இராணுவ வீரர்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக இராணுவத் தளபதிக்கே தெரிவிக்கும் வகையில் வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை இந்திய இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆயுதப் படையினர் தமது பணிகளில் தாம் எதிர்நோக்கும் உள்ளகச் சிக்கல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றித் தெரிவித்துள்ள இராணுவ அதிகாரியொருவர், “இராணுவ வீரர்கள் தாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைப் பற்றி முறையிடவும் அவற்றைத் தீர்த்துக்கொள்ளவும் பல வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. அவை பலன் தராதவிடத்து இந்த வட்ஸ்அப் இலக்கம் மூலம் நேரடியாக இராணுவத் தளபதிக்கே தெரிவிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த வட்ஸ்அப் இலக்கத்தில் புகார்கள் குவிந்துகொண்டே இருந்தால், தமது பிரச்சினை உரிய கவனம் பெறாது என்று இராணுவத்தினரும், இது பொதுவான இலக்கம் என்பதால், இராணுவத்தினர் மட்டுமன்றி உலகின் எந்த மூலையில் இருந்தும் கூட தேவையற்ற தகவல்கள் வரலாம் என்று பொதுமக்களும் கூறியுள்ளனர்.

மேலும், தேவையற்ற காணொளிக் காட்சிகள் கூட இதில் பகிரப்படலாம் என்பதால் இந்தத் திட்டம் தேவையில்லாத சிக்கல்களையே உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.