யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ் சிங்கள மக்களிற்கென 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் முன்பு வசித்துவந்த சிங்கள தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக வேறு இடங்களிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களை மீளக் குடியமர்த்தும் நோக்கில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இன்று வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பமானது.

இவ்வாறு இடம்பெயர்ந்த ஐம்பதிற்குமேற்பட்ட சிங்கள குடும்பங்கள் உள்ளிட்ட இருநூறிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் படிப்படியாக நாவற்குழி பகுதியில் மீள்குடியேற்றப்பட்டதுடன் அவர்களிற்கான வீதி புனரமைப்பு மின்சாரம் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த இருநூற்றைம்பது குடும்பங்களிற்குமான வீட்டுத்திட்டத்தை வழங்க வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் கிழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி நாவற்குழி மேற்கு பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் குடியிருந்துவரும் 200 தமிழ் குடும்பங்களுக்கும் 50 சிங்களக்குடும்பங்களுக்குமாக இருநூற்றைம்பது வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் தலா ஐந்து லட்சம் ரூபா பெறுதியில் சகல வசதிகளையும் உள்ளடக்கியவாறு குறித்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.