லோகன் பரமசாமி
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே விடுதலைப் போராட்டக் குழுவில் இருந்து உருவாகிய தலைவர்களால் உருவாக்கப்பட்ட நாடுகளாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நிலை என்றும் பதட்ட நிலையில் உள்ளது. ஆனாலும் மொழி, கலாசாரம், பண்பாட்டு ரீதியாக இஸ்லாமாபாத்திற்கும் புது டில்லிக்கும் இடையில் மிக நீண்ட வரலாற்று தொடர்புகள் உள்ளன.
இவை மட்டும் அல்லாது பிரித்தானியர் காலத்தில் உருவாக்கப்பட்ட தொடர்ச்சியான புகையிரதப்பாதைகள், வீதி போக்கு வரத்துகள் இன்னமும் அடிப்படை போக்கு வரத்து தொடர்பு கட்டமைப்புகளை கொண்டுள்ளன. அது மட்டுமல்லாது இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்பு உறவு நிலையை உருவாக்கி கொள்ளுமிடத்து அவற்றின் பொருளாதார நிலை மிக செழிப்பானதாக மாறும் என்பது பொருளாதார நிபுணர்களின் பார்வையாகும்.
அதாவது இலங்கையின் பொருளாதார மீள் எழிச்சிக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார பங்கீடு எந்த அளவு முக்கியமானதோ அதேபோல பாகிஸ்தானிய பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவுடனான சுமூக உறவு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் இந்திய– பாகிஸ்தானிய உறவு நிலை குறித்த எந்த ஒரு விவகாரத்திலும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம் பெற்ற யுத்தங்களே எப்பொழுதும் பட்டியலிடப்படுவது வழமையாக உள்ளது.
குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் எந்த ஒரு பத்திரிகை தளத்தை எடுத்து நோக்கினாலும் இந்தியா – பாகிஸ்தான் குறித்த விவகாரத்தில் முரண்பாடுகளை முன்நிறுத்திய செய்திகள் வெளிவருவதே பொதுப்படையாக உள்ளன. இந்த நிலையை வைத்து நோக்குமிடத்து தெற்காசியாவில் உள்ள இவ்விரு தேசங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் நிலை யாருக்கு அதிக இலாபம் தர வல்லது என்பதை முக்கியமாக நோக்க வேண்டிய தேவை உணரப்படுகிறது.
உள்நாட்டில் தமது அரசியல் தளத்தை தக்க வைத்து கொள்ளும் வகையில் பொருளாதார பளுக்களை திசை திருப்பும் வகையில் சாதாரண இந்திய– பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் மத குரோத உணர்வை ஊட்டுவதன் மூலம் இடம் பெறும் ஒரு பதட்ட நிலையா அல்லது மேலைத்தேய நாடுகள் தமது பூகோள நலன்களை அடைந்து கொள்வதிலும் உலக தலைமைத்துவத்தை பேணும் வகையில் இந்த விவகாரத்தை தணிய விடாது பார்த்துக்கொள்ளும் ஒரு முரண் நிலையா அல்லது வடக்கு, தெற்கு கோட்பாட்டில் தெற்கு நாடுகளின் வளர்ச்சி வடக்கு நாடுகளின் வியாபார அபிவிருத்திகளுக்கு பாதகமானவை என்ற கருத்தா என்பவை முக்கியமானதாகும்.
தெற்காசியாவின் பதட்ட நிலைமை குறித்த விவகாரங்களில் சாமுவேல் ஹன்ரிங்ரன் , எட்வர்ட் சையீட் போன்ற உலகத் தர சர்வதேச அறிவாளர்கள் இவ்விவகாரங்களில் ஆழமாக ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
இத்தகைய ஆய்வுகளின் அடிப்படையில் தற்காலத்திற்கு ஏற்ப அரசுகளின் நகர்வுகளை முன்வைத்து பார்க்கும் பொழுது வல்லரசுகளின் அடைப்படை நோக்கமும் தேவைகளும் என்றும் மாறுவதில்லை என்பதையே உணரக் கூடியதாக உள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பல்வேறு விவகாரங்களை பதட்ட நிலைக்கு ஏற்றதாக தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வசதிகள் பிற வல்லரசுகளுக்கு உள்ளது.
நில எல்லைக் கோட்டு விவகாரம், நீர் பங்கீட்டு விவகாரம், காற்று மாசடைதல் குறித்த விவகாரம் , கடல் எல்லைகளும் அத்து மீறல்களும் குறித்த விவகாரம் , பல்லாயிரம் அடி உயரத்தில் பனிமலை எல்லைகளில் ஏற்படக் கூடிய சர்ச்சைகள், காஷ்மீர் விவகாரம் என ஏராளம் சிக்கல்கள் இன்னமும் தீர்த்துக் கொள்ளாத நிலையில் உள்ளது. ஆக எந்த ஒரு அணுகுமுறையை எடுத்தாலும் அணு ஆயுத பலம் மிக்க இரு நாடுகளையும் சீண்டி விடக் கூடிய, எளிதில் உடைத்து விட கூடிய தன்மையே உள்ளது
சனத்தொகை பெருக்கத்தில் இந்தியா, சீன சனத்தொகை பெருக்க விகிதத்தை விஞ்சி விட்ட நிலை ஒன்று தற்பொழுது கவனத்தில் கொள்ளப்படுகிறது. சனத்தொகை பெருக்க விகிதத்திலான வளர்ச்சி இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவை உலக வல்லரசாக மாற்றும் என்பது இந்த பார்வையாகும்.
உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் தமது வளர்ச்சிக்கு தம்மிடம் ஏற்கனவே உள்ள குடித்தொகைக்கு கல்வி வசதி அளித்தல், சுகாதார மருத்தவ வசதிகள் செய்து கொடுத்தல், இளைப்பாறு ஊதியம் வழங்குதல் என பல்வேறு விவகாரங்களில் செலவுகள் அதிகம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு வரி அதிகரித்தல் ,பொருட்களின் விலைகளை அதிகரித்தல் போன்ற விவகாரங்கள் குடித்தொகை வளர்ச்சியில் தாக்கம் விளைவிப்பதாக கருதப்படுகிறது.
ஆனால், இந்திய சனத்தொகை வளர்ச்சி சர்வதேச மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுத்து கொள்ளும் வகையில் தனது மக்களை உலகம் முழுவதும் பரவ விடும் அதே வேளை புலம்பெயர் இந்தியர்களின் வருவாயை மையமாகக் கொண்டு உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்தும் போக்கை கொண்டுள்ளது. இது சர்வதேச அளவில் எழுந்துள்ள உழைப்பாளர்கள் தட்டுபாட்டை பயன்படுத்தி கொள்ளும் அதேவேளை இந்தியா உலக நாடுகளில் செல்வாக்கு செலுத்தும் ஒரு நிலையை உருவாக்கி வருகிறது.
ஆனால், இந்தியாவை ஜனநாயகத்தின் பெயரால், தாராள சந்தை பொருளாதார விழுமியங்களின் பெயரால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை மேலைத்தேயம் உக்தியாக வைத்திருப்பதை காணக் கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாது இந்தியாவை இராணுவ பாதுகாப்பு ரீதியாக கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக பாகிஸ்தானால் கருதப்படுகிறது.
பாகிஸ்தான் தனித்துவமாக என்றும் இயங்க முடியாத ஒரு நிலைக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தள்ளப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அதன் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே நிதி விவகாரத்தில் பல வல்லரசுகளிடம் உதவிகள் பெற்று தனது பொருளாதாரத்தை காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
சிறந்த நீர் செழிப்பையும் விவசாய நிலத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த போதிலும் நிர்வாகத் திறமை , ஊழல் , போன்றவற்றில் உள்ள பின்தங்கல்கள் காரணமாக இன்னமும் கடுமையான பொருளாதார பின்னடைவில் உள்ளது.
அத்துடன் பூகோள ரீதியாக பாகிஸ்தானின் இருப்பிடம் மத்திய ஆசிய நாடுகளையும் ஈரான் போன்ற நாடுகளையும் அணுகுவதற்கு ஏற்ற பின்தளமாக உள்ளது. பாகிஸ்தானிய இராணுவத்தினரின் செல்வாக்கு அதன் ஆட்சி நிர்வாகத்தில் மிக அழுத்தமாக உள்ளதுடன் இராணுவத்தின் அதிகாரத்தை ஆட்சி நிர்வாகத்தில் குறைப்பதற்கு எந்த ஆட்சித் தலைவர் முயற்சித்தாலும் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையை காணலாம்.
ஆக, இராணுவம் நேரடியாக வெளி நாட்டுத் தொடர்புகளை கொண்டிருப்பதடன். முக்கியமான பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளையும் இராணுவமே தனித்துவமாக கையாளும் நிலை உள்ளது.
இந்த வகையில் பாகிஸ்தானிய அரசுக்கும் இராணுவத்துக்கும் நிதி உதவி செய்யும் நாடுகளும் வல்லரசுகளும் பாகிஸ்தானை மாத்திரமல்லாது அதனூடாக இந்தியாவின் உள்நாட்டு அரசியலையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டவைகளாக உள்ளன.
இந்தியாவின் வளர்ச்சியை அதன் ஜனநாயக பிழைகள் ,மனித உரிமை குற்றங்கள், சிறுபான்மை மக்கள் மீதான மத நெருக்குதல்கள் போன்ற வற்றின் ஊடாக கையாளும் மேலைத்தேய அரசுகள் பாகிஸ்தானை நேரடியாக இராணுவ ரீதியாக கையாளுகிண்றன.
தெற்காசிய நிலப்பரப்பில் அமைதி நிலை உருவாக வேண்டுமாயின் இந்திய – பாகிஸ்தானிய நாடுகளுக்கு இடையில் மேலும் மேலும் வலுவான உறவு நிலை ஏற்படுவது அவசியமாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM