கபில்
ஒட்டகத்துக்கு இடம்கொடுத்த கதை போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை மாறியிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலளவில் செத்துப் போய் விட்டது.
தமிழ் அரசுக் கட்சி தனியாக வேட்புமனுத் தாக்கல் செய்வதாக அறிவிக்க, கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த ரெலோவும், புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை இணைத்துக் கொண்டு, தாங்களே உண்மையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அறிவித்துக் கொண்டன.
போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, 2008இல் அதேபோன்ற பெயருடன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) என தேர்தல்கள் செயலகத்தில், புளொட் அமைப்பு பதிவு செய்து வைத்திருந்த கட்சியை தங்களின் கூட்டணியாக, இந்த ஐந்து கட்சிகளும் அறிவித்தன. உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், இந்தக் கூட்டு சற்று உறக்கத்தில் இருந்தது.
அண்மையில் வவுனியாவில் நடத்திய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு தனித் தலைமை கிடையாது என்றும், ஐந்து கட்சிகளின் தலைவர்களுமே இணைத்தலைவர்களாகச் செயற்படுவார்கள் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த 30ஆம் திகதி நடந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு விண்ணப்பம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆர்.ராகவன் அந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறாா்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இப்போது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதாகவும், எனவே, தங்களின் கட்சியின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பதிவு செய்து தருமாறும், அவர் கோரியிருக்கிறார்.
அதனை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு, ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு அரசியல் கூட்டு நீண்டகாலமாக செயற்பட்டு வரும் நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு அந்தப் பெயரை பதிவு செய்து தர முடியாது என்று கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகியதும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இது பொய்யான செய்தி என்று மறுத்திருந்தார்.
"ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கவிருக்கிறோம்.
ஆனால், இன்னமும் அவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை, விரைவில் அதனை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்போம்" என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இன்னொரு இணைத்தலைவரான, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இதற்கு மாறான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரிமை கோரிய தங்களின் கடிதம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது என்பதை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கைப்பற்றுவதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இருவருமே இணைத் தலைவர்கள். இந்த நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில், அதன் பொதுச்செயலாளர் ராகவன் எடுக்கின்ற நடவடிக்கைகள் என்ன என்பது, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு கூட சரியாகத் தெரியவில்லை.
இதுதான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டுத் தலைமைத்துவத்தின் சீத்துவம்.
இணைத் தலைமைத்துவம் என்பது, எந்தளவுக்கு சிக்கலானது, குழப்பம் நிறைந்தது என்பதற்கு இந்த விவகாரம் ஒரு உதாரணம். புளொட் இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது.
இந்தளவுக்கும் புளொட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது அதன் ஸ்தாபக கட்சியும் இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளால் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்ட காலத்தில் புளொட்டை அதில் சேர்த்துக் கொள்ளவுமில்லை.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் புளொட் உள்வாங்கப்பட்டது.
இன்றைக்கு புளொட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முற்படுகிறது.
புளொட்டைச் சேர்ந்த, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் செயலாளர் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தங்களின் கட்சியை அங்கீகரிக்குமாறு கோரியிருக்கிறார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராகவும் அவரே மாறுவார்.
பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவருக்குத் தெரியாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பிய ராகவன், எவ்வாறு கூட்டு தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டுச் செயற்படுவார் என்ற கேள்வி இப்போது எழுகிறது.
இது ஒருபுறத்தில் இருக்க, ஐந்து கட்சிகளின் இந்தக் கூட்டணி இப்போது மற்றொரு விவகாரத்தில் சிக்கியிருக்கிறது.
நயினாமடுவில் சீனித் தொழிற்சாலையைக் கொண்டு வருவதற்கு ரெலோ இப்போது மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று சண்டித்தனமும் செய்கிறது.
ஆனால், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான, ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன, சீனித் தொழிற்சாலைத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.
இது பாரிய சிங்களக் குடியேற்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், தமிழர் பிரதேசத்தின் நீர்வளத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தக் கட்சிகள் கூறுகின்றன.
முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், தமிழரின் பொதுவான நலன்கள் விடயத்தில் காணப்பட்ட ஒற்றுமையை இப்போதுள்ள ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்குள் காண முடியவில்லை.
ஒரு அரசியல் கூட்டு என்பது தேர்தலுக்கான கூட்டாக மாத்திரம் இருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவ்வாறான ஒன்று தான்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டு அது.
சில சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவுகளும், அந்தக் கட்சி செலுத்திய மேலாண்மையும் தான், பிளவுகளுக்கு வழி கோலியது.
இந்த கசப்பான உண்மையை தெரிந்து கொண்டு தனிக் கூட்டை அமைத்துக் கொண்ட கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கற்றுக் கொண்ட பாடத்தை மறந்து விட்டன.
அரசியல் ரீதியாக மாத்திரமன்றி பொருளாதார ரீதியாகவும் தூர நோக்குடன செயற்பட வேண்டிய நிலையில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், எந்த தீர்க்க தரிசனமும் இன்றிச் செயற்படுகின்றன.
நயினாமடு சீனித் தொழிற்சாலை விவகாரத்தில், தமிழரின் நலன் பாதிக்கப்படுகிறதா இல்லையா என்ற தெளிவான நிலைப்பாட்டைக் கூட எடுக்க முடியாமல் இருக்கிறது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி.
இவ்வாறான கூட்டணியினால் எவ்வாறு தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்? அதனை எவ்வாறு சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல முடியும்?
சின்னச் சின்ன விடயங்களில் கூட ஒன்றுபட்டுச் செயற்பட முடியாமல், ஐந்து கட்சிகளின் கூட்டு இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தை புளொட் தன்வசப்படுத்திக் கொள்ள இரகசியமாக காய்களை நகர்த்துகிறது.
இவ்வாறான நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு என ஒரு தேசிய நிகழ்ச்சி நிரல் இருக்கிறதா அல்லது ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறதா என்ற சந்தேகமே மேலோங்குகிறது.
இந்த கண்ணோட்டத்துடன் நோக்கும் போது, தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலத்தை சிதைக்கும் திட்டங்களுக்கு, தமிழ் தேசிய கட்சிகளே துணை போகின்றனவோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM