லத்தீப் பாரூக்
மேற்குலகில் நாடோடிகளாகத் திரிந்த யூதர்களை கொண்டு வந்து குடியேற்றுவதற்காக பலஸ்தீன பூமியில் கொலைகள், தொடர் படுகொலைகள், இனஒழிப்பு ஆகிய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை நாடான இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பிரதேசத்தின் ஜெனின் நகரில் பலஸ்தீன அகதி முகாம்கள் மீது ஜுலை மாதம் மூன்றாம் திகதி திங்கள் கிழமை மூர்க்கத்தனமான யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளது.
இந்த மூர்க்கத்தனத்துக்கு அமெரிக்கா ஐரோப்பா என்பன பூரண ஆதரவை வழங்கி உள்ளதோடு அரபுலக சர்வாதிகாரிகள் வழமைபோல் மௌனம் காத்து உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பின் போது இஸ்ரேல் அப்பாவி மக்களின் வீடுகளை அபகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெனின் நகருக்குள் மருத்துவ உதவிகள் வராமல் தடுக்கப்பட்டுள்ளது.
மூன்று பலஸ்தீன சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 120 பேர் காயம் அடைந்துள்ளனர். 300 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 38 மணிநேரமாக இந்தத் தாக்குதல் நீடித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் அழிவை தவிர வேறு எதையும் இங்கு நிகழ்த்தவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்ட பலர் தெரிவித்துள்ளனர்.
ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் மிகவும் அவநம்பிக்கையான எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி உள்ளது. இந்த அகதி முகாம் பிரதேசத்தில் உள்ள கட்டிடங்களில் 80 சதவீதமானவை முழு அளவில் அல்லது பகுதி அளவில் நாசமாக்கப்பட்டுள்ளதாக ஜெனின் நகர உள்ளுராட்சி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
ஜெனின் நகர வெளிப்பகுதியில் அமைந்துள்ள பெரிய அளவிலான ஓரளவு நிரந்தரமான சுமார் 14 ஆயிரம் பேர் வசிக்கும் அகதி முகாம் மீது இரண்டு தினங்களாக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலஸ்தீன ஆயுததாரிகளுடன் கிட்டத்தட்ட ஒரு யுத்தமாக மாற்றப்பட்ட இந்த தாக்குதல் நீர் மற்றும் மின்சார விநியோகம், சுகாதார வசதிகள் போன்ற உள் கட்டமைப்பு வசதிகள் மீது வேண்டுமென்றே பரவலாக தாக்குதல் நடத்தும் விதத்தில் அமைந்திருந்தது.
முஸ்தபா பெடோரி என்ற பத்தி எழுத்தாளர் தெரிவித்துள்ள கருத்தின் படி. ஜெனின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாங்கள் வெற்றி ஈட்டியதாக இஸ்ரேல் அறிவிக்கலாம். ஆனால். அது உலகில் மிகவும் நவீனமான ஆயுத வசதிகளைக் கொண்ட ஒரு இராணுவம், பெரும்பாலும் யுத்த அனுபவமோ அல்லது பயிற்சியோ அற்ற பொதுமக்களைக் கொண்ட ஒரு சுதந்திர போராட்டக் குழுவுக்கு எதிராகப் பெறப்பட்ட ஒரு வெட்கக் கேடான, கேவலமான வெற்றி அறிவிப்பாகவே அமையும்.
இஸ்ரேலின் வல்லமை மிக்க இராணுவ ஆற்றல்களால், அது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் 'ஜெனின் நோய்க்குறி'யை ஒரு போதும் கொன்று விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேற்குக் கரை பிரதேசத்தில் இஸ்ரேலின் காலணித்துவம் தான் நெத்தன்யாஹுவின் நிகழ்ச்சி நிரலில் மேல் மட்டத்தில் இருக்கும் விடயமாகும். பலஸ்தீனர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட பூமியில் சட்டவிரோதமாகக் குடியேற்றப்பட்ட யூதர்களுக்காக மேலும் ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நெத்தன்யாஹுவின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பூமியில் இவ்வாறான குடியேற்றஙகளை அமைப்பது சட்ட விரோதமானது என்பது அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் இந்த ரவுடி ராஜ்ஜியத்துக்கு சர்வதேச சட்டங்கள், மனித உரிமைப் பிரகடனங்கள், பலஸ்தீனத்தில் மூர்க்கத்தனமான இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் தீர்மானங்கள் என எல்லாவற்றையும் மீறி முழுமையான சட்ட விடுபாட்டு உரிமையுடன் இதைச் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் எல்லையற்ற ஆதரவு என்பது ஒன்றும் புதியது அல்ல. ஆனால் அது கூட இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் மீண்டும் மீண்டும் வந்து போராடுவார்கள் என்ற நிலையை மாற்றப் போதில்லை.
