இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் ஓரிலக்கப்பெறுமதியை எட்டும் என்கிறார் ஆளுநர்

Published By: Vishnu

06 Jul, 2023 | 08:47 PM
image

(நா.தனுஜா)

அண்மையகாலங்களில் பணவீக்கத்தில் மிகவேகமான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதன் விளைவாக, வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்கள் முறையே 11 மற்றும் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் இவ்வருடத்துக்கான ஐந்தாவது கூட்டம் புதன்கிழமை (5) நடைபெற்றது.

இக்கூட்டத்திலேயே மேற்கூறப்பட்டவாறு கொள்கை வட்டிவீதங்களை மேலும் 200 அடிப்படைப்புள்ளிகளால் குறைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், அத்தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு  வியாழக்கிழமை (6) கொழும்பில் அமைந்துள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

 அதன்படி இதுவரை முறையே 13 சதவீதமாகவும், 14 சதவீதமாகவும் காணப்பட்ட துணைநில் வைப்புவசதிவீதம் மற்றும் துணைநில் கடன்வசதிவீதம் என்பன மேலும் 200 அடிப்படைப்புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகத்துரிதமான பணவீக்க வீழ்ச்சி உள்ளிட்ட அண்மையகால நிலைவரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் இதனூடாக நடுத்தரகாலத்தில் பணவீக்கத்தை ஓரிலக்கப்பெறுமதிக்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இந்த நாணயக்கொள்கைத் தளர்வின் ஊடாகக் கிடைக்கப்பெறும் நன்மையை பொதுமக்களுக்கும் வணிகங்களுக்கும் பெற்றுக்கொடுக்குமாறு வங்கி மற்றும் நிதியியல் துறையிடம் மத்திய வங்கி வேண்டுகோள்விடுத்துள்ளது. இல்லாவிடின் வட்டிவீதங்களைக் குறைப்பதற்குத் தாம் தலையீடு செய்யவேண்டியேற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

 மேலும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் பணவீக்கம் இம்மாத இறுதிக்குள் ஓரிலக்கப்பெறுமதியை எட்டும் எனவும், நடுத்தர காலத்தில் அது 5 - 7 சதவீதம் எனும் நிலையான பெறுமதியை அடையும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. இறுக்கமான நாணய மற்றும் நிதிக்கொள்கையினால் தூண்டப்பட்ட இப்பணவீக்க வீழ்ச்சி செயன்முறை உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் வீழச்சியை ஏற்படுத்தக்கூடுமெனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. 

அதேபோன்று உள்ளகப் பொருளாதார செயற்பாடுகள் இவ்வருடத்தின் பிற்பகுதியில் படிபடிப்படியாக மீட்சியடையும் என்றும், அது நடுத்தரகாலத்தில் பொருளாதாரம் அதன் இயலுமைக்கேற்ப உச்ச வளர்ச்சியை அடைந்துகொள்ள உதவும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, வெளிநாட்டுத்துறையின் மீண்டெழும் தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இது உள்ளகப் பொருளாதார மீட்சி செயன்முறைக்குக் குறிப்பிடத்தக்களவில் பங்களிப்புச் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த சில மாதங்களில் வெளிநாட்டில் பணிபுரிவோரின் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன மூலமான வருமானம் அதிகரித்திருப்பதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 குறிப்பாகக் கடந்த மேமாதத்துடன் முடிவுக்கு வந்த 5 மாதகாலப்பகுதியில் வர்த்தகப்பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு உள்ளக வெளிநாட்டு நாணயமாற்று சந்தையின் திரவத்தன்மை நிலையும் கடந்த சில மாதங்களாக முன்னேற்றமடைந்துவருகின்றது. அதன்படி இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சுமார் 18.5 சதவீதத்தினால் உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறிய விடயங்கள் வருமாறு: 

ஆரம்பத்தில் உள்ளகக் கடன்மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என்று கூறப்பட்டபோதிலும், இதுகுறித்த தீர்மானம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நாம் சர்வதேச கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஆரம்பித்தோம்.

எனவே அவர்கள் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு முன்னதாக, அதில் உள்ளக ரீதியில் எமது உயர்வான பங்களிப்பை எதிர்பார்த்தார்கள். ஆகவே நாம் உள்ளகக் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்குத் தீர்மானித்ததுடன், அதனை முன்னிறுத்தி சிறந்ததொரு மறுசீரமைப்புச் செயற்திட்டத்தை முன்மொழிந்திருக்கின்றோம்.

நாம் சர்வதேச கடன்வழங்குனர்களிடம் ஏன் 50 சதவீத கடன் தள்ளுபடியை (ஹெயார் கட்) கோரவில்லை என்று சிலர் கேட்கின்றார்கள். அவ்வாறு செய்திருந்தால், கடன்மறுசீரமைப்பு தொடர்பான இப்பேச்சுவார்த்தைகள் சில வருடகாலத்துக்கு இழுத்தடிக்கப்பட்டிருக்கும். எவ்வித பெறுபேறும் கிட்டியிருக்காது.

மாறாக இப்போது நாம் இணக்கப்பாட்டுடன்கூடிய உள்ளகக் கடன்மறுசீரமைப்புச் செயற்திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றோம். இதனை அடிப்படையாகக்கொண்டு சிறந்த முறையில் முன்நோக்கிப் பயணிக்கமுடியும் என்று நம்புகின்றோம்.

 அடுத்ததாக கொள்கை வட்டிவீதங்களைக் குறைப்பதற்கு நாணயச்சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்கள் எவையும் இல்லை. மாறாகக் கடந்த சில மாதங்களில் வீழ்ச்சியடைந்துசெல்லும் பணவீக்கத்தின் போக்கை அடிப்படையாகக்கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 மேலும் சர்வதேச கடன்மறுசீரமைப்பைப் பொறுத்தமட்டில் இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கடன்மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டவருகின்றன.

அதேபோன்று கண்காணிப்பாளர்களாகத் திகழக்கூடிய சீனா மற்றும் பாரிஸ் கிளப்பில் அங்கம்வகிக்காத ஏனைய நாடுகளுடனும், குறிப்பாக சீன எக்ஸிம் வங்கியுடனும் இருதரப்புப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடன்மறுசீரமைப்பு தொடர்பான தரவுகள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன.

இவ்விவகாரத்தில் நாம் எமது பங்கை இயலுமானவரை நிறைவேற்றியிருக்கின்றோம். எஞ்சியவை வெளிநாட்டுக் கடன்வழங்குனர்களின் கைகளிலேயே உள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49