கு நாடுகளுக்கும் உண்டு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM