(நேர்காணல் : அபிமன்யு)
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு இம்முறை போட்டியிடும் நால்வரில் ஒருவரான சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல் நம்பி வணிகமாணி (சிறப்பு), முதுதத்துவமாணி மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளைப் பூர்த்திசெய்திருப்பதுடன் தற்போது தனது சுயவிருப்பின்பேரில் தமிழ் முதுகலைமாணி பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகின்றார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக்கற்கைகள் மற்றும் வணிகப்பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராகப் பணியாற்றிவரும் வேல் நம்பி, அவரது கடந்த 28 வருட கால சேவையில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையான 9 ஆண்டுகள் முகாமைத்துவக்கற்கைகள் மற்றும் வணிகப்பிரிவின் பீடாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். அவரது பதவிக்காலத்தில் முதுகலைமாணி பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டமை, முதலாவது சர்வதேச மாநாடு நடத்தப்பட்டமை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு வழிகளிலும் வணிகபீடம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
அதுமாத்திரமன்றி யாழ். பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையின் தலைவர், சிரேஷ்ட மாணவ ஆலோசகர், சமூக நல்லிணக்க செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர், பீட ஆய்வுக்குழுவின் தலைவர் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு தலைமைப்பதவிகளை வகித்த அவர், தற்போது அவரது 56 ஆவது வயதில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிடுகின்றார்.
கல்வியியல் ரீதியிலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் யாழ். பல்கலைக்கழகத்தை முன்நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற முனைப்புடன் சேவையாற்றிவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல் நம்பி, இம்முறை துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான காரணம் குறித்தும், அப்பதவிக்குத் தெரிவானால் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கும் திட்டங்கள் குறித்தும் எம்மோடு பகிர்ந்துகொண்டார்.
கேள்வி :- நீங்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தெரிவானால், அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்திய உங்கள் திட்டங்கள் என்ன?
பதில் :- அனைத்து விதங்களிலும் பல்கலைக்கழகத்தின் மேம்பாடே எனது இலக்காக இருக்கின்றது. குறிப்பாக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியலில் தற்போது 8 ஆவது இடத்திலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை முதலிடத்துக்குக் கொண்டுவரவேண்டும். அதனை முன்னிறுத்தி கற்றல் - கற்பித்தல், ஆய்வு மற்றும் சமூக செயற்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளேன். யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையுடன் தொடர்புபட்ட மனிதவளத்தின் இயலுமையை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாகக் கற்பித்தலின் செயற்திறனை மேம்படுத்த எதிர்பார்க்கின்றேன். அதேபோன்று ஆய்வைப் பொறுத்தமட்டில் தரமான வெளியீடுகள் மற்றும் பிராந்திய ரீதியிலான ஆய்வுகளில் விசேட கவனம்செலுத்த வேண்டியுள்ளது.
கேள்வி :- பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான தற்கொலைகள் அதிகரித்துவரும் தற்கால சூழலில், கல்விப்பாடவிதான செயற்பாடுகள் சார்ந்தும், ஏனைய புறக்காரணிகளின் விளைவாகவும் மாணவர்கள் முகங்கொடுத்துவரும் உளவியல் அழுத்தங்களை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?
பதில் :- நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வருகைதரும் மாணவர்கள் பலதரப்பட்ட குடும்ப மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
எனவே நீங்கள் கூறுவதைப்போன்று கல்விப்பாடவிதானங்களாலும் ஏனைய பல்வேறு புறக்காரணிகளாலும் மாணவர்கள் உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றன. சீரான உளவியல் ஆலோசனை வழங்கலின் மூலமே இதனைக் கையாளவேண்டும். பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு பீடங்களுக்கும் மாணவர்களுக்கான ஆலோசனை வழங்கலுக்கென குறித்தளவிலானோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது வெறுமனே பெயரளவிலான நடைமுறையாக இருப்பதைவிட, மாணவர்கள் உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும்போது தாமாக முன்வந்து அதுபற்றி இந்த ஆலோசகர்களிடம் பகிரக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும். அதேபோன்று மாணவரொருவர் ஏதேனும் பிரச்சினையிலோ அல்லது அழுத்தத்திலோ உள்ளபோது, அதனைக் கண்டறியக்கூடிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய இயலுமை ஆசிரியர்களிடம் இருக்கவேண்டும்.
மேலும் மாணவர்கள் கல்வி தவிர்ந்த ஏனைய புறக்காரணிகளால் அழுத்தங்களுக்கு உள்ளாகும் பட்சத்தில், அதனைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடு உள்ளது. எனவே மாணவர்களை கல்வியில் மாத்திரமன்றி, அதனுடன் இணைந்த ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும், நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தவேண்டும். அவற்றில் மாணவர்கள் அதிக ஈடுபாடு காண்பிக்கும்போது ஏனைய பிரச்சினைகளைக் கையாள்வது இலகுவானதாக மாறிவிடும்.
அதுமாத்திரமன்றி இவ்வாறான நிகழ்வுகளின்போது அழுத்தங்களுக்கு உள்ளான மாணவர்கள் ஏனைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நெருங்குவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதன்மூலம் அம்மாணவர்களை அடையாளங்காண்பதும் சுலமானதாகிவிடும்.
கேள்வி :- கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் நெருங்கும்போது யாழ். பல்கலைக்கழகம் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறுவதை அவதானித்திருக்கிறோம். பல்கலைக்கழக சூழலில் இனநல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான உங்களது முயற்சிகள் எவ்வாறானவையாக இருக்கும்?
பதில் :- இது மிக முக்கியமான கேள்வி என்பதுடன் பல்கலைக்கழத்தைப் பொறுத்தமட்டில் விசேடமாகக் கவனம்செலுத்தப்படவேண்டிய விடயமும் ஆகும்.
சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு சமூக ஒருமைப்பாடு மற்றும் கலாசாரப்பல்வகைமை ஆகிய இரண்டும் இன்றியமையாதவை என்பதுடன் நானும் அவற்றையே வலியுறுத்துகின்றேன். அதனை முன்னிறுத்தி உலக வங்கியின் நிதியுதவியின்கீழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டத்தில் நானும் உள்வாங்கப்பட்டிருந்தேன்.
அந்த செயற்திட்டத்தின் ஒரு கூறான இன நல்லிணக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் என்ற பிரிவுக்கான ஒருங்கிணைப்பாளராக பல்கலைக்கழக மூதவை (செனெட்) என்னை நியமனம் செய்திருந்தது. இனம், மதம், மொழி போன்றவற்றை ஒருவரிடமிருந்து பிரிக்கமுடியாது. அது ஒருவரின் பிறப்புடன் வருபவை. ஆனால் எத்தகைய இனம், மதம், மொழியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதிக்கின்ற, ஏற்றுக்கொள்கின்ற சூழலை உருவாக்குவதே தற்போதைய தேவைப்பாடாக இருக்கின்றது.
கேள்வி :- இன்றளவிலே நாட்டின் பொருளாதார நெருக்கடி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், பெரும்பாலான மாணவர்களின் இடைவிலகலுக்கும் காரணமாகியிருக்கின்றது. இதனை நீங்கள் எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?
பதில் :- ஆம், இது முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கின்றது. பல்வேறுபட்ட சமூகப்பின்னணியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வருகைதரும் மாணவர்களில் பெரும்பாலானோர் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். கல்வியைத் தொடராமல், இடைவிலகல் ஏற்படுவதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனைக் கையாள்வதற்கு உளவியல் ஆலோசனை வழங்கலை மேலும் வலுப்படுத்தவேண்டும்.
அதேபோன்று கடந்த காலத்தில் நன்நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட 'Community Kitchen' செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்துவதுடன், அதனூடாக தேவையுடைய மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி இலவச உணவு வழங்கல் செயற் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற எண்ணமும் என் மனதில் உண்டு.
மேலும் யாழ். பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கங்கள் வெளி நாடுகளில் மிக வலுவாக இயங்கி வருகின்றன. எனவே அவர்க ளுடன் இணைவதன் ஊடாகவும், நன் கொடையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாகவும் தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் மாணவர்களுக்கு அவசியமான உதவிகளைச் செய்யமுடியும்.
யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கான தெரிவுச்செயன்முறை எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்திய தனது தூரநோக்கையும் திட்டங்களையும் இவ்வாறு தெளிவுபடுத்திய சிரேஷ்ட பேராசிரியர் வேல் நம்பி, இம் மனநிலையை அனை வருக்கும் பொதுவானதாக மாற்றியமைத்து முன்நோக்கிப் பயணிப்பதே தனது விருப்பம் என்கிறார்.
(படம் - ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM