மாவீரன்- விமர்சனம்

Published By: Ponmalar

14 Jul, 2023 | 07:21 PM
image

தயாரிப்பு: சாந்தி டாக்கிஸ்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு, சுனில், மிஷ்கின் மற்றும் பலர்.

இயக்கம்: மடோன் அஸ்வின்

மதிப்பீடு: 3/5

'மண்டேலா' என்ற படத்தின் மூலம் வாக்காளனின் வலிமையை பார்வையாளனுக்கு ஜனரஞ்சகமாக விவரித்த இயக்குநர் மடோன் அஸ்வின், இந்த திரைப்படத்தில் கட்டாயத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்படும் பூர்வ குடி மக்களின் இடபெயர்வும், அதன் பின்னணியில் உள்ள தகிடுதத்தங்களையும் 'மாவீரன்' என்ற பெயரில் ஃபேண்டஸி ஜேனரில் சொல்லி இருக்கிறார். இது ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.

சென்னை கூவம் நதிக்கரையின் பின்னணியில் அதன் கரையோரம் குறைவான வசதிகளுடன் கதையின் நாயகனான சத்யா எனும் சிவகார்த்திகேயன் தனது தாய் சரிதா மற்றும் தனது தங்கையுடன் வசித்து வருகிறார். இவர் பிரபலமான முன்னணி நாளிதழ் ஒன்றில் காமிக்ஸ் கதையை எழுதி, வரையும் பணியினை செய்கிறார். அடிப்படையில் பயந்த சுபாவமும், கோழையுமான சத்யா, 'மாவீரன்' என்ற காமிக்ஸ் கதையை வரைந்து எழுதத் தொடங்குகிறார். இந்நிலையில் இந்த கரையோரம் வசிக்கும் ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களை அரசு, 'மக்கள் மாளிகை' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் இடம்பெயர சொல்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் தரமற்றதாக இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாயம் இருக்கிறது. இங்கு மக்கள் வாழ வேண்டும் என அரசு மற்றும் அரசியல் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதி தரமற்றதாக இருப்பதால் பல்வேறு குறைபாடுகள் நாளாந்தம் ஏற்படுகிறது. இதனால் அங்கு மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். சத்யா அந்த குடியிருப்பில் குறைபாடுகளுடன் சமரசம் செய்து கொண்டு வாழ்கிறார். தன் குடும்ப உறுப்பினர்களையும் சமரசத்துடன் வாழுமாறு கேட்டுக்கொள்கிறார். இந்நிலையில் குடியிருப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி சத்யாவின் தங்கையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர் கொள்ள தயாராக இல்லாத சத்யா மீது அவரது தாயார் தவறான அபிப்பிராயத்தை கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். இதன் போது அவருக்கு அற்புதமான குரலொலி சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியை வைத்துக்கொண்டு அவர் தரமற்ற கட்டுமானத்தில் குடியிருக்கும் மக்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

வழக்கமாக கலகலப்பாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. இந்த திரைப்படத்தில் காமிக்ஸ் கலைஞராக நடித்து கவர்கிறார். இவருக்கு பிரத்யேகமாக கிடைக்கும் குரலொலி சக்திக்கு இவர் எதிர்வினையாற்றி நடித்திருக்கும் நடிப்பு- ரசிகர்களை வசீகரிக்கிறது. நகைச்சுவை, நடனம், எக்சன், சென்டிமென்ட் என அனைத்து தளங்களிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' அவருடைய திரையுலக பயணத்தில் முக்கியமான இடத்தை பெறும். இவரைத் தொடர்ந்து வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கினின் நடிப்பு.. குறிப்பாக கண்களாலேயே நடித்து இருக்கும் நடிப்பு சபாஷ். படத்தின் முதல் பாதி முழுவதும் யோகி பாபுவின் நகைச்சுவையால் அதகளமாகிறது. நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் கதாநாயகனுக்கு சில இடங்களில் உதவினாலும்.. வழக்கமான சினிமா கதாநாயகியாகத்தான் வருகிறார். சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா- சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்திருந்தாலும் தன் அனுபவத்தை திரையில் முத்திரையாக பதிக்கிறார்.

படத்தில் பாராட்டக்கூடிய அம்சம்.. இந்த திரைப்படம் இயல்பான நிலையிலிருந்து பேண்டஸி எக்சன் ஜேனருக்கு மாறும்போது.. அதற்காக இயக்குநர் பயன்படுத்தி இருக்கும் உத்தி.. புத்திசாலித்தனமாகவும், புதுமையாகவும் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இதற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரல் வலு சேர்த்திருக்கிறது.

சத்யா எனும் நாயகனின் கதாபாத்திரம் கோழையாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. அவர் தனக்கு கிடைத்திருக்கும் பிரத்தியேக சக்தியை பற்றி இறுதிவரை புரிந்து கொள்ளாமல் இருப்பது திரைக்கதையின் பலவீனமாகவே கருதப்படுகிறது.

மக்கள் பிரச்சினையை தீர்ப்பவன் தான் மாவீரன் என்று சொல்ல வரும் இயக்குநர்.. அதனை அழுத்தமாக சொல்லவில்லையோ...! என்ற எண்ணமும் பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது.

படத்திற்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, மக்கள் செல்வனின் குரல், பின்னணி இசை, கிறாபிக்ஸ்.. என அனைத்து தொழில்நுட்பங்களும் கை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்பட வைக்கிறது.

மாவீரன்- வீரமே ஜெயம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்