ஆரோக்கியமளிக்கும் புனித தீர்த்தத்தை நாமே தயாரிக்கலாமா...!

Published By: Ponmalar

08 Jul, 2023 | 04:52 PM
image

இன்றைய திகதியிலும் எம்மில் பலர் வட இந்தியாவில் உள்ள புனித தலமான கங்கை நதியின் நீரை அஞ்சல் வழியாகவோ அல்லது நாம் பயணம் மேற்கொள்ளும் போதோ அல்லது எம்முடைய உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கங்கைக்கு சென்று வழிபட்டு திரும்பும் போது புனித நீரை பரிசாக எமக்கு வழங்கி இருப்பர். புனித நீர் எம்முடைய இல்லங்களில் உள்ள பூஜையறையில் இருக்கும் வரை.. 

பூஜையறை மட்டுமல்லாமல் எம்முடைய இல்லம் முழுவதும் நேர்நிலையான அதிர்வலைகள் இருந்து கொண்டே இருக்கும். சூழல் காரணமாகவோ அல்லது விவரிக்க இயலாத காரணத்திற்காகவோ இத்தகைய புனித நீரை நாம் பயன்படுத்தாமல் தவறவிட்டிருந்தால்.., அதற்காக வருத்தப்பட வேண்டாம். எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் புனித தீர்த்தத்தை எம்முடைய இல்லங்களில் நாமே தயாரிக்கும் அரிய முறை ஒன்றை சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புனித தீர்த்தம் காயகற்ப சஞ்சீவியை போல் எமக்கு ஏற்படும் பற்பல நோய்களை நீக்கி சுகம் அளிக்கும் குணத்தையும் கொண்டது என்பதால், இதனை நாம் ஒரு முறை தயாரித்து அதன் பயனை உணர்வோம்.

இதற்கு தேவையான பொருட்கள்...

ஏலக்காய்

கருவாப் பட்டை

வால் மிளகு

ஜாதி பத்திரி

பச்சைக் கற்பூரம்

முதல் நான்கு பொருட்களில் ஒவ்வொன்றிலும் ஒரு குறிப்பிட்ட ஒரே அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் கால்பங்கு அளவிற்கு பச்சை கற்பூரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதல் நான்கு பொருட்களை தெரிவு செய்த அளவுகளில் எடுத்து வைத்துக்கொண்டு, அதனை உலர்த்தி இடித்து பொடியாக மாற்றி வைத்துக் கொள்ளவும். இதன் பிறகு பச்சை கற்பூரத்தை பொடியாக ஆக்கி, இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை ஒரு போத்தலில் பதனமிட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

இந்த பொடியை சிறிதளவு எடுத்து ஒரு தாமிர கோப்பையில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து, எதையும் அருந்தாமலும், சாப்பிடாமலும் பூஜை முடிந்த உடன், இந்த புனித தீர்த்தத்தை அருந்த வேண்டும். இதனால் எம்முள் இருக்கும் சகல நோய்களும் விலகி, உடல் வலிமை பெறும்.

சிவனை வழிபடுபவர்கள் இதனுடன் வில்வ இலையையும் இணைத்து அருந்தலாம்.

பெருமாளை வழிபடுபவர்கள் இதனுடன் துளசி இலையையும் இணைத்து அருந்தலாம்.

இந்த புனித தீர்த்தத்தை அருந்திய பிறகு இதயம், இரைப்பை வலிமை அடையும். கண்களைப் பற்றிய கோளாறு நீங்கும். நரம்பு தளர்ச்சி, சளி தொல்லை, சுவாசக் கோளாறு ஆகியவை நீங்கும். குருதி சுத்தமடையும். பித்தத்துடன் தொடர்புடைய குறைபாடுகள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய் கசப்பு, வயிற்று வலி, நெஞ்சக வலி போன்றவை நீங்கும். இந்த மருந்து சஞ்சீவி முறையிலான மருந்தாகும். இதனை தொடர்ந்து அருந்தும் போது உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதை உங்களால் உணர இயலும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right