'மாவீரன்' படத்திலும் இயக்குநரின் சமூக அக்கறை தொடர்கிறது- சிவகார்த்திகேயன்

Published By: Ponmalar

12 Jul, 2023 | 03:36 PM
image

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி 14ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மாவீரன்'. இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில், தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதன் போது பேசிய சிவகார்த்திகேயன், “இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மண்டேலா' படத்தை எம்முடைய குடும்ப உறுப்பினர்களுடன் கண்டு ரசித்தேன்.

அதன் பிறகு நண்பர் அருண் விஷ்வா- மடோனா அஸ்வின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மடோனா அஸ்வின் எழுதும் கதைகள் அனைத்தும் கடினமானதாக இருக்கும். ஆனால் அனைத்தையும் வெகுஜன மக்களும் பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாக்கி விடுவார்.

'மண்டேலா' படத்தில் எப்படி அவருடைய சமூக அக்கறை வெளிப்பட்டதோ.. அதேபோல் 'மாவீரன்' படத்திலும் அவருடைய சமூக அக்கறை இடம் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தில் பார்வையாளர்களிடம் கருத்தை எடுத்துச் சொல்லும் அளவிற்கு எந்த வசனங்களும் நேரடியாக இடம்பெறவில்லை. ஆனால் படம் முடிந்து திரையரங்கை விட்டு நீங்கள் செல்லும்போது ஒரு கருத்தை எடுத்துச் செல்வீர்கள்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜும், மடோனா அஸ்வினும் நண்பர்கள். இணைந்தும் பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு முறை லோகேஷ் கனகராஜ் எம்மிடம் பேசுகையில், 'சிவா நாங்கள் எல்லாம் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட் . ஆனால் மடோனா ஃபர்ஸ்ட் பென்ச். அவன் எதை செய்தாலும் திட்டமிட்டு தெளிவாக செய்யக்கூடிய நபர்'. என்றார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டுடென்ட்டாக இல்லாமல் ஹெட் மாஸ்டர் போல் பணியாற்றினார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு, சுனில் வர்மா, மோனிகா பிளஸ்ஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார். எக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சாந்தி டாக்கீஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் எதிர் வரும் 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்