தங்களது எதிரி எந்தளவு பலம் பெருந்திய ஒரு சக்தி என்பதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், இந்த யதார்த்தத்தை இஸ்ரேலும் அதன் நேச அணிகளும் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன என்பது தான் கேள்வி.
பலஸ்தீன சம்பவங்களின் கோர்வைப்படி இஸ்ரேல் அதன் நோக்கத்தில் வெற்றி பெறவே இல்லை. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என சொல்லப்படும் ஜெனின் பிரதேசத்துக்குள் கூட இஸ்ரேலிய படைகளால் ஆழமாக ஊடுருவ முடியவில்லை என்பதே இஸ்ரேல் அடைந்துள்ள தோல்வியின் முக்கியமான அறிகுறியாகும். அண்டைய பிரதேசமான டமாஜ்ஜில் நடந்த யுத்தம் இதை தெளிவாக கோடிட்டுக் காட்டுகின்றது.
இஸ்ரேல் இராணுவத் தகவல்களின் படி 3,000 படையினர் இந்த ஆக்கிரமிப்பில் பங்கேற்றுள்ளனர். நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள், ஆளில்லா விமானங்கள் இன்னும் பல்வேறு விதமான இராணுவ உபகரணங்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஜெனின் நகரில் உள்ள வதிவிடங்கள் அணைத்தையும் முற்றாக அழித்து விடுவதுதான் இந்த ஆக்கிரமிப்பின் நோக்கமாக இருந்துள்ளது. பலஸ்தீனர்கள் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், தமது சுதந்திரத்துக்காகவும் சுய கௌரவத்துக்காகவும் மட்டுமே போராடி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் குழுவொன்று இஸ்ரேலின் கொடூரங்கள் சர்வதேச சட்டங்களை கடுமையான அளவில் மீறி உள்ளன, அது பிரயோகித்துள்ள படைப் பலமானது யுத்தக் குற்றங்களுக்கு இணையானது என பிரகடனம் செய்துள்ளது.
2002 ஆம் ஆண்டில் ஜெனின் முகாம் அழிக்கப்பட்டதன் பின் அங்கு இடம்பெற்றுள்ள மிக மோசமான மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும். விமானத் தாக்குதல் உட்பட கடந்த இரு தசாப்தங்களில் இடம்பெற்றுள்ள மிகக் கடுமையான தாக்குதல் இதுவென்று அந்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலின் பிரதான இலக்குகளில் ஒன்றாக பலஸ்தீன மக்களுக்கான சுகாதார கட்டமைப்பு காணப்பட்டது. காயம் அடைந்தவர்களை நெருங்க விடாமல் பல அம்பியூலனஸ் வண்டிகள் தடுக்கப்பட்டுள்ளன. ஜெனின் பொது வைத்திய சாலை மீது இஸ்ரேல் படைகள் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பிரயோகித்துள்ளனர்.
பலஸ்தீன மக்களுக்கான ஒரு கூட்டுத் தண்டனையாக இந்தத் தாக்குதல் காணப்பட்டது. இஸ்ரேலிய அதிகாரிகளின் பார்வையில் இவர்கள் தமது பாதுகாப்புக்கான ஒட்டு மொத்த அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றனர் என்று ஐ.நா குழு மேலும் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிக்குள் வாழும் பலஸ்தீன மக்கள் சர்வதேச சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட மக்களாகக் கருதப்படுபவர்கள். அவர்களுக்கு குற்றமற்றவர்கள் என்ற அனுமானம் உட்பட எல்லாவிதமான உரிமைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பாளர்களால் அவர்களை ஓட்டுமொத்தமாக அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள் என்ற ரீதியில் நடத்தவும் முடியாது. கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பூமியில் எஞ்சியுள்ள பகுதிகளையும் மேலும் மேலும் தம்மோடு இணைத்துக் கொள்ளவும், பலஸ்தீன மக்களை இடம்பெயரவும் வெளியேற்றவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியாது என்பதையும் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டி உள்ளது.
பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் அரசாங்கம் வலதுசாரி கட்சிகளின் ஒரு கூட்டணி அரசாங்கம். இது தீவிரப் போக்கு பாசிஸவாதிகளையும் உள்ளடக்கியது. மேலும் இந்தக் கூட்டணி மேற்குக் கரைப் பிரதேசத்தின் சட்டவிரோத குடியேற்றப் பகுதிகளில் மிகப் பெரிய தளத்தையும் கொண்டுள்ளது.
இந்த பயங்கரவாத கொலைகார பிரசாரத்தை தர்க்க ரீதியாக ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் தயாராகி வருகின்றது. அதற்கான வழிமுறையாக இலட்சக்கணக்கான பலஸ்தீன மக்களை பலவந்தமாக வெளியேற்றி மேற்குக் கரைப் பகுதியை முற்றாக இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளும் கைங்கரியத்தில் அது ஈடுபட்டுள்ளது.
மேற்குக் கரைப் பிரதேசத்தில் இருந்து ஒட்டுமொத்த அரபு மக்களையும் வெளியேற்றிவிட்டு அந்தப் பிரதேசத்தை அபகரித்து அதில் யூத குடியேற்றங்களை நிறுவி இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதில் தாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாஸிஸ அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் மிகவும் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
இஸ்ரேல் 1947 - 1948 காலப் பகுதியில் பலவந்தமாக ஸ்தாபிக்கப்பட்ட போது அரபு மக்களுக்கு எதிராக தாங்கள் கையாண்ட அதே கொள்கையை மீண்டும் பின்பற்றி அமுல் செய்யப் போவதாகவும் அவர்கள் பகிரங்கமாகக் கூறுகின்றனர்.
இந்தப் பிரசாரம் இன்று இனஒழிப்பு பிரசாரம் என அடையாளப்படுத்தப்படுகின்றது. பலஸ்தீனத்தில் அரபு மக்கள் செறிவாகவும் பெரும்பான்மையாகவும் வாழ்ந்த பகுதியை இஸ்ரேலுடன் இணைத்து அந்தப் பிரதேசத்தை யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசமாக மாற்றியமைப்பதுதான் இந்தத் திட்டம்.
மேற்குக் கரையில் இஸ்ரேலின் மூர்க்கத்தனம் அமெரிக்காவின் முழு அளவிலான சம்மதம் மற்றும் அனுமதியுடனேயே இடம்பெறுகின்றது. ஜோ பைடன் நிர்வாகமும் நிச்சயமாக இந்தச் செயலுக்கு பச்சைக் கொடி காட்டி உள்ளது என்பதும் கண்கூடாகத் தெரிகின்றது.
வெள்ளை மாளிகை ஊடக தொடர்பாளர் கெரின் ஜீன் பியர் கடந்த வாரம் தெரிவித்துள்ள கருத்தில் 'ஹமாஸ், பலஸ்தீன ஜிஹாத் மற்றும் பயங்கரவாத குழுக்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கும் அதன் மக்களுக்கும் உள்ளது என்பதை நாம் உறுதி செய்வதோடு அதற்கு பூரண ஆதரவும் வழங்குகின்றோம்.
இஸ்ரேல் எமது நெருங்கிய நண்பனும் பங்காளியும் ஆகும். அவர்களின் தேசிய பாதுகாப்போடும் பாதுகாப்பு அதிகாரிகளோடும் நாம் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். எமது தொடர்புகள் பற்றி நாம் வாசித்துக் காட்டுவதற்கு எதுவும் இல்லை. நாம் இஸ்ரேலுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம்' என்று கூறி உள்ளார்.
இவ்வாண்டு ஆரம்பம் முதல் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இதுவரை 155 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது 2002 ஆம் ஆண்டின் இரண்டாவது இன்திபாதா போராட்டத்தின் பின்னரான பெரும் எண்ணிக்கையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM