உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தின் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல் : துன்புறுத்தும் செயல் என்கிறார் அம்பிகா

08 Jul, 2023 | 05:07 PM
image

(நா.தனுஜா)

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தமக்குத் தேவையில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறிவரும் நிலையில், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தின் முக்கிய பதவிகளுக்கு அரசாங்கத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமையானது வளங்களை வீணடிக்கின்ற, பாதிக்கப்பட்ட மக்களை துன்புறுத்துகின்ற செயல் என்று சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் சாடியுள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதன் ஓரங்கமாக அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தின் முக்கிய 4 பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை ஆரம்பித்துவைப்பதற்கான தயாரிப்புப்பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு இந்த இடைக்கால செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், இத்தயாரிப்புப்பணிகள் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இயங்குவதற்கு அவசியமான நடைமுறைகளைத் தயாரித்தல், அவசியமான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களைத் தயாரித்தல், அவசியமான தொழில்நுட்ப உதவிகளை அடையாளங்காணல் என்பவற்றை உள்ளடக்கியிருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தின் சட்ட மற்றும் கொள்கைப்பிரிவின் தலைவர் (முழுநேர அடிப்படை), தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் (பகுதிநேர அடிப்படை), பொதுமக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் (பகுதிநேர அடிப்படை) மற்றும் சட்டப்பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் (முழுநேர அடிப்படை) ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதுடன் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் எதிர்பார்க்கப்படும் கல்வித்தகைமைகள் மற்றும் தொழில் அனுபவம் குறித்த விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்ட 4 பதவிகளுக்கான சம்பளம் முறையே 350 000 ரூபா, 190 000 ரூபா, 190 000 ரூபா, 250 000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும், மாறாக சர்வதேசப் பொறிமுறையின் ஊடாகத் தமக்குரிய நீதியைப் பெற்றுத்தருமாறும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். அதுமாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் தொடர்பில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனும் முறையான கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படாத பின்னணியில் அப்பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தின் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை அரசாங்கம் கோரியிருப்பது கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

'உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தமக்குத் தேவையில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர். கடந்தகாலங்களில் இயங்கிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறைகளால் முன்மொழியப்பட்ட நூற்றுக்கணக்கான பரிந்துரைகள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவ்வாறிருந்தும்கூட இவ்வாறானதொரு முறையில் வளங்களை வீணடிப்பதிலும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மீளத்துன்புறுத்துவதிலும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இயங்குகின்றது' என்று சட்டத்தரணியும்,  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் சாடியுள்ளார்.

மேலும் அரசாங்கம் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் அது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் அரசுக்கும் இடையில் முறிவடைந்த சமூகத்தொடர்புகளை மீளக்கட்டியெழுப்புவதற்கும் வழிகோலுவதுடன், அதன்மூலமே 50 சதவீதமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இப்பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளக்கொடுப்பனவு வழமையான அரச கொடுப்பனவு மட்டத்துக்கு அமைவானதாக இல்லை என்றும், தான் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில் மாதாந்தம் 98,000 ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எனவே இது நன்கொடையாளர்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் கட்டமைப்பு போல் தெரிவதாகவும், இதற்கு நிதியளிக்கும் நன்கொடையாளர் யார் என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் : வீதியில்...

2024-06-19 03:27:32
news-image

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த்...

2024-06-19 02:29:31
news-image

அதிக வருமானம் ஈட்டுவோருக்கே வாடகை வரி ...

2024-06-19 02:26:15
news-image

தெரிவுக்குழு அமைப்பதில் உடன்பாடு இல்லை; எதிர்க்கட்சித்...

2024-06-19 02:18:38
news-image

கடல் நீரில் மூழ்கிய இளைஞன்; ஆபத்தான...

2024-06-19 02:13:43
news-image

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய...

2024-06-18 15:21:30
news-image

ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த...

2024-06-19 01:28:05
news-image

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது...

2024-06-18 15:08:11
news-image

களுபோவில வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மனித பாவனைக்குதவாத...

2024-06-18 21:41:13
news-image

இலங்கை வரவுள்ள சீன இராணுவ மருத்துவக்...

2024-06-18 14:47:35
news-image

கோட்டாவின் பாவத்தை ரணில் தூய்மைப்படுத்துகிறார் -...

2024-06-18 17:27:30
news-image

பௌத்த மதத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும்...

2024-06-18 20:03:37