கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் அண்மையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், சிரிய தரப்பால் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில் சிரியாவிற்கு மீண்டும் இராணுவ படைகளை அனுப்புவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

 

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு, ரஷ்யா ஆதரவளித்தது. மேலும் ரஷ்ய விமானப்படையின் அதிரடியான தொடர் தாக்குதல்களால், கிளர்ச்சியாளர்களின் தலைமையகமாக செயற்பட்ட அலெப்போ நகரை ஜனாதிபதி தரப்பு கைப்பற்றியது. 

இந்நிலையில் சிரியாவில் நிலைகொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் அனைத்தும் ரஷ்யாவால் மீள பெறப்பட்டன.

மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளின் ஏற்பாட்டில் ஜனாதிபதி அசாத் தரப்பிற்கும், அந்நாட்டு கிளர்ச்சியாளர்க்களுக்குமிடையே, கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. குறித்த பேச்சுவார்த்தையில்  எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

அதனால் சிரியாவுக்கு மீண்டும் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்ப ரஷ்யா முடிவு செய்திருப்பதாகவும், இச்சூழல் மீண்டும் சிரியாவில் உள்நாட்டுப் போரை தீவிரமடைய செய்யும் சாத்தியம் இருப்பதாகவும், ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.