ஏ.எல்.நிப்றாஸ்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற அரசியல் தலைவரன் தூரநோக்கினால் உதயமான மிகப் பெரும் கல்விக் கூடமாகும். தென்னந்தோப்பாகவும் நெற் களஞ்சியமாகவும் அப்போது காணப்பட்ட ஒரு நிலப்பரப்பை ஒரு தேசிய பல்கலைக்கழகமாக மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கையும் விடாமுயற்சியும் அவருக்கு இருந்தது.
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் வந்த அஷ்ரப், வான் பரப்பில் பறந்தவாறு இப்பல்கலைக்கழகத்தை லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் போலவும், ஒலுவில் களியோடை ஆற்றை லண்டனில் உள்ள ஒரு குறிப்பிட்ட நதியைப் போலவும் கற்பனை செய்து கொண்டதாக அவருடன் பயணித்த ஒருவர் சொன்னார்.
இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போல, வெறுமனே கற்பனை செய்து கொண்டு, வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டு வாழாவிருக்காமல் மர்ஹும் அஷ்ரப், தனது திட்டத்தை செயற்படுத்திக் காட்டினார். தனித்துவ அடையாள அரசியலால் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த ஒரேயொரு மிகப் பெரிய பொக்கிஷமாக இப் பல்கலைக்கழகத்தை கொள்ளலாம்.
பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாக இது அமைந்தால் போதும் என்று அவர் நினைக்கவில்லை. யுத்தமேகம் சூழ்ந்திருந்த அக்காலத்தில் இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்திலேயே பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்குவதுடன், சமூகம் சார்ந்த ஆய்வுப் பணிகள் இரவு பகலாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.
தென்னிலங்கையில் பல்கலைக்கழகங்களும் மாணவ சமூகமும் பெருந்தேசிய அரசியலில் மிக முக்கியமான ஒரு செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக உள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் கிழக்குப் பல்கலையும் தமிழர் அரசியலை வழிநடாத்துவதில் ஒரு பங்கினை வகிக்கின்றன.
அதேபோல், முஸ்லிம்களை மையப்படுத்தியதாக உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது குறிப்பாக முஸ்லிம் சமூக, அரசியல் செயற்பாட்டுத் தளங்களில் ஒரு பொறுப்புமிக்க வகிபாகத்தை வகிக்க வேண்டும் என்றும், அரசியலை மட்டுமன்றி இந்த சமூகத்தையும் கூட அறிவார்ந்த அடிப்படையில் வழிப்படுத்த முன்னிற்க வேண்டும் என்பதும் அஷ்ரபின் தூரநோக்காக இருந்தது.
அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட இப் பல்கலைக்கழகம் ஒன்றுமே சாதிக்கவில்லை என்று கூறிவிட முடியாது. அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் வேறு ஒன்று அல்லது இரண்டு அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் உதவியால் பௌதீக அடிப்படையில் வளர்ச்சி கண்டுள்ளதுடன் பல சாதனைகளையும் அடைவுகளையும் பெற்றிருக்கின்றது. பரிணாம வளர்ச்சி கண்டிருக்கின்றது.
ஆனால், அஷ்ரப் எதிர்பார்த்த இறுதி இலக்கை, தூரநோக்கை நோக்கி இப்பல்கலைக்கழகம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றதா என்பது மீளாய்வு செய்யப்பட வேண்டிய விடயமாகும். குறிப்பாக, ஆரம்பத்தில் சமூக, அரசியல் விடயங்களில் ஒரு வகிபாகத்தை இது எடுத்தது என்றாலும் பிற்காலத்தில் அதன் போக்கு இறங்கு முகமாகவே உள்ளது என்பது நோக்கர்களின் அபிப்பிராயமாகும்.
பட்டதாரிகள், கலாநிதிகள், டிப்ளோமாதாரிகள் ஆயிரக் கணக்கில் உருவாகியுள்ளனர். தம்மைச் சுற்றி மிகப் பெரிய ஒரு கல்வி வட்டத்தை தென்கிழக்குப் பல்கலை உருவாக்கியுள்ளது. உலக பல்கலைக்கழகங்களின் ஒரு இடத்தை பிடித்துள்ளது. இப் பல்கலைக்கழகம் இல்லையென்றால் பல முஸ்லிம், தமிழ் மாணவர்களுக்கு பல வாய்ப்புக்கள் கிடைக்காமலேயே போயிருக்கலாம்.
அந்த அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மார்தட்டிக் கொள்ளவும் பெருமை கொள்வதற்கும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவியலாது.
ஆனால், மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் என்ன தூரநோக்குடன் இத்தனை பாடுபட்டு இதனை நிறுவினாரோ அந்த வழித்தடத்தில் வெற்றிகரமாக இந்தப் பல்கலைகழகம் முன்னேறி இருக்கின்றதா, சமூகம் சார்ந்த பொறுப்பை சரிவர நிறைவேற்றி இருக்கின்றதா என்பதே பரிசீலனைக்குரிய விடயமாகும்.
குறிப்பிட்டுச் சொல்வதென்றால், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் சமூகத்தையும் அரசியல் ரீதியாக வழிப்படுத்துவதில் இப் பல்கலையின் வகிபாகம் இறங்குமுகமாக உள்ளது. ஆய்வு அடிப்படையில் சமூக முன்னேற்றத்திற்கு முன்னிற்பதிலும், அதன் விளைபயன்களை சாதாரண முஸ்லிம் மக்கள் அனுபவிப்பதிலும் இன்னும் காத்திரமாகச் செயற்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது
முஸ்லிம் சமூகத்தை அரசியல், சமூக ரீதியாக நெறிப்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை இப்பல்கலைக்கழக சமூகமும் அங்கிருந்து கற்று வெளியேறியவர்களும் கொண்டுள்ளனர். அதுதான் அஷ்ரபின் எதிர்பார்ப்பாகவும் இருந்ததெனலாம். ஆனால், யாழ் பல்கலைக்கழகம் தமிழர் அரசியலில் எடுக்கின்ற வகிபாகத்தை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் எடுக்க முடியாமல் போயுள்ளது.
ஆரம்பத்தில், ‘ஒலுவில் பிரகடனம்’ என்ற மிகப் பெரிய வரலாற்று நிகழ்வொன்றை இங்குள்ள மாணவர்கள் நடத்திக் காட்டினார்கள். முஸ்லிம்களுக்கு வெளியேயுள்ள சமூகங்கள் இதனைக் குறிப்பெடுத்து வைத்திருக்கின்றன. ஆனால், இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கவும் வழிப்படுத்தவும் முஸ்லிம்களுக்கு சரியாள அரசியலறிவை ஊட்டவும் கூட முடியாத நிலையிலேயே இந்தப் பல்கலைக்கழகம் இன்றிருக்கின்றது என்பதே நிதர்சனமாகும்.
உண்மையில் இது திட்டமிட்டு நடந்ததென்று கூறி விட முடியாது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. தேசிய பல்கலைக்கழகம் என்ற அடிப்படையில் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் வீதாசாரப் பங்கு அதிகரித்தமை, தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளின் அக்கறையற்ற தன்மை, பல்கலைக்கழக சமூகத்தை அரசியல்வாதிகள் மதிக்காத போக்கு உள்ளிட்ட பல யதார்த்தபூர்வ காரணங்கள் உள்ளன.
ஆனால், இதனையும் தாண்டி ஒரு முக்கிய காரணம், சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் கல்விசார் வினைத்திறனிலும் தொடர்ச்சியாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது என்பதே நமது அவதானிப்பாகும்.
அது, இப்பல்கலைக்கழகத்திற்கு உள்ளே இடம்பெறுகின்ற நெருக்கடிகளும், பல்கலைக்கழகத்தை சுற்றி எழுகின்ற சார்ச்சைகளும் ஆகும். பல்கலைக்கழக சமூகமும் முஸ்லிம் மக்களும் ஆத்திரப்படாமல் இதனை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியுள்ளது.
ஆரம்ப காலங்களில் தென்கிழக்குப் பல்கலையில் பணிபுரிவோரிடையே இருக்கின்ற பிரதேச வேற்றுமைகள் நல்லதல்ல என்று சாதாரண மக்களே பேசிக் கொண்டனர். ஆனால், இப்போது அது சற்றுக் குறைவடைந்திருந்தாலும், உபவேந்தரைச் சுற்றிய அல்லது நிர்வாகத்தை மையப்படுத்தியதான சர்ச்சைகள் மேலெழுந்து வருகின்றன.
இந்தப் பல்கலைக்கழகத்திலேயே பட்டம்பெற்று, விரிவுரையாளராகி, கலாநிதியாகிய ரமீஸ் அபூபக்கர் இப்போது இங்கு உபவேந்தராக இருக்கின்றார். உபவேந்தர் நியமன செயன்முறையின் அடிப்படையில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின் படி 2021ஆம் ஆண்டு இவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அண்மைக்காலமாக அவர் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவர் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை பிரதி பண்ணப்பட்டது என்றும், அவரது நியமனம் முறையற்றது என்றும், அவர் முறையற்ற நியமனங்களை வழங்குகின்றார் என்பது உள்ளிட்ட பல விமர்சனங்களை சிலர் சமூக வலைத்தனங்களில் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் ஊடக மாநாடு ஒன்றை நடாத்திய உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். தன் மீது முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் அபாண்டமானவை என்று அவர் கூறியுள்ளார்.
உபவேந்தருக்கு எதிரான அழுத்தங்களின் உச்சக்கட்டமாக, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதற்காக அவர் தயாராகிக் கொண்டிருந்த கடைசித் தருணத்தில் அவரது விடுமுறை இரத்துச் செய்யப்பட்டது. அத்துடன் அசாத் சாலி உள்ளிட்ட ஓரிரு அரசியல்வாதிகளும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அதன் பின்னரே அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தனித்தனியாக மறுத்தார்.
தென்கிழக்குப் பல்கலையில் மாணவர்களிடையே முறுகலோ விரிவுரையாளர்களிடையே முரண்பாடுகளோ அல்லது வேறு சர்ச்சைகளோ ஏற்பட்டது மிகக் குறைவாகும். ஆனால், உபவேந்தரை மையமாகக் கொண்ட சர்ச்சைகள் தொடர்கதையாக உள்ளன என்பதை முஸ்லிம் சமூகமும் பொறுப்பு வாய்ந்தவர்களும் கவனிக்க வேண்டும்.
இதற்கு முன்பிருந்த உபவேந்தர் நாஜிம் காலத்தில் விரிவுரையாளர் குழுவொன்று அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தது. அதுமட்டுமன்றி, முன்னாள் உபவேந்தர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பின்னணியில் இப்போது மட்டுமன்றி இதற்கு முன்னரும் தென்கிழக்கு பல்கலைக்கழக விவகாரம் பல தடவை பாராளுமன்றம் வரை பேசப்பட்டது.
இங்கு யார் சரி, யார் பிழை என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக இவ்வாறான தொடர் நெருக்கடிகளும் சர்ச்சைகளும் ஏதோ ஒரு அடிப்படையில் மறைமுகமாகவேனும் மாணவர்களின் கல்வியில் தாக்கம் செலுத்திக் கொண்டி ருக்கின்றன என்பதையே வலியுறுத்த விளைகின்றது.
சர்ச்சைகள் மட்டுமன்றி, இப்பல்கலைக் கழகத்தின் ஸ்தாபக நோக்கத்தை விளங்கிக் கொள்ளாமை, சமூக நலன்சார்ந்த பார்வை யின்மை, ஒன்றுபட்டுச் செயற்படாமை, ஊர் பாகுபாடு, ஒரு குறிப்பிட்ட வட் டத்திற்குள் மட்டும் செயற்படும் போக்கு என்பனவும் இந்தப் பல்கலைக்கழகத்தை முன்னேற்றத்தை தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை கூர்ந்து நோக்குவோர் புரிந்து கொள்வர்.
எனவே, தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சர்ச்சைககள் சுமுகமான அடிப்படையில் தீர்த்து வைக்கப்படுவதன் மூலம், செயற்றிறனான கல்விச் செயற்பாடு உறுதி செய்யப்படுவதுடன் மர்ஹும் அஷ்ரபின் கனவு வழித்தடத்திலும், காலத்தின் தேவைக்கேற்பமும் இவ்வளாகம் முன்னோக்கிச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். வேறொன்றுமில்லை!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM