ஹரிகரன்
மீண்டும் கொழும்பு இலகு ரயில் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவைத் தீர்மானத்தின் ஊடாக, அரசாங்கம் பச்சைக்கொடியை காண்பித்திருக்கிறது.
அமைச்சரவைத் தீர்மானம் வெளியானதும், ஏதோ இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து விட்டது என்று அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள் பலர். உண்மை அதுவல்ல.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு இனிமேல் தான் ஜப்பானிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்த வேண்டும். அவர்களின் ஒப்புதலை பெற்றுக் கொள்ள வேண்டும். உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
அதற்குள்ளாகவே மீண்டும் இலகு ரயில் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது என்பது போல அரசாங்கம் கதைவிட ஆரம்பித்திருக்கிறது.
இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல, திட்டப்பணிகள் கூட நிறைவடையும் கட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறுக்கே புகுந்து தடுத்து நிறுத்திய திட்டம் தான் இது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், 2015 ஆம் ஆண்டு, ஜிகா எனப்படும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, 1.5 பில்லியன் டொலர் செலவில் மாலபே தொடக்கம், கோட்டை வரை இந்த இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்த இணக்கம் காணப்பட்டது. 15.7 கிலோ மீற்றர் வரையான குறித்த தூரத்துக்கிடையில் 16 ரயில் நிலையங்களை அமைத்து, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் சேவையை முன்னெடுக்கவும், நெரிசல் மிக்க நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் சேவையை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம், இலங்கைக்கு 1.5 பில்லியன் முதலீடு கிடைப்பதுடன், கொழும்பு நகர போக்குவரத்துச் சிக்கலும் தீர்க்கப்படும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 1.5 பில்லியன் டொலர் செலவில் இலகு ரயில் திட்டத்தை முன்னெடுப்பதற்கும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து, 500 மில்லியன் டொலர் செலவில் அபிவிருத்தி செய்வதற்கும், ஜப்பான் முன்வந்திருந்தது.
இதற்கான திட்ட ஆலோசனைப் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தான், குறித்த இரண்டு திட்டங்களும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2020 செப்டெம்பரில், அப்போதைய ஜனாதிபதியின் செயலாளரான பிபி.ஜயசுந்தர, "நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி பொருத்தமான போக்குவரத்து தீர்வை உருவாக்க முடியும் என்றும், இதனால் இலகு ரயில் திட்ட அலுவலகத்தை உடனடியாக மூடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் ஜப்பானுக்கு கடிதம் அனுப்பினார்.
இலகு ரயில் திட்டத்தில் 1.5 பில்லியன் டொலரை முதலீடு செய்யத் தயாராக இருந்தது ஜப்பான். அதற்கு மிக குறைந்தளவு வட்டியையே அறவிடும் வகையில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
ஆனால், இந்தக் கடனுக்கு அதிக வட்டியை ஜப்பான் வசூலிப்பதாகவும், அப்போது அரசாங்கத்தினால் குற்றம்சாட்டப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.
சீனாவின் தூண்டுதலின் பேரில் அல்லது சீனாவைத் திருப்திப்படுத்தும் நோக்கில் தான், ஜப்பானின் இலகு ரயில் திட்டம், இந்தியாவிடம் இருந்து கிழக்கு கொள்கலன் முனையத் திட்டம் என்பன பறிக்கப்பட்டன.
இந்த விவகாரங்களில், பூகோள அரசியலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
ஜப்பானின் இந்த திட்டத்தை கோட்டா அரசாங்கம் முறித்துக் கொண்டதன் மூலம், இலங்கை பெரிய இழப்புக்களைச் சந்தித்தது.
கொழும்பு போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வும் கிடைக்கவில்லை. 1.5 பில்லியன் டொலர் முதலீடும் வரவில்லை. வேறு பொருத்தமான திட்டத்தை முன்வைக்க அல்லது செயற்படுத்தவும் முடியவில்லை.
ஜப்பானுடனான உறவை முறித்துக் கொண்டதால், அந்த நாட்டு அரசாங்கம் இனிமேல் இலங்கையில் பாரிய முதலீடுகளைச் செய்வதில்லை என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது.
பொருளாதார நெருக்கடியின் போது கூட இலங்கைக்கு ஜப்பான் பெரியளவில் நிதியுதவிகளை வழங்க முன்வரவில்லை.
கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கத்தின் செயற்பாடு அந்தளவுக்கு ஜப்பானைக் காயப்படுத்தியிருந்தது.
ஆட்சி மாற்றத்தை அடுத்து, ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுடன் மீண்டும் உறவுகளை வலுப்படுத்த முயன்றார்.
அவர் கடந்த ஆண்டு செப்ரெம்பரில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றிருந்தார். அதற்குப் பின்னர் கடந்த மாதமும், அவர் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அவரது இந்தப் பயணங்கள், ஜப்பானுடன் மீண்டும் உறவுகளை பதுப்பித்துக் கொள்வது மற்றும், ஜப்பானிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தான்.
ஆனால், ஜப்பானோ இலங்கையில் இப்போதைக்கு முதலீடுகள் எதையும் செய்வதும் இல்லை, உதவிகளை வழங்குவதும் இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது.
இவ்வாறான நிலையில் தான் கடந்த மாதம் ஜப்பானியப் பயணத்தின் போது, இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியிருந்தார்.
இது இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான முன்முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
ஆனால், அப்போது, இலகு ரயில் திட்டத்தை மேற்கொள்ளுமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுவதற்கு அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர்கள் பலரும் கூறியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் தான் இந்த வாரம் அமைச்சரவையில், இந்த திட்டத்தை முன்னெடுக்க ஜப்பானுடன் சரியான தருணத்தில் பேச்சுக்களை முன்னெடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பேச்சுக்கள் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் ஊடாகத் தான் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஆயினும், ஜப்பானின் பிடி உடனடியாகத் தளருவதற்கான அறிகுறிகள் இன்னமும் வெளிப்படவில்லை.
ஜப்பானைப் பொறுத்தவரையில், ஆட்சி மாற்றங்களினால் பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் முதலீடுகள் மாற்றமடையக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இலகு ரயில் திட்டம் மற்றும் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டம் போன்றவற்றை கோட்டா அரசாங்கம் நிறுத்தியது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க கூடாது என்பதே ஜப்பானின் எதிர்பார்ப்பு. இதே நிலைமையை இந்தியாவும் எதிர்கொண்டது.
இந்தியாவின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல திட்டங்களை கோட்டா தடுத்து நிறுத்தியிருந்தார்.
ஆனால், பின்னர் அவரே தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு, மேற்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மஹிந்த ராஜபக் ஷ காலத்தில், கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், 2015இல் ஆட்சிக்கு வந்தவுடன், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அந்த திட்டத்தை இடைநிறுத்தியது.
மைத்திரி அரசாங்கத்துக்கு சீனா கொடுத்த நெருக்கடிகள், அழுத்தங்களை அடுத்து, ஆறு மாதங்களுக்குப் பின்னர், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
அதுபோலத் தான் இப்போது, இலகு ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டிய நிலை, இலங்கை அரசாங்கத்துக்கும் வந்திருக்கிறது.
எனினும், இந்தியாவும் சீனாவும் உடனடியாக மீளவும் தங்களின் திட்டங்களை ஆரம்பித்தது போல, ஜப்பான் செயற்படத் தயாராக இல்லை.
இலங்கையிடம் இருந்து ஜப்பான் உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறது.
அது எழுத்துமூலமான உத்தரவாதம் மாத்திரமல்ல, அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதமாகவும் இருக்க வேண்டும் என்பது தான் ஜப்பானின் நிலைப்பாடு.
பாரிய முதலீட்டு மற்றும் பொருளாதார திட்டங்கள் ஆட்சி மாற்றங்களால் பாதிக்கப்படக் கூடாது என்றும், அவ்வாறான நிலை ஏற்பட்டால், இரண்டு நாடுகளின் அரசாங்கங்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் ஜப்பான் அழுத்தம் கொடுக்கிறது.
இந்த விடயத்தை உள்ளீர்த்தால் மட்டுமே, இலகு ரயில் திட்டம் குறித்து பேசத் தயார் என ஜப்பான் கூறுகிறது.
ஜப்பானுடன், ரணில் விக்கிரமசிங்க இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், அரசாங்கம் விட்டுக்கொடுப்புக்கும் தயாராக வேண்டும், ஜப்பானின் நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும். இல்லையேல் இலகு ரயில் திட்டம், மீண்டும் கனவுத் திட்டமாகவே கலைந்து போகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM